வெள்ளிமணி

விலங்கு தோஷங்கள் நீங்க...

இருவரும் நேருக்கு நேர் சந்திக்கும்போது உங்கள் சாபம் விலகும்' என்றார்.

தினமணி செய்திச் சேவை

சிவனின் வாயில் காப்பாளர் நந்திதேவரின் சீடர்கள் காந்தன், மகா காந்தன் ஆகிய இருவர். ஒருநாள் காலை இருவரும் குளத்தில் இருந்த வெண் தாமரைப் பூக்களைப் பறித்தனர். கை தவறிய பூ ஒன்று நீரில் விழுந்து மீனாகவும், மற்றொன்று கரையில் விழுந்த கிளியாகவும் மாறின. இதனால் வியப்படைந்த அவர்கள், மீண்டும் மீண்டும் செய்துகொண்டே இருந்தனர்.

பூஜைக்கு பூக்கள் வராததைக் கண்டு கோபமடைந்த நந்திதேவர் குளக்கரைக்கு வந்தபோது, இந்த விளையாட்டைக் கண்டவர் கோபத்துடன் சீடர்களை நோக்கினார். அப்போது காந்தன் பூனை போல் விழிக்கவும், மகா காந்தன் சுரட்டுக்கோலை வைத்துகொண்டும் நின்றனர். உடனே நந்தி தேவர், காந்தனைப் பூனையாகவும், மகா காந்தனை வேடுவனாகவும் மாறிட சாபமிட்டார். சீடர்கள் சாப விமோசனம் வேண்டினர்.

மனம் இறங்கிய நந்திதேவர், "காஞ்சிக்குத் தென்கிழக்குத் திசையில் புண்டரீகப் புஷ்கரணி என்ற தீர்த்தமும், அதனருகில் அகஸ்தீஸ்வரர் என்ற மகா லிங்கமும் உள்ளன. இருவரும் தனித்தனியே அங்கு ஒருவருக்கொருவர் அறியாமல் குளத்தில் மூழ்கி வழிபட்டு வாருங்கள். இருவரும் நேருக்கு நேர் சந்திக்கும்போது உங்கள் சாபம் விலகும்' என்றார்.

பூனையான காந்தன் முதலில் வழிபாடு செய்து முடிப்பதும், அதன்பின் வேடுவனான மகா காந்தன் பூஜை செய்வதும், தொடர்ந்தது. வேடுவனுக்கு ஒரு ஐயம் இருந்தது. நாம் பூஜை செய்வதற்கு முன்பாகவே வேறு யாரோ பூஜை செய்து விடுகிறாரே, அது யார் என்று அறிய ஆவல். இதனால் சீக்கிரமாகவே பூஜை செய்ய முனைந்த வேடுவன் கோயிலுக்குச் சென்றான். அப்போது அங்கே ஒரு பூனை பூஜை செய்துகொண்டிருந்தது. கோபமுற்ற வேடுவன், பூனை மீது அம்பை எய்தான். பூனை சற்று நகர்ந்துவிட, அம்பானது லிங்கத்தின் மீது பட்டு ரத்தம் பீறிட்டது. பயந்த வேடுவனும் பூனையும் ஒருவரையொருவர் நோக்க, சாப விமோசனம் கிடைத்தது. பூனை காந்தனாகவும், வேடுவன் மகா காந்தனாகவும் பழைய நிலைக்கே உருமாற இருவரும் சிவனை வேண்டி நிற்க, இறைவனும் அருள் வழங்கினார்.

அன்றுமுதல் இறைவன் திருப்பெயர் "கிராத மார்ஜாலீஸ்வரர்'

என்றும், இவ்வூர் "கிராத மார்ஜாலபுரம்' என்றும், வழங்கப்பட்டது. "கிராதன்' என்பதற்கு "வேடுவன்'

என்றும் "மார்ஜாலம்' என்பதற்கு "பூனை' என்றும் பொருள்.

