முகப்பு
உலகம்

நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் பிரதமர்

நவாஸ் பிரதமராக பதவியேற்பது இது 3வது முறை. நாடாளுமன்றத்துக்கு சனிக்கிழமை (மே 11) தேர்தல் நடைபெற்றது.

Updated On : 13 மே 2013, 4:58 am IST
பகிர்:

நவாஸ் பிரதமராக பதவியேற்பது இது 3வது முறை. நாடாளுமன்றத்துக்கு சனிக்கிழமை (மே 11) தேர்தல் நடைபெற்றது. பாகிஸ்தானின் 66 ஆண்டுகால வரலாற்றில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஒன்றின் பதவிக்காலம் முடிந்து அடுத்து தேர்தல் மூலமாகவே மற்றொரு அரசு அமைவது இதுவே முதல்முறை.

தேர்தலை சீர்குலைக்க தலிபான் பயங்கரவாதிகள் விடுத்த மிரட்டலை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் வாக்களித்து, தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர்.

சனிக்கிழமை மாலையில் வாக்குப்பதிவு முடிவடைந்த சிறிது நேரத்திலேயே வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. ஆரம்பத்தில் இருந்தே பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சி (பி.எம்.எல்.-என்) முன்னிலை வகித்து வந்தது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி இரண்டாம் இடத்தில் வந்தது.

Advertisement

Advertisement

மொத்தமுள்ள 272 இடங்களில் 264 இடங்களுக்கான முன்னிலை நிலவரங்களின்படி, நவாஸ் ஷெரீப் கட்சி 125 இடங்களுக்கு மேல் கைப்பற்றும் என்று தெரிகிறது. இம்ரான் கான் கட்சிக்கு 34 இடங்களும், ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு 32 இடங்களும் கிடைக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில சுயேச்சை எம்.பி.க்கள் மற்றும் ஜாமியத் உலேமா-இ-இஸ்லாம் போன்ற வலதுசாரிக் கொள்கையுடைய உதிரிக்கட்சிகளின் ஆதரவுடன் நவாஸ் ஷெரீப் புதிய அரசை அமைப்பார் என்று தெரிகிறது.

நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 272 இடங்களில், பெரும்பான்மை பலத்துக்கு 137 எம்.பி.க்கள் தேவை. நவாஸ் கட்சிக்கு 125 இடங்கள் கிடைக்கும் நிலையில், அதற்கு 12 இடங்களில் முன்னிலை வகிக்கும் எம்.கியூ.எம். கட்சியின் ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய தலைவர்கள் தோல்வி: பாகிஸ்தான் அரசியலில் பழுத்த அனுபவம் கொண்ட பல தலைவர்களும் இம்முறை தேர்தலில் தோல்வியைச் சந்தித்துள்ளனர். ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான ராஜா பர்வேஸ் அஷ்ரப், ராவல்பிண்டி தொகுதியில் சுமார் 60 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார். அங்கு, நவாஸ் ஷெரீப் கட்சி வேட்பாளர் ராஜா முகமது ஜாவெத் வெற்றி பெற்றுள்ளார்.

முன்னாள் செய்தி தொடர்புத்துறை அமைச்சர்களான கமர் ஸமன் கைரா, பிர்தூஸ் ஆஷிக் அவான், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் பஞ்சாப் மாகாணத் தலைவர் மன்சூர் அகமது, அக்கட்சியின் முன்னாள் மத்தியத் தலைவர் நசார் முகமது, முன்னாள் பிரதமர் கிலானியின் இரண்டு மகன்களான அலி மூசா, அப்துல் காதிர் ஆகியோரும் தோல்வியைத் தழுவியுள்ளனர். தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான் கான், லாகூர் தொகுதியில் தோல்வியடைந்தார். எனினும், அவர் பஞ்சாப் மாகாணத்தின் மியான்வாலி, பெஷாவர், ராவல்பிண்டி ஆகிய 3 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளார். பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி, சிந்து மாகாணத்தில் உள்ள உமர்கோட் தொகுதியில் தோல்வியைத் தழுவினார்.

1990-1993 மற்றும் 1997-1999ல் பிரதமராக பதவி வகித்தவர் நவாஸ் ஷெரீப். முதல் பதவிகாலத்தில் ஊழல் புகார்களால் இடையிலேயே ஆட்சியை இழந்தார். இரண்டாவது பதவி காலத்தில் அப்போதைய ராணுவ தளபதி பர்வேஸ் முஷாரப் தலைமையில் நடந்த புரட்சி காரணமாக இடையிலேயே ஆட்சி இழந்தார்.

இந்தியாவில் உள்ள நவாஸின் கிராமத்தில் கொண்டாட்டம்

சண்டீகர், மே 12: பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி வெற்றி பெற்றுள்ளதை இந்தியாவில் உள்ள அவரது சொந்த கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினர். இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்பு ஷெரீப் குடும்பத்தினர், அமிருதசரஸ் அருகேயுள்ள ஜாட்டி உம்ரா கிராமத்தில்தான் வசித்து வந்தனர். எனவே அந்த கிராம மக்களுக்கு ஷெரீப் கட்சியின் வெற்றி உற்சாகத்துக்கும், கொண்டாட்டத்துக்கும் உரிய செய்தியாக அமைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.