திருப்பூர் மாவட்டத்துக்கு உள்பட்ட அவிநாசிக்கு மேற்கில், அன்னூர் செல்லும் சாலையில் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது கருவலூர். இங்குள்ள கருமாரியம்மன் கோயில், புகழ்பெற்ற அம்மன் கோயில்களில் ஒன்று.
அவிநாசி தலத்தில் சுந்தரர், முதலை விழுங்கிய பாலகனை உயிர்ப்பிக்க, தாமரைக் குளத்துக்குச் சென்றபோது அது வறண்டிருந்தது. அவர் சிவனை நோக்கிப் பதிகம் பாடத் தொடங்கியதும், இவ்வூரில் கருமேகம் தோன்றி, மின்னல் மின்னி பெருமழை பொழிந்தது. அதுவே ஆறாகப் பெருகி, அவிநாசி தாமரைக்குளமும் நிரம்பியது. முதலையும் தான் விழுங்கிய பாலகனை உமிழ்ந்து உயிர்ப்பித்தது. மேகங்கள் கருவிலிருந்து மழை பொழிந்ததால், கருவலூர் என்ற பெயர் உண்டானதாக, வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.
நள்ளாற்றின் கரையில் உள்ள கங்காதீசுவரை வழிபட்ட காமதேனு, கருவை ஈன்று கன்றினைத் தந்ததால் "கருவலூர்' எனப் பெயர் பெற்றது. வெப்பு நோய் தீர்ப்பவளாய், தீராத கண் நோய்களைத் தீர்ப்பவளாக கருணையுள்ளம் கொண்டவளாக தனிச்சிறப்புடனும், சூலம், கபாலம், உடுக்கை, பாசம் ஆகியவற்றை ஏந்தியபடி நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் மாரியம்மன் காட்சி தருகிறாள்.
ஐந்து நிலை ராஜகோபுரம் நடுநாயகமாக விளங்குகிறது. கருவறையின் முன்பு இருபுறமும் நீலன், நீலி சிலைகள் உள்ளன. முன் மண்டபம் 30 தூண்களைக் கொண்டது. பக்தர்கள் அமர்ந்திருந்து அம்மனைத் துதித்திட வசதியானது. திருச்சுற்றில்
கன்னிமார்சாமி, மேற்கு நோக்கி அமர்ந்துள்ளார். கருவறையின் கிழக்கே சிற்பங்கள் உள்ளன. கருவறை விமானம் மூன்று நிலைகளைக் கொண்டது.
தேரோட்டம் நடைபெறுவதற்கு 15 நாள்கள் முன்பு காப்புக் கட்டப்பட்டு, கம்பம் நடப்படும். கம்பம் நாட்டிய நாள் முதல் தேரோட்டம் வரையில் அம்மன் பட்டினியிருப்பதாக ஐதீகம். அப்போது அம்மனுக்கு நைவேத்யம் கிடையாது. இரவில் பச்சை அரிசி மாவு மட்டும் படைக்கப்படும்.
மனக் கவலையைப் போக்கி, பக்தர்களுக்கு வேண்டிய வரம் அளிப்பாள் கருமாரியம்மன் என்கின்றனர் பக்தர்கள்.
}பொ.ஜெயச்சந்திரன்
பாலாறு, உத்திரகாவேரி என்ற அகரம் ஆறு, கௌண்டன்ய மகாநதி ஆகிய மூன்றும் சங்கமிக்கும் இடமான சித்தாத்தூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு விசாலாக்ஷி அம்மன் சமேத காசி விசுவநாதர் கோயில் 1,200 ஆண்டுகளுக்கும் மேல் பழமைவாய்ந்தது. திரிவேணி சங்கமத்துக்கு இணையானது.
சித்தர்கள் வாழ்ந்த இந்தப் பகுதி என்பதால், "சித்தாத்தூர்' எனப்படுகிறது. முன்னொரு காலத்தில் வாரணாசிக்கு பக்தர்கள் பாத யாத்திரைக்குச் செல்வோர் இந்தக் கிராமத்தின் வழியாகவே சென்றுள்ளனர். வாரணாசியில் இருப்பதுபோன்று லிங்கமே வடக்கு நோக்கி அமைந்துள்ளதால், "வலகாசி' என்ற பெயருடன் அழைக்கப்பட்ட அருகேயிருந்த ஊர் காலப்போக்கில், "ஓலக்காசி' என மாற்றலாயிற்று.
பல மன்னர்கள் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட திருப்பணிகள், சந்நிதிகள், பிரகாரங்கள், கல்வெட்டுகள் போன்றவை இருந்துள்ளன. 150 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு மிகப் பெரிய அளவிலான சத்திரம் அமைக்கப்பட்டு, எந்த நேரமும் அன்னதானமும் நடைபெற்றுள்ளது. பாலாற்றில் அவ்வப்போது ஏற்பட்ட பெருவெள்ளத்தின்போது, இவையெல்லாம் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
மூலவர் சிவன், மூன்று நீர்நிலைகள் கூடுவதால் சங்கமேசுவரர், அம்மன், பெருமாள், நவகிரகங்கள், விநாயகர், முருகன், சண்டிகேசுவரர், நந்தி சந்நிதிகள் இருந்தன. கோயிலை நிறுவிய சித்தரின் ஜீவசமாதியும் இங்குள்ளது. கோயில் திருப்பணிகள் தற்போது நடைபெற்று
வருகின்றன. பைரவர், நால்வர், விநாயகர், முருகன் சந்நிதிகள் புதியதாக அமைக்கப்பட உள்ளன.
நவம்பர் 3}இல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. வேலூர் மாவட்டத்துக்குள்பட்ட குடியாத்தம் அருகே வேப்பூர் கிராமத்தில் இருந்து இந்தக் கோயிலுக்குச் செல்லலாம். தொடர்புக்கு: 87787 64588.
கே.நடராஜன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.