"கங்கை, தன் தோஷம் நீங்க, புண்டரீக தீர்த்தத்தில் நீராடி மகாலிங்கத்தை வணங்கினார்' என்று புராணம் கூறுகின்றது. அன்று முதல் இவ்வூர் "கங்கை கொண்ட சோழபுரம்' என்று அழைக்கப்படுகிறது. திருமால், படைப்புத் தொழில் மேம்பட பிரம்மன் உள்ளிட்டோரும் இங்கு நீராடியதாக வரலாறு.

சிவன்- பார்வதி திருமணத்தைக் காண எண்ணற்ற தேவர்களும் ரிஷிகளும் கயிலாய மலையில் கூடியதால், பூமியின் சமநிலை பாதிக்கப்பட்டது. இதனால் தென்திசை மேலெழும்ப இறைவன் ஆணைப்படி பூமி சமநிலையை அடையச் செய்ய, பொதிகையை நோக்கி அகத்தியர் பயணித்தபோது வழியில் கொன்றை மரத்தடியில் ஒரு மகாலிங்கம் இருப்பதைக் கண்டார். அவரை வணங்கி, அதன் அருகில் பாண லிங்கத்தையும் பிரதிஷ்டை செய்தார். அன்று முதல் அந்த இறைவனுக்கு "மகாலிங்கம்' என்றும், "அகஸ்தீஸ்வரர்' என்றும் பெயர் நிலைத்தது. இதன்பின் பொதிகை மலை சென்று பூமியைச் சமன்படுத்தினார்.

தெற்கு நோக்கிய எளிய வாயில். ராஜ கோபுரமின்றி அமைந்துள்ள வாயிலைக் கடந்ததும் கொடிமரம் உள்ளது. அதன் நேரே வலது புறத்தில் தனியே "மெüத்திகாம்பாள்', "முத்தாம்பிகை' என்றெல்லாம் அழைக்கப்படும் அன்னை அருள் பாலிக்கிறார். மூலவர் அகஸ்தீஸ்வரர் காட்சி அளிக்கிறார். புடைப்புச் சிற்பமாக ஏகபாத மூர்த்தி சிற்பமானது தட்சிணாமூர்த்தியின் அருகே அமைந்துள்ளது. கருவறையின் பின்புறம் கிராதநாதர், கங்காதேவி, வேடுவன் ஆகியோர் சிலைகளும் அமைந்துள்ளன.

கருவறை மேற்குச்சுவர் கல்வெட்டில் இறைவனின் பெயர் "திரு

அகஸ்தீஸ்வரமுடைய நாயனார்' என்றும், இவ்வூர் "வில்லிபாக்கம் என்கிற கங்கை கொண்ட சோழநல்லூர்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கோயில் சூணாம்பேடு ஜமீன்தார் திவான் பகதூர் அருணாசல முதலியார் பரம்பரையால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

"எந்த விலங்குகளுக்கும், மனிதர்கள் தாங்கள் அறியாமல் செய்த பாவங்களும் தோஷங்களும் இத்தலத்து இறைவனை வழிபடுவதன் மூலம் விலகும்' என்பது ஐதீகம்.

வில்லிப்பாக்கம் } செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உள்பட்ட செய்யூர் வட்டத்தில் சூணாம்பேடு அருகில் அமைந்துள்ளது

ஏ. சுசிலா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேவா யாருன்னு தெரிஞ்சும் விளையாடறானுங்க... கூலி டிரைலர்!

நகையை பறித்து தப்பிச்சென்றபோது கார் மீது இருசக்கர வாகனம் மோதல்: சிறுவன் பலி, 8 பேர் காயம்

21 ரன்களில் மிகப் பெரிய சாதனையை தவறவிட்ட ஷுப்மன் கில்!

உள்ளிருந்தும் ஒளிர்கிறேன்... கமல் பதிவு!

சிந்தும் ஓவியம்... யாஷிகா ஆனந்த்!

SCROLL FOR NEXT