மதுரையில் பிரபலமான கோயில்களுள் ஒன்று, பாண்டி முனீஸ்வரர் கோயில். இங்கு சதுர வடிவிலான கருவறையில் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார் "பாண்டி முனீஸ்வரர்'.
நெற்றியில் விபூதிப் பட்டை, மிரட்டும் பெரிய விழிகள், முறுக்கு மீசை, தோள்களைத் தொடும் சங்கிலி போன்ற கூந்தல், பத்மாசனத்தில் கம்பீரமாகக் காட்சி தரும் பாண்டிமுனி, மதுரைக்கு மட்டுமல்லாமல், சுற்றியிருக்கும் பல மாவட்ட மக்களின் குலதெய்வமாகவும் விளங்குகிறார்.
தல வரலாறு: இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தம்பதியர் கரூரிலிருந்து மதுரைக்குக் குடிபெயர்ந்தனர். வழியில் இருட்டிவிட்டதால், தற்போதைய மாட்டுத்தாவணிக்கு அருகேயுள்ள மேலமடையில் உறங்கினர்.
இரவு, அப்பெண்ணின் கனவில் நீண்ட தாடியுடைய முனிவர் ஒருவர் வந்து, தான் மதுரையை ஆண்ட பாண்டியன் நெடுஞ்செழியன் எனவும், கண்ணகியின் கணவன் கோவலனுக்கு அநீதி இழைத்த பாவத்துக்காக மறுபிறப்பெடுத்து, பாவத்தின் நிவர்த்தியாக இதே இடத்தில் ஈசனை நோக்கி எட்டடி மண்ணுக்குள் தியானம் செய்வதாகவும், தன்னை மீட்டெடுத்து வழிபட்டால், அவர்கள் குடும்பத்தை வாழவைப்பதாகவும் கூறியுள்ளார்.
காலையில் தன் கணவனிடம் விஷயத்தைச் சொல்லி, ஊர்க்காரர்களை அழைத்துவரச் சொன்னாள். அவர்களும் வந்து அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தபோது எட்டடி மண்ணுக்குள் ஜடாமுடி கொண்ட ஒரு வீரன் பத்மாசனத்தில் அமர்ந்திருப்பது போன்ற ஒரு சிலை கிடைத்தது. அங்கேயே அந்தச் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட ஆரம்பித்தனர்.
இக்கோயிலில் பாண்டி முனீசுவரர் மூலவராகவும், விநாயகர், சமய கருப்பசாமி, ஆண்டிச்சாமி, சுப்பிரமணியர் ஆகியோர் உப தெய்வங்களாகவும் வழிபடப்
படுகின்றனர்.
சமய கருப்பு: இக்கோயிலின் உபதெய்வமான சமய கருப்பசாமி பற்றி சுவையான கதை உண்டு. ஒரு முறை, வேட்டைக்குச் செல்லும் முன்பு ஆங்கிலேயர் ஒருவர் இக்கோயிலில் உள்ள சமய கருப்பசாமியிடம் வந்து, தான் இன்றைக்கு எத்தனை மிருகங்களை வேட்டையாடுவேன் எனக் குறி கேட்டுள்ளார். அதற்கு சமய கருப்பசாமியிடமிருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லையாம்.
அன்று முழுவதும் வேட்டையாடிவிட்டு எந்த மிருகமும் கிடைக்கவில்லை என்பதனால் கோபத்துடன் திரும்பி வந்த ஆங்கிலேயர், அந்தச் சிலையின் கைகளையும் தலையையும் உடைத்துவிட்டுச் சென்றாராம்.
பின்னர், தனது இருப்பிடத்துக்குச் சென்று கொண்டிருந்த அந்த ஆங்கிலேயர், கிராம எல்லையைத் தாண்டும் முன்பே அவரும் அவரது குதிரையும் கல்லாயினர். இதன் காரணமாகவே சமய கருப்பசாமி இன்று வரை கரம் மற்றும் சிரமின்றிக் காணப்படுகின்றார்.
சமய கருப்பன் துடியான சாமி. இந்த ஆலயத்தில் இவருக்குத்தான் பலி இடப்படுகிறது. பாண்டிமுனிக்கு பொங்கல் போன்ற சைவ உணவுகளே படையல் இடப்படுகின்றன. அதேபோன்று ஆண்டி சாமிக்கு வெண்பொங்கலும் மாம்பழங்களுமே பிடித்தமான நிவேதனம்.
இக்கோயிலில் பாண்டிக்குக் கட்டுப்பட்டவர் ஆண்டி. அவருக்கு சுருட்டு வைத்து பக்தர்கள் வேண்டிக் கொள்வார்கள். ஆண்டிக்கு விருப்பமானது மாம்பழ பூஜை. பாண்டிக்குக் காவலாக இருப்பது சமய கருப்பு சாமி.
கோயிலுக்கு வருபவர்கள், முதலில் விநாயகரை வழிபட்டு பின்னர் பாண்டி முனீசுவரரை வழிபடுகின்றனர். அவருக்கு வெண்ணாடை சாத்தி, சர்க்கரையில்லா பொங்கல், பழங்கள் மற்றும் தேங்காய் போன்றவைகளைக் கொண்டு வழிபடுகின்றனர்.
பாண்டிமுனியை நாடிவந்த காரியம் நிறைவேறும் என்கிறார்கள். துஷ்ட சக்திகளால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஆலயம் வந்தால்போதும், அனைத்தும் விலகி ஓடும். நன்மைகள் அதிகரிக்கும். குழந்தை இல்லாதவர்கள் பாண்டிமுனியை வணங்கித் தொட்டில் கட்டி வேண்டினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். தொழிலில் நஷ்டம், நோய், எதிரிகளால் பிரச்னை என எதுவாக இருந்தாலும், பாண்டிமுனியின் சந்நிதிக்கு வந்து வணங்கினால் விரைவில் நிவாரணம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
நேர்த்திக்கடன் செய்ய வரும் பழைய பக்தர்கள், கோரிக்கை வைப்பதற்காக வரும் புதிய பக்தர்கள் என எல்லா நாளும் திருவிழாவாக இருக்கிறது பாண்டி
முனிகோயில்.
காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை தரிசனத்துக்காகத் திறந்திருக்கும் பாண்டிமுனி கோயில், மதுரை எம்ஜிஆர் பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் மேலமடை பகுதியில் அமைந்துள்ளது.
- சோழவந்தான் ஜெனகராஜ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.