முகப்பு
உலகம்

வெளிநாட்டவர்கள் மலேசியாவில் வேலை இழக்க நேரிடும்

புத்ரஜெயா (மலேசியா), ஜன.15: மலேசியாவில் கட்டுமானம், வீட்டுவேலை, ஓட்டல் வேலை போன்ற தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்குப் பதிலாக உள்நாட்டுத் தொழிலாளர்கள் வேலையில் அமர்த்தப்பட உள்ளதாக மலேசியாவின் மனிதவள மே

Updated On : 27 டிசம்பர், 2023 at 2:23 PM
பகிர்:

புத்ரஜெயா (மலேசியா), ஜன.15: மலேசியாவில் கட்டுமானம், வீட்டுவேலை, ஓட்டல் வேலை போன்ற தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்குப் பதிலாக உள்நாட்டுத் தொழிலாளர்கள் வேலையில் அமர்த்தப்பட உள்ளதாக மலேசியாவின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் எஸ். சுப்பிரமணியம் தெரிவித்தார்.

புத்ரஜெயாவில் இந்தியப் பத்திரிகையாளர்களிடம் இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

வேலை செய்வதற்கென விசா பெற்று வந்திருப்பவர்கள் 15 லட்சம் பேர். இதுதவிர ஏற்கெனவே வேலைக்கென வந்து விசா காலம் முடிந்த பிறகும் வெளியேறாதவர்கள், பக்கத்து நாடுகளில் இருந்து சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என சட்டவிரோதத் தொழிலாளர்கள் 10 லட்சம் பேர் உள்ளனர்.

சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை இங்குள்ள நிறுவனங்களும், சிறிய முதலாளிகளும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். அதிக சம்பளம் தர வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்படுவதில்லை. இதுபற்றி தொழிலாளர்களும் மற்ற அதிகாரிகளிடம் புகார் தர முடியாமல் இருக்கின்றனர்.

எல்லோரும் சட்டபூர்வமான தொழிலாளர்களாக இருந்தால், பாதிப்புகள் வரும்போது அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க முடியும். இப்போது அப்படியொரு சூழ்நிலை இல்லாத காரணத்தால், ஓட்டல்கள், வீட்டு வேலை செய்வோர், கட்டுமானத் தொழில், தோட்டத் தோழில் போன்ற கீழ்நிலைத் துறைகளில் குறைவான சம்பளம் மட்டுமே தரப்படுகிறது. சம்பளம் குறைவு என்பதால், மலேசியத் தொழிலாளர்கள் இந்த வேலைக்குச் செல்வதில்லை.

எனவே குறைந்தபட்ச சம்பள அளவை உயர்த்துவது தொடர்பாக அரசு விரைவில் விதிமுறைகளை உருவாக்கவுள்ளது. அதன்பிறகு வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குப் பதிலாக உள்நாட்டுத் தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்படுவர்.

இருந்தபோதிலும், தகவல் தொழில்நுட்பத் துறைக்கு இது பொருந்தாது. வெளிநாடுகளைச் சேர்ந்த 40 ஆயிரம் பேர் இத் துறையில் வேலை பார்க்கின்றனர்.

மலேசிய விதிகளின்படி அவர்கள் நடந்து கொண்டால் எந்தப் பிரச்னையும் இருக்காது.

பாரபட்சம் இல்லை: மலேசியாவைப் பொருத்தவரை உள்நாட்டுத் தொழிலாளர்களுக்கு உரிய எல்லா சட்டங்கள், சலுகைகளும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கும் பொருந்தும். இதில் பாரபட்சம் ஏதும் காட்டப்படுவதில்லை.

வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கே சம உரிமை அளிக்கப்படும்போது, உள்நாட்டில் சில பிரிவினர், தங்களை அரசு பாரபட்சமாக நடத்துகிறது என்று கூறுவது சரியானதல்ல.

பகுதிநேர வேலை : இல்லத்தரசிகள், ஓய்வுபெற்றோர், மாணவர்கள், வேலை கிடைக்காதோர் பிரிவில் நாட்டில் 65 லட்சம் பேர் இருக்கின்றனர். வேலைவாய்ப்புத் துறையில் இவர்களின் சேவையையும் பயன்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

அதன்படி, இரண்டு முதல் நான்கு மணி நேரம் மட்டும் வேலை செய்பவர்களுக்கும் பணியாளர் சட்ட விதிகள் பொருந்தும் வகையில் புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட உள்ளன.

பகுதிநேர வேலை செய்பவர்கள், தங்கள் வேலையை சிறப்பாகச் செய்வார்கள் என்று வேலைதரும் நிறுவனங்களுக்கு நம்பிக்கை வந்துவிட்டால், இந்தப் பிரிவில் இருந்து நிறைய பேர் வேலைகளில் ஈடுபட முடியும்.

அதற்கேற்ப, வீட்டுச் சூழலில் உள்ள அலுவலகங்களை உருவாக்குவது பற்றியும் பரிசீலிக்கப்படுகிறது.

வீட்டில் இருந்தபடியே வேலை பார்க்கும் திட்டமும் அரசின் பரிசீலனையில் உள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளால் பணியாளர் பற்றாக்குறை சமாளிக்கப்படும் என்று அமைச்சர் கூறினார். மனிதவள மேம்பாட்டுத் துறையின் செயலாளர் ஆர். சேகராஜா மற்றும் அதிகாரிகளும் பேட்டியின்போது உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.