நீலகிரி மலைப் பிரதேசத்தில் சிதம்பரம் ஏகாம்பர தேசிக சுவாமிகள் தவம் இருந்தபோது, சிவன் தட்சிணாமூர்த்தி ரூபத்தில் காட்சி அளித்து புலித்தோல் ஆசனமும், பாதக் குறடும் வழங்கி அருளினார். பின்னர், அவர் கோவையில் உள்ள பழைமையான பேரூர் திருமடத்துக்குச் சென்று ராமலிங்க அடிகளாரை சந்தித்து துறவறம் மேற்கொண்டார்.
ஊட்டி என்ற உதகமண்டலத்தில் 1913-இல் யோகீந்தர் ஓம் பிரகாஷ் அடிகளார் தலைமையில், பால தண்டாயுதபாணி சிலை நிறுவப்பட்டது. இவ்விடத்தின் பெருமை அறிந்து பயனடைந்த ஜெய்ப்பூர் அரசி ராஜராஜேஸ்வரி 1932-இல் அருளுரை மண்டபம் அமைத்தார். 1935-இல் சின் முத்திரையுடன் கூடிய யோக தட்சிணாமூர்த்தி சிலை அமைக்கப்பட்டது.
ஏகாம்பர தேசிக சுவாமிகளுக்குப் பின்னர் வந்த நிரஞ்சன பிரகாச சுவாமிகள் 1958-இல் காசி விஸ்வநாதர் கோயில் எழுப்ப முயன்றபோது, ராய போயர் என்ற சிவனடியாரும் அவரது மனைவியான கற்பகத்து அம்மையாரும் இப்பணியில் இணைந்தனர். மஞ்சம்மாள் தலைமையில் ஆலயப் பணிகள் நடைபெற்றன. சிவ லிங்கம் நர்மதை நதியில் இருந்து கொண்டு வரப்பட்டது. நான்முகன், திருமால், தேவர்கள் வழிபட்ட பூணூல் ரேகை தாங்கிய பாண லிங்கம் 1958}இல் நிறுவப்பட்டது. இங்கு சித்தர்கள் நினைவாலயம், காசி விசுவநாதர் திருக்கோயில் என இரண்டு பகுதிகள் அமைந்துள்ளன.
வலம்புரி விநாயகர், தட்சிணாமூர்த்தி, சுவாமி ஐயப்பன், பூதேவி, ஸ்ரீதேவி சமேத வரதராஜ பெருமாள், ஆஞ்சநேயர், விஷ்ணு, துர்க்கை, கங்கை அம்மன், சனி பகவான், காலபைரவர், நவகோள்கள், பாண்டுரங்கன், தத்தாத்ரேயர், கனக சபை, ஓம்காரம் என அனைத்தும் ஒருங்கே அமைந்துள்ளன. லிங்கோற்பவர், பிரம்மன், சண்டிகேஸ்வரர் சிலா வடிவங்களும் காசி விஸ்வநாதர் கருவறை சுற்றில் அமைந்துள்ளன. நினைவாலயம் ஆறு சித்தர்களின் சமாதிகளைக் கொண்டு அமைந்துள்ளது. மடாதிபதியாக, பேரூராதீன குருமகா சன்னிதானம் திகழ்கின்றார்.
1902-இல் தொடங்கப்பட்ட சரஸ்வதி நிலையம் எனும் புத்தகச் சாலை, 1934-இல் ஏற்படுத்தப்பட்ட அன்னதானக் கூடம், 1938-இல் தொடங்கிய சித்த மருத்துவ மையம், இலவசக் கல்வியை அளிக்கும் ஓம் பிரகாசர் உள்ளிட்ட சேவைகள் இன்றும் தொடர்கின்றன. 1933-இல் உதகை ராமகிருஷ்ணா மடத்துக்கு வருகை தந்த காந்தியடிகளிடம் திருமடத்தின் பெருமைகளை சுவாமி சித்பவானந்தர் எடுத்துரைத்தார். மூதறிஞர் ராஜாஜியும் மடத்தைப் பார்வையிட்டு, சேவைகளைப் பாராட்டினார்.
படகு இல்லத்துக்கு வெகு அருகேயுள்ள காந்தல் பகுதியில் இந்தக் கோயில் அமைந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.