வெள்ளிமணி

பிரியமான தம்பதிகளின் அடையாளம்!

கோயில் நகரம் என்றழைக்கப்படும் கும்பகோணத்தில் மட்டும் 188 ஆலயங்கள் உள்ளன.

DIN

கோயில் நகரம் என்றழைக்கப்படும் கும்பகோணத்தில் மட்டும் 188 ஆலயங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று ஆழ்வார்களால் பாடல் பெற்ற சாரங்கபாணி சுவாமி கோயில் ஆகும். காவிரிக்கரையை ஒட்டிய பஞ்ச ரங்க வைணவத் தலங்களில் இதுவும் ஒன்று. பதினோறு நிலைகளுடன் கூடிய மிக உயரமான ராஜகோபுரம் பிரமிக்க வைக்கும்; கலை நயமிக்க சிற்பங்களைத் தன்னகத்தே கொண்டு விளங்குகிறது. இது தவிர ஐந்து கோபுரங்கள் உள்ளன.

தலவரலாறு: இங்குள்ள பொற்றாமரைக் குளக்கரையில் ஹேமரிஷி என்பவர், ஸ்ரீமன் நாராயணனை வேண்டி ஒரு யாகம் செய்தார். அவரது வேள்வியை மெச்சி நேரில் தோன்றிய நாராயணன் என்ன வரம் வேண்டுமென கேட்க, ""எனக்கு ஒரு பெண் குழந்தை வேண்டும்; அதோடு தாங்களே அவளை மணந்து என் மாப்பிள்ளையாக வேண்டும்'' என்று ஹேமரிஷி கேட்டார். 

"உன் ஆசையைப் பூர்த்தி செய்ய லக்ஷ்மியே பிறப்பாள்”என்று வரம் தந்தருளினார். அதன்படி, திருமகளும் பொற்றாமரைக் குளக்கரையில் கோமளவல்லி என்ற பெயருடன் பிறந்தாள். தற்போதுள்ள குரு சோமேஸ்வரன் கோயிலில் ஹேமரிஷியின் மகளாக வளர்ந்து வந்தாள். பருவமும் வந்தது, ரிஷிக்கு கொடுத்த வாக்கினை நிறைவேற்றத் திருவுளம் கொண்ட  திருமால், பன்னிரண்டு குதிரைகள், யானைகள் பூட்டிய ரதத்தில், வைகுண்டத்திலிருந்து "ஆராவமுதன்' என்ற திருநாமத்துடன் வந்திறங்கினார். கோமளவல்லியை முறைப்படி பெண் கேட்டு மணம் முடித்தார். 

மூலவர் சாரங்கம் என்ற வில்லை ஏந்தி இருப்பதால் "சாரங்கபாணி' என்று அழைக்கப்படுகிறார். தாயார் கோமளவல்லி மற்றும் ஹேமரிஷி அவர் அருகில் நின்ற நிலையிலும் அருளாட்சி செய்கிறார்கள். 
பெருமாளைத் தரிசிக்க இரண்டு வாசல்கள் உள்ளன; ஒன்று திறந்திருக்கும் போது மற்றொன்று மூடப்பட்டிருக்கும். பரத நாட்டியத்திலுள்ள 108 கரணங்களும் இக்கோயிலின் பிரகாரத்தில் சிலைகளாக வடிக்கப்பட்டுள்ளன.

மார்கழி உற்சவத்தின்போது பகல் பத்து} இராப்பத்து சேவையின் 9}ஆம் நாளன்று, சாரங்கபாணி ராஜாவுக்கு நாச்சியாரைப் போல் வேடமும், தாயாருக்கு சாரங்கபாணி ராஜாவைப் போல் வேடமுமிட்டு, இருவரது ஆபரணங்களையும் மாற்றிப் போட்டு அழகு பார்ப்பார்கள். இந்த அரிய காட்சி வேறெந்த கோயிலிலும் காணமுடியாத ஒன்றாகும். இதில் ஒளிந்துள்ள பொருள், கருத்தொருமித்த தம்பதிகளின் அன்யோன்யத்தை வெளிப்படுத்துவதே ஆகும். புத்தாண்டில் மார்கழி }19 (ஜனவரி} 3) ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 8 மணிக்கு இந்த வேடம் மாற்றும் அற்புத நிகழ்வு நடைபெறவுள்ளது. 

பிரியமான தம்பதிகளின் அடையாளம் காண்போம்; பேரானந்தம் அடைவோம்.

-எஸ். எஸ். சீதாராமன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்னை மார்போடு சேர்த்தவளே... நிகிதா தத்தா!

மழையூரின் சாரலிலே... சனம் ஷெட்டி!

என்னை அடியோடு சாய்த்தவளே... கீர்த்தி சனோன்!

அன்பூரில் பூத்தவனே... அமேயா மேத்யூ!

ஜம்மு - காஷ்மீர் வனப்பகுதிகளில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை: 2 பேர் சுட்டுக்கொலை!

SCROLL FOR NEXT