புதுச்சேரி மாநகரில் பிரசித்தி பெற்ற முருகன் கோயிலாகத் திகழ்கிறது, சாரம் சுப்பிரமணியர் ஆலயம். பழைமையான மயிலம் முருகனை, ஆண்டு தோறும் மாசிமகத்திற்கு வரவேற்று விருந்தோம்பல் செய்யும் ஆலயமாக இது விளங்குகின்றது. அதுபோல கந்தர் சஷ்டி மற்றும் சூரசம்ஹாரத்திற்கும் பெயர் பெற்ற தலமாகவும் திகழ்கின்றது.
1880 -இல் இக்கோயிலின் எதிரில் அரசமரத்தடி விநாயகரும் வீற்றிருக்க, அவரையும் இப்பகுதி மக்கள் வழிபட்டு வந்தனர். அவரை முத்து விநாயகர் என்று அழைத்தனர்.
1907ஆம் ஆண்டில் தேவனூர் கிராமத்தைச் சேர்ந்த சனி
வீராசாமி பிள்ளை என்பவர், முருகப்பெருமான் மீது பக்தி கொண்டு முத்து விநாயகருக்கு அருகில் முருகப்பெருமானை நிறுவிட விரும்பினார். மாமல்லபுரத்தில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் சிலா வடிவங்களைச் செய்து எடுத்து வந்து, அதனை முத்து விநாயகரின் பின்புறம் வைத்து ஆலயம் எழுப்பினார். தன் சொந்த ஊரான தேவனூரில் உள்ள இருபது காணி நிலத்தை இக்கோயிலுக்குத் தானமாகவும் எழுதி வைத்தார்.
சனிவீராசாமி பிள்ளை ஈடுபாட்டினால் உந்தப்பட்ட நாராயணசாமி என்ற அடியார், புதுச்சேரி அருகேயுள்ள பட்டானூரில் உள்ள தனது 23 காணி நிலத்தைத் தானமாகத் தந்து, சஷ்டி உற்சவம், சூரசம்ஹாரம் உள்ளிட்ட விழாக்களின் உபயதாரராக விளங்கினார். இதனையடுத்து, பல்வேறு முருகன் அடியார்களும், செல்வந்தர்களும் நிலதானம், பொருள்தானம் அளித்தனர். 2001}இல் வைத்தீஸ்வரன், தையல்நாயகி, தட்சிணாமூர்த்தி, சண்டிகேசுவரர், ஐயப்பன் சந்நிதிகள் அமைக்கப்பட்டு குடமுழுக்கு நடந்தேறியது.
ஐப்பசியில் சஷ்டிவிழா, பத்து நாள் பிரம்மோற்சவம் வெகுவிமரிசையாக நடத்தப்படுகின்றன. இதில் சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் முக்கிய விழாக்களாக விளங்குகின்றன. மாசிமகத்திற்கு புதுச்சேரி வரும் மயிலம் முருகனை வரவேற்று, சாரம் முருகன் ஆலயத்தில், மகாஅபிஷேகம் நடத்தப்படுகின்றது. பிறகு மயிலம் முருகன், சாரம் முழுவதும் வீதியுலா வருவார். மயிலம் திரும்பும் போது மீண்டும் இங்கு வந்து அபிஷேகம் ஏற்பது நூறு ஆண்டுகளைக் கடந்த வழக்கமாக உள்ளது.
இத்தலத்து மாரியம்மனுக்கு, ஆடி வெள்ளிக்கிழமைகளில் விழாவும், சித்திரை முதலாம் நாள் வீதியுலாவும் நடத்தப்படுகின்றது.
இவ்வாலயத்து முருகன் தன்னை நாடிவரும் அடியார்களின் குறை தீர்க்கும் வள்ளலாக விளங்குகின்றான். தடைகளை நீக்கி திருமணப்பேறு, மகப்பேறு அருள்வதில் வல்லவனாகத் திகழ்கின்றான். புதுச்சேரி நகரில், சாரம் பகுதியில் சுப்பிரமணியர் கோயில் அமைந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.