சுந்தரர், திருநாவுக்கரசரால் பாடப்பெற்ற தலம், திருஇடையாறு. தென் பெண்ணையாறு, மலட்டாறு என்ற இரு ஆறுகளுக்கு இடைப்பட்ட பகுதியில் அமைந்ததால் இடையாறு என்ற பெயரைப் பெற்றது. இது தற்போது டி.இடையாறு என அழைக்கப்படுகிறது.
ராஜராஜ வளநாட்டு திருமுனைப்பாடி இடையாற்று நாட்டு இடையாறு எனக் கல்வெட்டுகளில் இத்தலம் கூறப்பட்டுள்ளது. கரிகாலன் ஆட்சிக் காலத்தில் இடையாறு செல்வ வளமிக்க ஊராக விளங்கியது என வரலாறு கூறுகிறது.
புராணத்துடன் தொடர்புடைய தலம். ஒரு சமயம் கயிலையில் சிவபெருமான் உமாதேவியாருக்கு சிவ ரகசியத்தை உபதேசித்தார். அப்போது அவற்றை கிளி முகம் கொண்ட சுகப்பிரம்ம முனிவர் ஒட்டுக் கேட்டார். இதையறிந்து கோபம் கொண்ட சிவபெருமான், முனிவரை பூமியில் பிறக்கும்படி சாபமிட்டார். தன் தவறை உணர்ந்த முனிவர், ஈசனிடம் சாப விமோசனம் வேண்டி நின்றார்.
பூவுலகில் வேதவியாசருக்கு மகனாகப் பிறந்து, தென்பெண்ணையாற்றின் தென்பகுதியில் அமைந்துள்ள இத்தலத்தில் இறைவனைப் பூசித்து பூலோக வாழ்வு நீங்கப் பெற அவருக்கு வழிகாட்டினார். சுகப்
பிரம்ம முனிவரும் அவ்வாறே இத்தலம் வந்து மருத மரத்தின் கீழ் தவமிருந்து சாப விமோசனம் பெற்றார். இத்தலம் மருத மறைஞானசம்பந்தர் அவதார தலமாகும்.
அகத்தியரும் இத்தலத்தில் லிங்கம் அமைத்து வழிபட்டுள்ளார். ஆலயத்தின் பின்புறம் இந்த லிங்கம் அமைந்துள்ளது. இவரே அகத்தீஸ்வரர் என அழைக்கப்படுகின்றார். இங்கு அகத்தியருக்குச் சிலையும் உள்ளது. இத்தலத்திற்கு சோழர், பாண்டியர், விஜயநகர மன்னர், சாளுக்கியர் எனப் பல்வேறு மன்னர்கள் திருப்பணி செய்துள்ளனர்.
எட்டாம் நூற்றாண்டில் ஒரிசா நாட்டு கஜபதி மன்னனது படையெடுப்பால் அழிக்கப்பட்டு 10 வருடங்கள் கழித்து சாளுவ நரசிம்ம மன்னர்களால் திரும்பவும் கட்டப்பட்ட கோயிலாகும். இதனை கி.பி.1471 ஆண்டுக் கல்வெட்டால் அறிய முடிகின்றது. இறைவன் வழிபாட்டிற்காக திரிபுவனச்சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டான் சில நிலவரிகளைத் தர ஆணையிட்டுள்ளான்.
மேற்கு நோக்கிய ஆலயம். வாயிலை அடுத்து பலிபீடமும், நந்தியும், கோபுரமும் உள்ளது. அதையடுத்து மற்றொரு பலிபீடமும், நந்தியும் உள்ளன.
இத்தலத்தின் மூலவர் மருதீசர், மருந்தீசர், இடையாற்றீசர் என்றெல்லாம் வழங்கப்படுகின்றார். கல்வெட்டில் இறைவன் "மருதந்துறை உடைய நாயனார்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இறைவன் ஒளி வீசும் திருமேனியராகக் காட்சிதருகின்றார். மூலவர் கருவறைக்கு இடப்புறம் அம்மன் சந்நிதி உள்ளது. இறைவி ஞானாம்பிகை, சிற்றிடைநாயகி என அழைக்கப்படுகின்றார்.
அன்னை திருமணக்கோலத்தில் மாலை மாற்றும் அமைப்புடன் காணப்படுகின்றார். இதனால் திருமண நாள் தள்ளிப் போகிறவர்கள் இத்தலம் வந்து இறைவன் மற்றும் இறைவிக்கு அபிஷேகம் செய்து மாலைகள் சாத்தி வேண்டினால் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை. மூலவர் சந்நிதி வழியாக அம்மன்
சந்நிதிக்குச் செல்ல வழியுள்ளது.
தலதீர்த்தம் சிற்றிடை தீர்த்தம் எனும் கிணறு. மண்டபத்தில் நாகர், விநாயகர், மறைஞானசம்பந்தர், நால்வர், பைரவர் ஆகியோர் உள்ளனர். அருகே நடராஜர் சபை அமைந்துள்ளது. கருவறைக்கு முன்பாக இடப்புறம் சூரியன், மற்றொரு பலி பீடம், நந்தியும் காட்சி தருகின்றது.
திருச்சுற்றில் சண்டிகேசுவரர் சந்நிதி, தலமரமான மருத மரம், வில்வ மரம், நவகிரக சந்நிதி, அகத்தீசுவரர் சந்நிதி, விநாயகர், பிராமி, மகேஸ்வரி, கெüமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகியோர் உள்ளனர். அடுத்து விநாயகர் சந்நிதி உள்ளது.
சிவன், பார்வதிக்கு நடுவில் முருகன் இருப்பது சோமாஸ்கந்தர் அமைப்பாகும். இங்கே சிவன், பார்வதிக்கு நடுவில் பாலகணபதி குழந்தைகளுக்கு விருப்பமான லட்டு மற்றும் பலாச்சுளையுடன் காணப்படுகின்றார். இதனால் இவருக்கு "பலாச்சுளை கணபதி' என்ற பெயர் வழங்கப்படுகின்றது.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் } திருக்கோவிலூர் வழித்தடத்தில் 2 கி.மீ. தொலைவில் டி.இடையாறு எனும் திரு இடையாறு திருத்தலம் அமைந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.