வெள்ளிமணி

சந்ததி பேறு அருளும் சங்கர ராமேஸ்வரர்

வரலாற்றுச் சிறப்பும் தொழில் வளமும் மிக்க துறைமுக நகரம் தூத்துக்குடி.

இணையதளச் செய்திப் பிரிவு

வரலாற்றுச் சிறப்பும் தொழில் வளமும் மிக்க துறைமுக நகரம் தூத்துக்குடி. இந்நகரத்தின் மையப்பகுதியில் ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது, அருள்மிகு பாகம் பிரியாள் சமேத சங்கர ராமேஸ்வரர் திருக்கோயில்.

இங்கு கோயில் அமைந்ததன் பின்னணியில் ஒரு புராணச் சம்பவம் உள்ளது.

திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் முடிந்தவுடன், தனது மகளான தெய்வானையை முருகனுக்கு மணம் செய்து வைக்க நினைத்தார், இந்திரன். அந்தத் திருமணத்தை திருப்பரங்குன்றத்தில் நடத்தி வைக்க விரும்பிய ஈசன், அங்குச் செல்லும் வழியில் இக்கோயில் அமைந்துள்ள பகுதியில் இருந்த பசுஞ்சோலையில் தங்கியிருந்தார்.

அப்போது அன்னை உமாதேவி அவரை வணங்கி, திருமந்திரத்தை உபதேசிக்கும்படி வேண்டினாள். மந்திரம் ஓத, கடல் அலையின் பேரிரைச்சலும், பனை மரங்களின் சலசலப்பும், குயவன் மண்பாண்டம் தட்டும் ஓசையும் இடையூறாக இருந்ததால், ஈசன் அவற்றை நிறுத்தி, அம்பிகைக்கு திருமந்திரத்தை உபதேசித்தார். அன்று முதல் திருமந்திர நகர் என அழைக்கப்பட்ட இவ்வூரில் காசியப முனிவர் சிவலிங்கத்தை நிறுவி, அனைவரும் வழிபடச் செய்தார். பிற்காலத்தில் இந்த ஊர் தூத்துக்குடி என அழைக்கப்பட்டது.

இத்தலத்து இறைவன் சங்கர ராமேஸ்வரர் என்ற திருநாமம் கொண்டது எப்படி?

திருமந்திர நகருக்கு அண்மையில் உள்ள கயத்தாரை தலைநகராகக் கொண்டு சங்கர ராம பாண்டியன் என்ற சிற்றரசன் ஆட்சி செய்து வந்தான். சிறந்த சிவபக்தனான அவனுக்கு எல்லாப்பேறுகள் வாய்த்தாலும் சந்ததி பேறு மட்டும் கூடிவரவில்லை. அதனால் தான் மனைவியுடன் காசி சென்று புனித கங்கையில் நீராடி மகவு வேண்டி மகேசனை வணங்கினான். அப்போது இறைவனின் அருள் வார்த்தைகள் அசரீரியாக ஒலித்தன.

அதன்படி, திருமந்திர நகரில் காசியப முனிவரால் ஸ்தாபிதம் செய்து பூஜிக்கப்பட்ட சிவலிங்கப்பெருமானுக்குக் கோயில் எழுப்பினார் அரசன். கருணைக் கடலான பரமனின் அருளால், அரசி கருவுற்றார். ஆண் மகவொன்றைப் பெற்றெடுத்தாள்.

சங்கரராம பாண்டியன் அரனுக்குக் கோயில் அமைத்து வழிபட்டதால் அன்று முதல் இத்தலத்து இறைவனை சங்கர ராமேஸ்வரர் என்று பக்தர்கள் அழைத்து வழிபடத் தொடங்கினர்.

கிழக்கு நோக்கிய கருவறையின் இரு புறமும் துவாரபாலகர்கள் கம்பீரமாகக் காட்சிதர, உள்ளே நடு நாயகராக சிவலிங்கத் திருமேனியராய் அமைந்து ஆசியளிக்கிறார் சங்கர ராமேஸ்வரர். பிள்ளைப்பேறு வேண்டி வழிபடுவோருக்கு குழந்தை வரம் அருளும் பெரும் வரப்பிரசாதி. அவருக்கு முன்புறமாக தென்பகுதியில் அனுக்ஞை விநாயகரும், வடபகுதியில் முருகனும் வீற்றிருக்கிறார்கள். தெற்கு நோக்கிய சந்நிதியில் அழகிய மலர்ச்செண்டை ஏந்தி நின்ற கோலத்தில் பாகம் பிரியாள் அன்னை தரிசனம் தருகிறார்.

