சகிப்பும் பொறுமையும் அல்லாஹ்விற்கும் அவனின் தூதர்களுக்கும் மிக உவப்பானவை. அல்லாஹ் இறையச்சமுடையவர்களை நேசிக்கிறான் என்று வாசிக்கிறது வான்மறை குர்ஆனின் 3 - 76 ஆவது வசனம்.
இறையச்சம் என்பது எழில் மறை குர்ஆன் எடுத்தியம்பும் ஏற்ற கொள்கைகளைக் கடைப்பிடித்து காலந்தோறும் தோன்றிய இறைத்தூதர்கள் நடந்து காட்டிய வழியில் பிறழாது பேணி நடப்பதே.
அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும் சகிப்புத் தன்மை உடையவனாகவும் இருக்கிறான் என்று இயம்புகிறது இறைமறை குர்ஆனின் 2 - 235 ஆவது வசனம்.
மன்னிக்கும் மாண்புடைய அல்லாஹ் தவறு செய்பவர்களை உடனுக்குடன் தண்டிக்காது தவறைச் சகித்து சந்தர்ப்பம் கொடுத்து திருந்த வாய்ப்பு அளித்து, திருந்தினால் மனிதனின் தவறை மன்னித்து மறைக்கிறான்.
அல்லாஹ்வும் அவனின் தூதரும் விரும்பும் இரு நற்குணங்கள் சகிப்புத்தன்மையும் பொறுமையும் என்று நந்நபி (ஸல்) அவர்களின் நன்மொழியை அஹமது 28429 முஸ்லிம் 25 நூல்களில் காணலாம்.
நிச்சயமாக இப்ராஹீம் மிக்க சகிப்புத்தன்மை கொண்டவராகவும் மிக இளகிய மனம் உடையவராகவும் நம்மையே நோக்குபவராகவும் இருந்தார் என்று இயம்புகிறது 11 - 75 ஆவது வசனம்.
லூத் நபி காலத்தில் அந்நபி அவர்களின் நற்கொள்கையை ஏற்காது அற்ப வழியில் புறம்பாய் நடந்தோரையும் அழிக்காமல் பழிக்கும் பாவ செயலை விட்டு
திருத்தி, திருந்தி, பொருந்தி வாழ போதிக்க சொன்ன இப்ராஹீம் நபியவர்களின் சகிப்புத்தன்மையையும் தீயோரை அழிக்காமல் காத்து திருத்திட விழைந்த இளகிய மனத்தையும், இரக்க குணத்தையும், இறைவனிடமே மீள வேண்டும் என்ற மாளா உறுதியையும் இந்த வசனம் இயம்புகிறது.
சகிப்புத்தன்மை நற்குணங்களில் பொற்புடையது. அத்தன்மையால் முழுமைப்படுத்தியவரின் நன்மைகள் அதிகமாகும்.
அவரின் முயற்சிகளில் சகிப்புத்தன்மை வெற்றியை ஈட்டித்தரும். வென்ற பின் மதிப்பு உயரும். சகிப்புத் தன்மை உடையவர் எந்நிலையிலும் ஏற்றம் பெறுவர்.
அடுத்த நற்குணம் பொறுமை. ஒவ்வொன்றையும் நன்றாய் சிந்தித்து நிதானமாக செயல்பட்டால் செம்மை பெறலாம். விவேகம் இல்லாத வேகம் வீழ்த்திவிடும். நிதானத்திலும் மறுமையை மறக்கக்கூடாது.
சகிப்பும் பொறுமையும் ஆளுமையை அதிகரிக்கும். இப்பண்பை குடும்பத்தில் வெளிப்படுத்த வேண்டும். அண்டை அயலார்கள் இடமும் பணியாளர்கள் இடமும் இப்பண்புகளோடு பக்குவமாய் பழக வேண்டும்.
ஒவ்வொரு செயலிலும் இந்த பண்புகள் பளிச்சிட வேண்டும். மனிதர்களிடையே மனிதநேயம் பெருகும். ஒற்றுமை நிறைந்த சமுதாய கட்டமைப்பு உருவாகும். ஒருமைப்பாடு ஓங்கி நிற்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.