கடவுள்கள் கடலாடும் விழா
மாசி மாதப் பெüர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திர நாளில் கொண்டாடப்படும் விழா மாசி மகம். இவ்விழா "கடலாடும் விழா' என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
மாசி மாதப் பெüர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திர நாளில் கொண்டாடப்படும் விழா மாசி மகம். இவ்விழா "கடலாடும் விழா' என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
இந்நாளில்தான் உமையவள் தட்சனின் மகளாக அவதாரம் செய்தாள். இதேநாளில்தான் திருமால், வராக அவதாரம் எடுத்து பூமியை மீட்டார் என வைணவ இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இந்த நாளில்தான், முருகன் சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்தை உபதேசித்தார். இந்த நாள் சிவபெருமான் காமனை எரித்த நாளாகவும் கொண்டாடப்படுகிறது.
திருஞான சம்பந்தர் மாசி மகத் திருநாளைத் தனது பதிகத்தில் "கடலாடல்' என்னும் சொல்லினையும் இணைத்து,
"மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்
கடலாட்டுக் கண்டான் கபாலீச் சரமமர்ந்தான்...'
என்று பாடியிருப்பதால், 7-ஆம் நூற்றாண்டிலேயே "கடலாடல்' இருந்துள்ளது.
Advertisement
மாசித் திருநாளில் நீராடல் என்பது வருண பகவானோடு தொடர்புடையது. வருண பகவானுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டதால், சரீரம் கட்டப்பட்டு கடலில் வீசப்பட்டார். உலகம் வறட்சியால் பாதிக்கப்பட்டது. தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட, இறைவன் வருணனை மாசி மகத்தன்று விடுவித்தார்.
விடுதலை பெற்ற வருணன், தான் கடலில் இருந்த காலத்தில் சிவனின் அருள் பெற்றதால், அந்நாளில் தன்னைப் போன்று கடலில் வழிபடும் அனைவரும் உயர்வு பெற வேண்டுமென வரம் பெற்றான். அதனால் மாசி மகத்தன்று "கடல் நீராடல்' துவங்கியது.
வைணவ மரபில் மாசி மக வழிபாடும் கொண்டாடப்படுகிறது. திருமாலுக்குரிய மக நட்சத்திர நாளில் "தீர்த்தவாரி' என்னும் வழிபாட்டுமுறை பின்பற்றப்படுகிறது. 108 வைணவ திவ்ய தேசத்தில் ஒன்றான சிவகங்கை மாவட்டம், திருக்கோட்டியூரில் "திருவிளக்கெடுத்தல்' என்னும் வழிபாடு நடைபெறுகிறது.
பெருமாளிடம் வேண்டுதல் நிறைவேறியோர், திருக்குளத்தில் விளக்கேற்றி, ஏற்றிய விளக்கினை வீட்டுக்கு எடுத்துச் சென்று, பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்வர். மாசி மாதத்தில் சூரிய பகவான் கும்ப ராசியில் சஞ்சாரம் செய்வார். மக நட்சத்திரம் சிம்ம ராசிக்குரியது. அன்று சந்திரன் மக நட்சத்திரத்தில் சிம்ம ராசியில் சஞ்சரிப்பார். இந்நாளே "மாசி மகம்' எனப்படும். இத்தினத்தில் தீர்த்தோற்சவம் நடைபெறுவது வழக்கம். வட இந்தியாவில் "கும்பமேளா' என்ற பெயரில் சிறப்பாகக் கொண்டாடுகின்றார்கள்.
கும்பகோணத்தில் மகா மகக் குளத்தில், மாசி மகத்தன்று கங்கை, யமுனை, சரஸ்வதி, காவிரி, கோதாவரி, பொருநை போன்ற புண்ணிய நதிகள் எல்லாம் நீராடி தங்கள் பாவத்தினைப் போக்கிக் கொள்கின்றன எனப் புராணங்கள் குறிப்பிடுகின்றன.
திருச்செந்தூரில், இரண்டாம் வரகுணபாண்டியனின் (கி.பி.862) மூன்று அதிகாரிகள் 1400 பொற்காசுகளை மூலதனமாகக் கொண்டு பல விழாக்கள் நடத்தியதையும், அதில் ஒரு விழாவாக "மாசி மகம்' குறிக்கப்பட்டுள்ளளதையும் கல்வெட்டுகளில் காணலாம்.
இதேபோல் முதலாம் ராஜராஜ சோழன் காலத்தில் (கி.பி.1009) திருச்சி மாவட்டம், திருப்பராய்த்துறை மகாதேவர்க்கு மாசி மகத்தன்று பெருந்திருவமுது படைக்க நிலம் தந்ததும், முதலாம் ராஜேந்திர சோழனின் 4}ஆம் ஆட்சியாண்டில் (கி.பி.1016) நாகப்பட்டினத்தில், மாசி மக விழாவின் ஆறாம் நாள் செலவுகளுக்காக நிலமளித்ததும், முதலாம் குலோத்துங்க சோழனின் (கி.பி.1070}1126) தளபதி நரலோக வீரன் சிதம்பரம் கோயிலில் மாசிக் கடலாடலைப் பற்றியும், திருமறைக்காட்டில் ஏழு நாள் கொண்டாடப்பட்ட மாசித் திருநாள் பற்றியும், குடுமியான் மலையில் மாசி மக விழாவின்போது தெய்வங்கள் நீராடுவதையும், மண்டபம், தோப்புகளில் காட்சி தருவதையும், அத்தெய்வங்களுக்கு பெருந்திருவமுது படைக்கப்படும் மரபுகளையும் கல்வெட்டுச் செய்திகள் விளக்குகின்றன.
சென்னையில் மெரீனா கடற்கரையில், கபாலீஸ்வரர் உள்பட 7 சிவாலயங்கள், பார்த்தசாரதி பெருமாள், மாதவப் பெருமாள், எழும்பூர் சீனிவாசப் பெருமாள், திருவேற்காடு கருமாரியம்மன் உள்பட பல கோயில்களின் சுவாமிகள் வந்து கடல் நீராட்டலும், தீர்த்தவாரியும் செய்து செல்வார்கள். இதேபோல் எலியட்ஸ் கடற்கரையிலும் நடைபெறும்.
மாமல்லபுரம் கடற்கரையில் கருட வாகனத்தில் தலசயனப் பெருமாள், ஆதிவராகர் ஆகியோர் எழுந்தருள, திருவண்ணாமலை மாவட்டம், படைவீடு யோகராமர் மற்றும் அருகில் உள்ள திருக்கோயில் சுவாமிகளும் வந்து தீர்த்தவாரி நடைபெறும். புதுச்சேரியிலும் கடலாடல் நடைபெறும். கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் திருவகீந்தபுரம் பெருமாள், கடலூர் பாடலீசுவரர், திருமலைராயன்பட்டினம் கடற்கரையில், திருக்கண்ணபுரம் செüரிராஜப்பெருமாள், நாகப்பட்டினத்தில் செüந்தரராஜர்,நீலாகோயில் ஆவராணி அனந்தநாராயணர், சட்டையப்பர், நாகூர் நாகநாதர் ஆகியோர் கடற்கரைக்கு எழுந்தருளி, தீர்த்தவாரி நடைபெறும்.
இவ்வாண்டு குடந்தை மாசி மக தீர்த்தவாரி இன்றும் (பிப்.26), மாசி மக } கடலாட்டு தீர்த்தவாரி நாளையும் (சனிக்கிழமை) நடைபெறுகிறது.
இரா. இரகுநாதன்