வெள்ளிமணி

முற்பிறவி வினை நீக்கும் திருக்கோயில்!

தினமணி

ஊர்களின் பெயர்கள் அத்தலத்தை வழிபட்டவர்கள் பெயரைக் கொண்டு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையிலே  குரங்கு, அணில், காகம் என மூன்றும் வழிபட்டு பேறு பெற்றதால் குரங்கணில்முட்டம் என இந்த தலம் வழங்கப்படுகின்றது.

வாலி, இந்திரன், எமன் இம்மூவரும் தங்களது முன்வினைப் பயனால் வாலி குரங்காகவும்,இந்திரன் அணிலாகவும், எமன் காகமாகவும் உருவம் பெற்று வருந்தி வாழ்ந்து வந்தனர். தங்களுடைய வினைப்பயன் நீங்க கயிலைநாதனை வேண்டி நின்றனர்.  சிவபெருமானின் அறிவுரைப்படி காஞ்சிபுரத்திற்கு தெற்கேயுள்ள சிவாலயம் சென்று வழிபட்டால் அவர்களுடைய வினைப்பயன் நீங்கி பழைய நிலைக்கு திரும்புவார்கள் என இறைவன் வழிகாட்டினான்.அதன்படியே இம்மூவரும் வழிபட்டு தங்கள் இயல்பு நிலையை அடைந்தார்கள் என்பது தலபுராணம்.இப்படி குரங்கு,அணில்,காகம் வழிபட்டு பேறு பெற்ற தலமாக திகழ்வது, குரங்கணில்முட்டம் எனும் சிவாலயமாகும்.தொண்டை நாட்டில் பாடல் பெற்ற சிவத்தலங்களில் ஆறாவது தலமாக குரங்கணில்முட்டம் திகழ்கின்றது.

வாலி: முன்வினைப் பயனால் சாபம் பெற்றவாலி, இறைவனுக்கு படைக்க வேண்டிய பூக்களை கைகளால் பறிக்காமல் மரத்தை உலுக்கி இறைவன் திருமேனியில் விழுமாறு பூக்களால் அர்ச்சனை செய்து வழிபட்டார்.அதன் பயனால் இறைவன் "கொய்யாமலர் நாதன்" என்று அழைக்கப்படுகின்றார்.இதனை திருஞானசம்பந்தர் தமது பதிகத்தில் ...கொய்யாமலர் சூடிய... என்ற வரிகளால் உணர்த்துகின்றார்.அதே போன்று , வாலியான குரங்கு வழிபட்டதால் சுவாமிக்கு வாலீஸ்வரர் என்ற திருப்பெயரும் வழங்கப்படுகின்றது.கொய்யாமலைநாதர் என்ற பெயரும் உள்ளது.

இந்திரன்: கெளதம முனிவரின் சாபம் பெற்ற  இந்திரன், அணில் வடிவம் எடுத்து இறைவனை வழிபட்டு , தன் பாவம் நீங்கி இயல்பு நிலையை அடைந்தான்.

எமன்: மார்க்கண்டேயர் மீது வீச வேண்டிய பாசக்கயிறை தவறுதலாக சிவலிங்கத்ததின் மீது வீசியதால் சாபம் பெற்ற  எமன் இத்தலம் வந்தான்.காக வடிவெடுத்து அலகினால் கீரி,ஒரு தீர்த்தம் ஏற்படுத்தி இறைவனை வழிபட்டு சாபவிமோசனம் பெற்றான். இந்த ஐதீகத்தை நினைவுபடுத்தும் வகையிலேயே காகம் தனது மூக்கால் கீரிய தீர்த்தமே"காக்கை மடு", என்று வழங்கப்படுகின்றது.இத்தீர்த்தம்  பிறைச்சந்திரன் வடிவிலே ஆலயத்தின் பின்புறம் எழிலுடன் காட்சி தருகின்றது.

தொன்மை சிறப்பு: இத்தலம் நந்திவர்மன், கோனேரின்மை கொண்டான், மூன்றாம் குலோத்துங்கன், இராஷ்டிர கூட கன்னரத்தேன், கிருஷ்ணதேவராயர், சம்புவராயர் எனப் பல்வேறு மன்னர்களாலும் போற்றப்பட்ட தலமாக விளங்குகிறது.

பாடல் பெற்ற தலம்:
"...கொய்யார் மலர்சூடி குரங்கணில் முட்டம்
கையால் தொழுவார் வினை காண்டல் அரிதே"
என்கின்றார் திருஞானசம்பந்தர்.
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவிடையாற்றுப்பதிகத்திலும், வள்ளலார்
 திருவருட்பாவிலும் புகழ்ந்துரைத்துள்ளனர்.

ஆலய அமைப்பு: இவ்வாலயம் ,மேற்கு நோக்கி அமைந்துள்ளது.  பிறைச்சந்திரன் வடிவில்  "காக்கை மடு". எனும் திருக்குளம் நீர் நிறைந்து காணப்படுகின்றது. ஆலயத்தின் நுழைவாயிலின் இருபுறமும் குரங்கு,அணில்,காகம் வழிபடும் புடைப்புச் சிற்பங்கள் காட்சி தருகின்றன.

வாலீஸ்வரர்− இறையார்
வளையம்மை: மேற்கு நோக்கிய வாலீஸ்வரர் எளிய வடிவில் கம்பீரத்துடன் காட்சி தருகின்றார். இவரே கொய்யாமலர்நாதர் என்று அழைக்கப்படுகிறார். அன்னையின் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. அன்னையின் திருப்பெயர், இறையார் வளையம்மை  என்பதாகும். அன்னையை "இறையார் வளையாளை ஓர் பாகத்து அடக்கி" என்ற வரிகளால் திருஞானசம்பந்நர் புகழ்கின்றார்.

ஆலயச் சிறப்பு: இத்தலம் முற்பிறவி வினைகள் நீங்கி நற்பலன் தரும் திருக்கோயிலாக விளங்குகின்றது.   திருமணமான பெண்கள் குழந்தைப்பேறு பெறவும், சுகப்பிரசவம் அடையவும்,பாலரிஷ்டம் நீங்கவும் கண் கண்ட தலமாக பக்தர்கள் நம்பிக்கையோடு வழிபடுகின்றனர்.

அமைவிடம்: திருவண்ணாமலை மாவட்டம்,வெம்பாக்கம் வட்டத்தில்,பாலாற்றின் தென்கரைத்தலமாக அமைந்துள்ளது. காஞ்சிபுரம்− செய்யாறு செல்லும் நெடுஞ்சாலையில், காஞ்சிபுரத்திலிருந்து தெற்கே சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் தூசி என்ற ஊரிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இத்தலம்  அமைந்துள்ளது. இப்பெருமை மிகு தேவார தலம் திருப்பணி வேண்டி காத்திருக்கிறது. திருப்பணியில் பங்கேற்று இறையருள் பெறலாம்.

தொடர்புக்கு : கு.க.பன்னீர் செல்வம், 0031 30621 

கட்டுரை - படங்கள் : பனையபுரம் அதியமான் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT