நம்பி வந்தோருக்கு நலமளிக்கும் தெய்வமாக விளங்குகிறாள், மதுரை மாவட்டம் சோழவந்தானில் கோயில் கொண்டுள்ள அருள்மிகு ஜெனகை மாரியம்மன். எழுநூறு ஆண்டுகள் பழைமையான வரலாற்றுச் சிறப்புமிக்க தலம்.
946 முதல் 966 வரை பாண்டிய நாட்டை வீரபாண்டியன் ஆட்சிபுரிந்தான். சோழ மன்னனை போரில் வென்று வெற்றிவாகை சூடியதால் வீரபாண்டியனுக்கு சோழாந்தகன் , மதுரையை மீட்ட வீரபாண்டியன், சோழன் தலை கொண்ட வீரபாண்டியன் என்ற விருதுப் பெயர்கள் உண்டு. சோழாந்தகன் என்பதற்கு சோழர்களுக்கு அந்தகன் என்று பொருளாகும். அந்தகன் என்றால் எமன் என்பதாகும்.
ஜனநாத சதுர்வேதி மங்கலம் என்பது சோழவந்தானுக்கு இராஜராஜ சோழன் காலத்தில் வழங்கப்பட்ட பெயராகும். இவனது ஆட்சிக்காலம் 985 முதல் 1014 வரை ஆகும். இராஜராஜனின் 17}ஆவது ஆட்சியாண்டிலிருந்து ( 1002) சோழாந்தக சதுர்வேதிமங்கலம் என்பதிலிருந்து மாற்றப்பெற்று, இராஜராஜனின் விருதுப்பெயரான ஜனநாத சதுர்வேதி மங்கலமாக அழைக்கப்பட்டது.
ஜனநாதன் என்றால் ஜனங்களின் நாயகன் என்பது பொருள். இது இராஜராஜ சோழனின் விருதுப்பெயர்களில் ஒன்று. அதனால்தான் இத்தலத்தின் மிக அருகில் வீற்றிருக்கும் பெருமாளுக்கு ஜனகநாராயணப் பெருமாள் என்ற பெயரும், அதன்பின்பு சிறிது காலம் கழித்து வந்தருளிய மாரியம்மனுக்கு ஜனக மாரியம்மன் என்ற பெயரும் வழங்கப்பட்டது. அதுவே, பேச்சுவழக்கில் ஜெனகை மாரியம்மன் என மருவியுள்ளது.
கிழக்குப் பார்த்த வண்ணம் அமைந்த ஜெனகை மாரியம்மன் கோயில் வாசலில் புராதன பலிபீடம் உள்ளது. இதில் சங்கிலி கருப்பண்ணசாமி எழுந்தருளியிருப்பதாக ஐதீகம்.
கோபுரவாசல் தாண்டியதும் விரிந்து பரந்த உள்சுற்று தென்படுகிறது. மகாமண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என்ற அமைப்பில் கோயில் உருவாக்கப்பட்டுள்ளது. மகாமண்டபத்தில் செப்புக்கவசம் போர்த்திய கொடிமரம், பலிபீடம், நந்தி வாகனம் அமைந்துள்ளது.
பொதுவாக அம்மனுக்குரிய வாகனம் சிம்மம். ஆனால், இங்கு நந்திதேவரை அமைத்திருப்பதற்கு ஒரு காரணம் சொல்லப்படுகிறது.
ஒருசமயம் வைகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது, ஆற்றுநீரில் மரத்தாலான ரிஷபத்தின் தலை மட்டும் அடித்து வரப்பட்டு வைகைக் கரையோரம் ஒதுங்கியது. அதனைக் கண்டெடுத்த அடியார்கள் இக்கோயிலில் கொண்டு வந்து சேர்த்தனர். அந்த மரச்சிற்பத்தின் அமைப்பு தெய்வீக அம்சம் நிறைந்ததாக இருந்தமையால், அந்தத் தலைக்குப் பொருத்தமாக முழு ரிஷபத்தையும் புதிதாகச் செய்து வைத்தனர். அம்மனுக்கு ரிஷப வாகனம் உருவானதால், அம்மனை சிவசக்தி சொரூபமாக வணங்கி, அவள் சந்நதியில் நந்திதேவரை வாகனமாக பிரதிஷ்டை செய்துள்ளனர்.
