வேடனுக்கு கிடைத்த அருளாசி
வில்வவனமாயிருந்த இந்தக் கோயிலுக்குள் தவநிதி என்ற முனிவர் தவம் செய்து கொண்டிருந்தார்.
கற்புக்கரசி ஒருத்தியின் சாபத்தைப் பெற்ற விஷ்ணு இத்தலத்து இறைவனை வணங்கி சாபம் நீங்கியதால், "அரியீசர்' எனப்பட்டார். பிரம்மன் தீர்த்தமொன்றை ஏற்படுத்தி, ஈசனை வழிபட்டு படைப்புத் தொழிலை மீண்டும் பெற்றான்.
அக்னி தேவன் தேயும் தன்மை போன தலம், சப்தகன்னியருக்கு உத்தால முனிவரால் தரப்பட்ட சாபம் நீங்கிய தலம், விதிவசத்தால் கண் இழந்த அந்தணன் கண் பெற்ற தலம்.. என்று பல சிறப்புகள் கொண்ட இந்தத் தலமானது தஞ்சாவூர் மாவட்டத்துக்கு உள்பட்ட பாபநாசம் அருகேயுள்ள திருவைகாவூரில் உள்ளது. கொள்ளிடத்தில் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ளது.
ஞானசம்பந்தரால் ஒரு பதிகமும் அப்பரால் úக்ஷத்திரகோவை திருத்தாண்டகத்திலும் பாடல் பெற்றது. இத்தல முருகனை அருணகிரிநாதரும் சிறப்பித்துப் பாடியுள்ளார். தேவாரப் பாடல் பெற்ற காவிரி வடகரைத் திருத்தலங்களில் இதுவும் ஒன்றாகும். இத்தனைச் சிறப்புப் பெற்ற இத்தலத்துக்கு " மகா சிவராத்திரித் தலம்' என்ற சிறப்பும் உண்டு.
வில்வவனமாயிருந்த இந்தக் கோயிலுக்குள் தவநிதி என்ற முனிவர் தவம் செய்து கொண்டிருந்தார். ஒரு வேடன் மானைத் துரத்திக் கொண்டு வர, அது தப்பித்து முனிவரின் காலடியில் வீழ்ந்தது. துரத்திவிடச் சொல்லியும் முனிவர் கேட்காததால், வேடன் கோபமடைந்து முனிவரைத் தாக்கத் தயாரானான்.
சிவன் புலி வடிவெடுத்து, வேடனைத் துரத்தினார். வேடன் வனத்துக்குள் ஓடி, வில்வ மரத்திலேறிக் கொண்டான். புலியும் மரத்தடியிலேயே நின்றது, இரவும் வந்ததால் களைப்பு மிகுந்து உணர்வு வயப்பட்ட நிலையிலிருந்த அவன் செய்வதறியாது மரத்திலிருந்து ஒவ்வொரு இலையாகப் பறித்துக் கீழே வீசிக் கொண்டிருந்தான், அவை புலியின் மேல் விழுந்தன.
அன்று மகா சிவராத்திரி தினம் என்பதால், வேடன் காலையிலிருந்தே உணவு எதுவும் உண்ணவில்லை. அவனறியாமல் சிவராத்திரியில் சிவனை வழிபட்ட புண்ணியம் வேடனுக்குக் கிடைத்தது. விடிந்ததும் கீழே படுத்திருந்த புலியின் மீது வேடன் பறித்துப் போட்ட இலைக்குவியல் மூடியிருந்ததால், புலி இருக்கிறதா, இல்லையா என்பதே அவனுக்குத் தெரியவில்லை. ஒரு வழியாகத் துணிச்சலை வரவழைத்துக்கொண்டு கீழே இறங்கி வந்து இலைகளை விலக்கிப் பார்த்தான். வேடனுக்கு வியப்பு மேலிட்டது . அங்கு புலிக்கு பதிலாக லிங்கம் காட்சியளித்தது. சிவன் மோட்சமும் அளித்தார். பிரம்மன், விஷ்ணு முதலியோரும் இந்த அற்புதத்தைக் கண்டு உணர அவ்விடத்துக்கு வந்து காட்சி தந்தனர்.
