பெண்ணியம் போற்றிய பேராளன்!
இறைமகன் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையை, போதனைகளை எடுத்துக் கூறும் நான்கு நற்செய்திகளும், ஒருமுறை நான்காயிரம் பேருக்கும் மற்றொரு முறை ஐந்தாயிரம் பேருக்கும் அவர் தமது வல்லமையால் உணவளித்ததாகப் பேசுகிறது.
இறைமகன் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையை, போதனைகளை எடுத்துக் கூறும் நான்கு நற்செய்திகளும், ஒருமுறை நான்காயிரம் பேருக்கும் மற்றொரு முறை ஐந்தாயிரம் பேருக்கும் அவர் தமது வல்லமையால் உணவளித்ததாகப் பேசுகிறது.
அவ்வாறு உணவு உண்டவர்கள் பற்றிக் கூறும்போது ஆண்களின் எண்ணிக்கை என்னவென்று மட்டுமே சொல்லப்பட்டுள்ளது. பெண்கள் மதிப்பிற்குரியவர்கள் இல்லை என்பது அவர்களிடையே அன்றிருந்த மனநிலை.
ஆனால் இயேசுவோ தனது முன்னெடுப்பு ஒவ்வொன்றிலும் பெண்ணியத்தைப் பெரிதும் போற்றினார். அவர் செய்த முதல் புதுமை கானாவூர் திருமண வீட்டில்தான். அந்த அற்புதம் நிகழக் காரணமாக இருந்தவர் அவரது அன்னை மரியாதான்.
"மணப் பந்தியில் திராட்சை ரசம் தீர்ந்துவிட்டது' என்று விழா வீட்டாருக்காகப் பரிந்து, மாதா மரியா பேசியபோது "அம்மா, அதைப் பற்றி நாம் என்ன செய்ய முடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே!' என்றார் இயேசு (யோவா - 2:4).
அவரது ஆற்றலின் நேரம் ஆரம்பமாகிற்று என்று அன்னை உணர்த்தினார். வார்த்தையின் மகனான தேவன் தன் வல்லமையை வெளிப்படுத்தினார். இங்கே "அம்மா' என்பது தனது தாயினை சுட்டும் சொல்லாக மட்டும் பயன்படுத்தப்படவில்லை. பெண்களை மதிப்புடன் விளிக்கும் சொல்லேயாகும். அவர் தன் அன்னை என்பதற்காக மட்டுமல்ல; அந்தப் பரிந்துரையை எந்த மாதரசி செய்திருந்தாலும் அவரது முதல் புதுமை அங்கே அரங்கேறியிருக்கும்.
உடல் நலம் குன்றி இருந்தோரில் இயேசு முதலில் குணமாக்கியது சீமோன் பேதுருவின் மாமியாரைத்தான். அவரது பன்னிரு சீடர்களும் அவரது நற்செய்தியின் தூதுவர்களாக இருந்தார்கள். ஆனால் அவரது அன்னைக்கு இணையாக அவரை ஆதரித்தவர்கள் அன்பு மகளிரே. மார்த்தா, மரியா என்ற இரு சகோதரிகள் அவருக்குப் பெருந்தொண்டாற்றினர்.
அவர்களது சகோதரன் லாசர் இறந்தபோது இயேசு கண்ணீர் விட்டார். அவனை ஊரறிய கல்லறையினின்று உயிர் பெறச் செய்தார்.
இரக்கத்தின் வடிவமாகவும், இன்னலுற்றோரை ஆற்றுப்படுத்தும் அன்புருவாகவும் பெண்கள் இருந்தார்கள் என்பதை வேதாகமம் வெளிப்படுத்துகிறது. ஆம்! கல்வாரி நோக்கிய அவரது துயரப் பயணத்தில் அவருக்காக கண்ணீர் விட்டு, அழுது புலம்பியது ஜெருசலேம் நகரத்துப் பெண்களே என்பது வரலாறு!
அஞ்சாமையின் வடிவமாய் கரிசனத்தோடு அவரது திருமுகம் துடைத்தது வெரோனிகா என்னும் ஒரு வீரப்பெண்ணே! சிலுவை மரத்தடியில் அவரது மரணத்தின் முகவரியில் எஞ்சி நின்ற நால்வரில் மூவர் பெண்டிரே! அந்த மூவரது பெயரும் மரியாவே ஆகும். அவரது தாய் மரியா, குளோபாவின் மனைவி மரியா, மகதலா மரியா ஆகியோரே அவர்கள்!
தன் இறப்புக்குப் பின் தனை ஈன்ற தாய் தன்னந்தனியாளாய் நிற்பாளே என ஏங்கிக் கலங்கி, அவரது அன்புச்சீடர் என்று அறியப்பட்ட யோவானிடம் அன்னை மரியாவை ஒப்படைத்தார்.
பெண்ணியம் போற்றுதலும் இறைஞானம் என்னும் சொல்லுக்குள் அடங்கும் என்பதை இயேசு தன் வாழ்வின் வழி மெய்ப்பித்தார்..!