புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டத்தில் மேற்கில் சுமார் 32 கி.மீ. தொலைவில் உள்ள சின்னஞ்சிறிய கிராமம் மறவாமதுரை. இவ்வூரின் வடபுறத்தில் உள்ள ஒரு ஊரணியின் மேலக்கரையில் கிழக்குப் பார்த்த சிவன் கோயில் உள்ளது. இத்தல இறைவனை ஆடங்கநாதர் எனவும், அம்பாளை ஆடகவல்லி என்றும் அழைக்கின்றனர்.
ஆடகம் என்பது தங்கத்தைக் குறிக்கும். வல்லி என்பது கொடி போன்றவள் அல்லது வலிமையுள்ளவள். எனவே தங்கக் கொடி போன்றவள் அல்லது தங்கத்தைப் போன்ற அழகுடையவள் எனப் பொருள்படும். ஆனால், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இச்சிவன் ஸ்ரீவங்கீஸ்வரமுடையார், அகளங்க ஈஸ்வரமுடையார் என்றெல்லாம் அழைக்கப்பட்டுள்ளார்.
இச்சிவன் கோயிலின் கூரை வரை கருங்கல்லால் கட்டப்பட்டு அதன் மேல் செங்கல் சுண்ணாம்பால் விமானம் கட்டப்பட்டுள்ளது. அம்பாளுக்கு சுவாமி கோயிலின் கிழக்கில் தெற்குப் பார்த்த கோயிலாக கருவறை, அர்த்த மண்டபம் என்றளவில் கட்டப்பட்டு சுவாமி கோயிலின் முன் மண்டபத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. பரிவார தெய்வங்களாக மூலப்பிள்ளையார், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், பைரவர், நவகிரகங்கள், சூரியன்}சந்திரன் ஆகியோர் அருள்கின்றனர்.
கல்வெட்டுச் செய்திகள் ஏராளம் கொண்ட கோயில். மறவாமதுரை சிவன் கோயில் வடபுறச் சுவரிலுள்ள திரிபுவனச் சக்கரவர்த்திகள் என்ற எம்மண்டலமும் கொண்டருளிய குலசேகர தேவரின் கல்வெட்டே காலத்தால் முற்பட்ட கல்வெட்டு. மேற்கண்ட கல்வெட்டில் மறவாமதுரை கடலடையாது இலங்கை கொண்ட சோழவளநாடு என்ற கோனாட்டின் ஒல்லையூர் கூற்றத்தின் ஒரு பிரமதேயமாகச் சொல்லப்பட்டுள்ளது.
மறவாமதுரை சிவன் கோயில் தென்புறச் சுவரிலுள்ள 1527}ஆம் ஆண்டு கல்வெட்டு, இளையாத்தங்குடி திருவேட்பூருடையான் நல்ல பெருமாள் திருநெல்வேலியுடையாள் என்ற விசையராயற்கு, பொன்னமராவதி நாட்டு வடமதுரை என்ற இவ்வூர், கோயில் கருவூலத்தாரும், தானத்தாரும் வடமதுரை ஊரவரும் இவ்வூர் அகளங்கீசுவரமுடையார் கோயில் நாச்சியார் ஆட்சிவல்லிக்கு திருக்கோயில் கருவறையும், அர்த்த மண்டபமும் கட்டிக் கொடுத்ததைப் பற்றிக் கூறுகிறது.
மறவாமதுரை சிவன் கோயிலில் உள்ள 15-ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாகக் கருதக்கூடிய கல்வெட்டில் பொன்னமராவதியை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த குறுநிலத் தலைவர்களில் ஒருவனான நிஷதராயன் அகளங்க ஈஸ்வரமுடையார் கோயிலுக்கு அமுதுபடைக்கும், திருப்பணிக்கும் இவ்வூர் குளத்து பெருநான்கெல்லைக்கு உட்பட்ட நிலத்தினை கொடையாகக் கொடுத்தமையைத் தெரிவிக்கிறது.
ஆடகவல்லி சமேத ஆடங்கநாதரை வழிபட்டால் அனைத்து பேறுகளும் கிட்டும் என்கிறார்கள். இக்கோயிலில் பிரதோஷம், விநாயகர் சதுர்த்தி, மகா சிவராத்திரி, தேய்பிறை அஷ்டமி போன்றவை நடைபெற்று வருகின்றன. இவ்வாண்டு முதல் மார்கழி மாத பூஜைகளும் நடைபெற விருக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.