உலகம்

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 97 பேர் பலி

DIN

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் புதன்கிழமை நேரிட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 97 பேர் உயிரிழந்தனர். மேலும் 200 பேர் காயமடைந்தனர்.
சுமத்ரா தீவில் உள்ள அசே மாகாணத்தின் பெடி ஜெயா மாவட்டத்தில் புதன்கிழமை அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேரிட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவான இந்நிலநடுக்கத்தால், அப்பகுதியில் உள்ள கட்டடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதையடுத்து, வீடுகள், கட்டடங்களை விட்டு பொதுமக்கள் அலறியடித்தபடி வெளியேறினர்.
இந்நிலநடுக்கத்தில், அப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான வீடுகள், கடைகள், மசூதிகள் இடிந்து தரைமட்டமாகி விட்டன. இதில் இடிபாடுகளில் சிக்கி 97 பேர் இதுவரை உயிரிழந்து விட்டனர். மேலும் 200 பேர் காயமடைந்துள்ளனர். ஏராளமானோர் கட்டட இடிபாடுகளில் சிக்கியிருப்பதால் அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஆரம்பத்தில் நிலநடுக்கத்தில் 52 பேர் மட்டும் பலியானதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் மீட்புப் பணியில் இந்தோனேசிய ராணுவம் ஈடுபட்டதைத் தொடர்ந்து, இந்த எண்ணிக்கை இருமடங்கு அதிகரித்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து இந்தோனேசிய ராணுவத்தின் அசே பிராந்தியத் தலைவர் டடாங் சுலைமான், ஏஎஃபி செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், "இதுவரை 97 பேர் பலியாகியுள்ளனர்; இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம். மீட்புப் பணியின்போது சில இடங்களில் 5 சடலங்களும், சில இடங்களில் 10 சடலங்களும் கிடைத்த வண்ணம் இருக்கின்றன' என்றார்.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில், நூற்றுக்கணக்கானோர் தங்குவதற்கு இடமும், குடிநீர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
இதையடுத்து, அவர்களுக்கு உதவும் வகையில், தாற்காலிக நிவாரண முகாம்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளில், இந்தோனேசிய ராணுவ வீரர்கள் 1,000 பேரும், அந்நாட்டு போலீஸார் 900 பேரும் ஈடுபட்டுள்ளனர்.
சுனாமி பீதி: நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சுனாமி பேரலை தாக்கலாம் என்று ஒருவித பீதி நிலவியது. இதைத் தொடர்ந்து, அப்பகுதியை விட்டு வெளியேறி மேடான பகுதியில் சிலர் தஞ்சமடைந்தனர்.
இந்தோனேசியா அருகே நடுக்கடலில் கடந்த 2004-ஆம் ஆண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. இதையடுத்து, கடலில் எழுந்த சுனாமி அலைகள், இந்தோனேசியா, இந்தியா, இலங்கை உள்ளிட்ட இந்தியப் பெருங்கடலில் இருக்கும் நாடுகளின் கடலோரப் பகுதிகளை தாக்கின. இதில் இந்தோனேசியாவில் மட்டும் 1,70,000 பேர் பலியாகினர் என்பது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிர்ச்சியளிக்கும் அல்லு அர்ஜுன் சம்பளம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரூ.4 கோடி பறிமுதல்: ஆவணங்கள் சிபிசிஐடி-யிடம் ஒப்படைப்பு

நீதானே பொன் வசந்தம்.. சமந்தா பிறந்தநாள்!

குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர்

SCROLL FOR NEXT