அன்று அதிகாலையில் வேடனின் ஆயுள் முடிவதாக இருந்ததால், கோயிலுக்குள் எமன் நுழைந்தான். நந்தி தேவரோ அவன் கடமையைச் செய்ய உள்ளே செல்கிறான் என நினைத்து, தடுக்கவில்லை. இதைக் கண்டு வெகுண்ட ஈசன், எமனுக்குப் பாடம் புகட்ட நினைத்து தட்சிணாமூர்த்தியாகத் தோன்றினார். தன் கையில் ஈசன் கோலேந்தி விரட்டவே, தவறுணர்ந்து எமன்
தப்பித்து ஓடினான்.
எமனைக் கோயிலினுள் அனுமதித்த நந்தி தேவர் மீது சிவன் கோபம் கொண்டார். நந்தி தேவர் அஞ்சி வாயில் நோக்கித் திரும்பி எமனைத் தன் சுவாசத்தால் கட்டுப்படுத்தி நிறுத்தினார். எமன் வேண்டுகோளுக்கிரங்கிய சிவன் உத்தரவுப்படி விடுவிக்கப்பட்டான். கோயில் எதிரே "எம தீர்த்தம்' என்ற திருக்குளம் அமைத்து நீராடி, இறைவனையும் வழிபட்டு தன் பாவம் தீர்த்தான்.
இங்கு வாயிலை நோக்கி காவல் காக்கும் வகையில் நந்தி தேவரும், மகாமண்டபத்தில், கையில் கோலுடன் கூடிய தட்சிணாமூர்த்தியும் எழுந்தருளியிருக்கின்றனர்.
சம்ஸ்கிருத மொழியில் "வில்வாரண்ய úக்ஷத்ர மாஹாத்ம்யம்' என்ற நூல் இத்தலத்தின் சிறப்பைச் சொல்கிறது. சுயம்பு லிங்கமாக ஸ்ரீ வில்வாரண்யேசுவரர் சந்நிதியும், கோயிலும் கிழக்கு நோக்கியிருக்கிறது. எதிரில் எம தீர்த்தம் அமைந்துள்ளது. முகப்பு (ஆசாரவாசல்) சிறு மண்டபமாகும். எதிரில் நந்தி தேவர் கிழக்கு பார்த்து உள்ளார்.
பிரகாரத்தில் ஆறுமுகன், ஸ்ரீ சண்டிகேசுவரர், நடராஜர், சப்தலிங்கங்கள், விஷ்ணு , பிரம்மா, கோலேந்திய தட்சிணாமூர்த்தி ஆகியோர் எழுந்தருளியுள்ளனர் . வரப்பிரசாதியான வளைக்கை நாயகி என்கிற ஸ்ரீ ஸர்வ ஜனரட்சகி அம்பாள் எழுந்தருளி அருள் வழங்குகிறாள்.
இவ்வாலய கர்ப்பக்கிருகம், அர்த்தமண்டப, மகா மண்டபங்களையும், கற்றளியாக மாற்றித் திருப்பணி செய்தவன், கி.பி.11} ஆவது நூற்றாண்டில் முதலாம் குலோத்துங்க சோழனாவான்.
இந்த ஆண்டு மார்ச் 8}ஆம் தேதி இரவு மகா சிவராத்திரி விழாவும், 10}இல் எம தீர்த்தத்தில் தீர்த்தவாரியும், நடைபெறுகின்றன. இந்த நாள்களில் நீராடினால் ஆயுள் விருத்தியாகும் என்பது ஐதீகம்.
தொடர்புக்கு 0437221095 ; 7598221095.
இரா. இரகுநாதன்