நைஜீரியாவில் கடத்தப்பட்ட 2 இந்தியர்கள் விடுவிப்பு
நைஜீரியாவில் கடந்த மாதம் கடத்தப்பட்ட 2 இந்தியர்களும் பத்திரமாக மீட்கப்பட்டு விட்டதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புது தில்லி: நைஜீரியாவில் கடந்த மாதம் கடத்தப்பட்ட 2 இந்தியர்களும் பத்திரமாக மீட்கப்பட்டு விட்டதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மங்கிப்புடி சாய் ஸ்ரீனிவாஸ், கர்நாடகத்தைச் சேர்ந்த அனீஷ் சர்மா ஆகிய இருவரும், போகோ நகரில் கடந்த மாதம் காரில் சென்றுகொண்டிருந்தபோது ஆயுதம் ஏந்திய குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டனர். அவர்கள் இருவரும் இன்று காலை 10.30 மணியளவில் விடுவிக்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
இருவரும், தத்தமது குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேசியுள்ளனர். ஷர்மாவின் மனைவி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். மேலும், இருவரையும் விடுவிப்பது தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையை உடனுக்குடன் தெரிவித்து வந்ததற்கும் பாராட்டுகளைக் கூறியதாக வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் விகாஷ் ஸ்வரூப் கூறினார்.
Advertisement