கருவறையில் மூலவராக இரு தேவியர் அருள்கின்றனர். ஒருவர் நின்ற நிலையில் சந்தன மாரியம்மன் எனும் பெயர் கொண்டு சுதையாகவும்; இன்னொருவர் ஜெனகை மாரியம்மன் எனும் பெயர் கொண்டு வீராசனத்தில் அமர்ந்த நிலையில் கல்திருமேனியாகவும் காட்சியளிக்கின்றனர்.
ஜெனகைமாரி கிழக்கு நோக்கியபடி தனது வலது காலை ஊன்றியபடியும், இடது காலை மடக்கியும் வீராசனத்தில் எழுந்தருளியிருக்கிறாள். தன் திருமேனியில் சர்ப்பங்களுடன் காணப்படும் மகாசக்தியாக அன்னை அருள்பாலிப்பதால், புராதனப் பெருமை மிக்க இத்தலம் நாகதோஷம் நீக்கும் பரிகாரத் தலமாகவும், குழந்தைப்பேறு கிட்டும் அற்புதத் தலமாகவும் விளங்குகிறது.
மதுரை சுற்றுவட்டாரத்தில் இந்த மாரியம்மன் மிகவும் பிரசித்தி பெற்றவள். அதனால்தான் இப்பகுதி மக்களால், "சொல்லி வரங்கொடுப்பாள் சோழவந்தான் ஜெனகைமாரி' என்று சொல்லும் அளவுக்கு சத்திய வாக்குக் கொடுக்கும் தெய்வமாகக் கொண்டாடப்படுகிறாள்.
பல நூற்றாண்டுகளாக சந்தன மாரியம்மன் மட்டுமே மூலவராக அருள்பாலித்துள்ளார். 15}ஆம் நூற்றாண்டுக்கு முற்பகுதியில் தற்போது கோயில் இருக்கும் இடத்தில் பூமியிலிருந்து பொக்கிஷமாகக் கிடைத்த விக்ரகமே தற்போதைய ஜெனகை மாரியம்மன். பின்னர் இந்த அம்மனை சந்தன மாரியம்மனின் சுதை விக்ரகத்துக்கு முன்பாக பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகிறார்கள்.
அர்த்த மண்டப வாசலில் துவார சக்தியர், விநாயகர், சுப்பிரமணியர் உள்ளனர். மூலவர் விமானம் நாகர வடிவில் உள்ளது. உள்சுற்றில் தீர்த்தக்கிணறு, தலவிருட்சம் வேம்பு, அரசு, நாகதேவதை, மூலவரின் பின்புறம் உள்ள சுற்றுப்பிரகாரத்தில் பல்லவர் காலத்து சிம்ம விளக்கு அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு.
தரிசனத்துக்காக காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் திறந்திருக்கும். மாலை 4 முதல் இரவு 9 மணி வரையிலும் கோயிலில் பெüர்ணமிதோறும் 108 திருவிளக்கு பூஜை சிறப்பாக நடந்து வருகிறது.
வைகாசிப் பெருந்திருவிழா 17 நாள்கள் கொண்டாடப்படுகிறது. இந்த பிரமோற்சவ விழா நாள்களில் கோயில் காலை ஆறு மணி முதல் நள்ளிரவு பன்னிரண்டு மணி வரை திறந்திருக்கும். சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து மக்கள் கலந்துகொள்ள வசதியாக சிறப்புப் பேருந்து வசதி செய்யப்படுகிறது. நேர்த்திக்கடன் செலுத்துபவர்கள் பலரும் துலாபாரம் மூலமாகவும் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றி மகிழ்கின்றனர்.
சோழவந்தான் ஜெனகராஜ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.