கோயிலின் முதல் நுழைவாயிலைக் கடந்தவுடன் உள்ளது அபிஷேகம் மண்டபம். திருவாதிரைத் திருநாளில் நடராஜர் அபிஷேகமும், சித்திரைத் திருநாளில் ஆறுமுகனுக்கு அன்னாபிஷேகமும் நடைபெறுகிறது.

இரண்டாவது நுழைவாயிலின் இருபுறமும் விநாயகருக்கும் சுப்பிரமணியருக்கும் தனித்தனி சந்நிதிகள் உள்ளன. கோயிலினுள் நுழைந்தவுடன் பலிபீடமும் செப்புத் தகடு போர்த்திய கொடி மரமும், அதன் முன்பாக சுவாமியை நோக்கி நந்தியும் உள்ளன. தொடர்ந்து சூரிய பகவான் சந்நிதி, முதல் சுற்றின் தென்பகுதியில் அகத்தியர், சமயக் குரவர்கள், சந்தானக்குரவர்களுக்கு சந்நிதியும் உள்ளன.

அம்பாள் சந்நிதிக்கு முன்புள்ள தெற்கு வாசலை அடுத்து ஜுரதேவர், காந்தாரி அம்மை, 63 நாயன்மார்கள், சொக்கநாதர், மீனாட்சியும் எழுந்தருளியுள்ளனர். கன்னி

மூலையில் விநாயகர், மேற்புறச் சுற்றில் பஞ்சலிங்கங்கள், கன்னி மூலையில் சுப்பிரமணிய சுவாமி சந்நிதியும், வடபுறச் சுற்றில் வள்ளி, தெய்வானை சமேத ஆறுமுகப்பெருமான், கலைமகள், திருமகள், சனிபகவானுக்கு தனித்தனி சந்நிதிகளும்; வடகிழக்கு மூலையில் சிவகாமி அம்பாள் உடனுறை நடராஜர் சந்நிதியும், அடுத்து பைரவரின் தனிச் சந்நிதியும், நுழைவாயிலையொட்டி சந்திரனுக்கு சந்நிதியும், நவகிரகங்களுக்கு தனி மண்டபத்துடன் அமைந்த சந்நிதி

களும், கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்கை, சண்டேஸ்வரர் சந்நிதிகளும் அமைந்துள்ளன. இக்கோயிலில் ஒவ்வொரு சந்நிதியும் தனி விமானங்களுடன் திகழ்வது தனிச்சிறப்பாகும்.

உள்புறச் சுற்றில் அனைத்து சந்நிதிகளிலும் வழிபட்டு மூலவர் சங்கர ராமேஸ்வரர் சந்நிதி பக்கம் திரும்பி வணங்குவது, ஓம் என்ற பிரணவ எழுத்து வடிவில் வலம் வந்தது போன்று அமையும். உள்சுற்றில் தென்புறமுள்ள கல்யாண மண்டபத்தின் தூண் ஒன்றில் ராமபிரானின் ஜாதகம் பொறிக்கப்பட்டுள்ளது சிறப்பு.

காலை 6 மணியிலிருந்து பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணியிலிருந்து இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும் இக்கோயிலில் தமிழ் வருடப் பிறப்பன்று சுவாமி, அம்பாள் மற்றும் அனைத்து சந்நிதிகளின் தெய்வத்திருமேனிகளுக்கும் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

சித்திரைப் பெருவிழா எனப்படும் பிரம்மோற்சவம் 10 நாள்கள் நடைபெறும். கார்த்திகை நட்சத்திரத்தில் 108 திருவிளக்கு பூஜை, பெüர்ணமி பூஜை என ஒவ்வொரு மாதமும் பல விழாக்கள் இவ்வாலயத்தில் நடைபெறுகின்றன.

தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையம், பழைய, புதிய பேருந்து நிலையங்களுக்கு அருகில் சங்கர ராமேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இதையொட்டியே பெருமாள் கோயிலும் உள்ளது.

மு. வெங்கடேசன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விடைபெற்ற மிக் 21 போர் விமானங்கள் - புகைப்படங்கள்

மெட்ரோவில் வேலை என நம்பி ஏமாற வேண்டாம்

ஐ.நா.வில் நெதன்யாகு உரை! கூட்டாக வெளிநடப்பு செய்த தலைவர்கள்!

சூப்பர் 4 சுற்று கடைசிப் போட்டி: இந்தியா பேட்டிங்!

6 வாரங்களில் விஜய் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு | செய்திகள்: சில வரிகளில் | 26.9.25

SCROLL FOR NEXT