ஒரு மனித எலும்பு துர்நாற்றத்துடன் புழுக்கள் அரிக்கும் மாமிசப் பற்றில்லாமல் இருக்கிறது. அதை எச்சில் ஒழுக ஒரு நாய் மிகவும் ருசித்துக்கொண்டிருக்கிறது. அப்போது அது, தேவேந்திரனே பக்கத்தில் வந்து நின்றாலும் மதிக்காமல் தனக்குக் கிடைத்த பொருளையே பெரிதாகக் கருதுகிறது. அற்பமான ஜீவன் தனது அற்பத் தன்மையை அறிவதில்லை. அதுபோல மனிதர்கள் சிலருடைய வாழ்க்கை அற்பமானதாக அமைகிறது.
-பர்த்ருஹரியின் நீதி சதகம், 9.
வண்டுகள் பூக்களைப் படுக்கையாகக் கொண்டு வளமான சோலையில் உறங்கும், அங்கு இனிய கனிகள் ஏராளமாக இருக்கும்; காக்கைகள் அவற்றை உண்ணாமல் கசக்கும் வேப்பங்கனிகளையே விரும்பி உண்ணும்.
அதுபோல் அற்ப புத்தியுடையவர்கள் பிறரிடம் நல்ல குணங்கள் பல இருந்தாலும் அவற்றை விடுத்து, அவரிடம் உள்ள சிறிய குறைபாடுகளையே பெரிதுபடுத்தித் தூற்றித் திரிவார்கள்.
-சிவப்பிரகாசர், நன்னெறி-24
மலையில் மழை நீர் பெய்கிறது. அந்த நீர் பல கிளை நதிகளாகப் பிரிந்து ஒரே கடலைச் சென்றடைகிறது. அதுபோல் பல மதங்கள் இறைவனைப் பற்றிப் பேசினாலும், அவை ஒரே பரம்பொருளைச் சென்றடைகிறது.
-கம்ப ராமாயணம்
சாப்பிடுவது, உறங்குவது, இனப்பெருக்கம் செய்வது ஆகிய இந்த மூன்றையும் அளவுகோலாக வைத்துப் பார்த்தால் எல்லா உயிரினங்களும் ஒரே வகையைச் சார்ந்ததாகவே கருதப்படும்.
ஆனால் மனித இனத்துக்கும் மற்ற உயிரினங்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? மனிதன் தர்மத்தைக் கடைப்பிடிப்பதால், மற்றவைகளைக் காட்டிலும் உயர்ந்தவனாகக் கருதப்படுகிறான்.
-ஹாரிதர் மகரிஷி
பாம்பின் வாயில் அகப்பட்ட தேரை தப்பிக்க இயலாது. அதுபோல, இந்த உலகப்பற்றுகளில் சிக்கிக்கொண்டவர்கள் அவற்றிலிருந்து மீள முடியாது. அவ்வாறு மீள நினைப்பவர்கள் இறைவனைப் பற்றிக்கொள்ள வேண்டும்.
-பட்டினத்தார்
உலகப் பொருள்களின் மீது ஒரு சிறிது பற்று இருந்தாலும் இறைவனை அனுபூதியில் உணர முடியாது. நூலின் மிகவும் சிறிய இழை ஒன்று நீட்டிக்கொண்டிருந்தாலும், ஊசியின் காது வழியாக நூல் நுழைய முடியாது.
-பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர்
தன்னுடைய எல்லாச் செயல்களையும் பகவானுக்கு அர்ப்பணம் செய்வதும், பகவானை ஒரு விநாடி நேரம் மறக்க நேர்ந்தாலும் மிகவும் துன்பப்படுவதுமே பக்தியாகும்.
-நாரத பக்தி சூத்திரம்
திருவேங்கடத்தானைத் தவிர வேறு நாதன் இல்லவேயில்லை. எப்போதும் நான் வேங்கடத்தானை நினைத்தபடியே இருக்கிறேன். பாவங்களைப் போக்கும் வேங்கடேசா! எனக்குத் தவறாமல் அருள் செய்ய வேண்டும். ஐஸ்வர்யத்தைத் தரும் பெருமாளே, நான் விரும்புவதை விரைவாகத் தந்தருள்.
- ஸ்ரீ வேங்கடேஸ்வர ஸ்தோத்ரம், 9
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.