சக்தி வாய்ந்த அணு குண்டு சோதனையை வட கொரியா வெள்ளிக்கிழமை நிகழ்த்தியது.அந்த நாடு நிகழ்த்தும் 5-ஆவது அணு குண்டு சோதனை இதுவாகும். இந்த சோதனை வெற்றிகரமாக இருந்தது என்று வட கொரியா அறிவித்தது. ஏவுகணையில் அணு குண்டு பொருத்தி வெற்றிகரமாகச் செலுத்தும் திறனை இதன் மூலம் பெற்றதாக அந்நாடு அறிவித்தது.
வட கொரிய அரசு தொலைக்காட்சியில் இது தொடர்பாக வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டது. அரசு தொலைக்காட்சி செய்தியில் தெரிவிக்கப்பட்டதாவது:
நாட்டின் வட பகுதியில் உள்ள அணு குண்டு பரிசோதனை மையத்தில் நமது அணு விஞ்ஞானிகள் வெள்ளிக்கிழமை புதிய அணு குண்டு சோதனை நிகழ்த்தினார்கள். அது வெற்றிகரமாக இருந்தது.
அணு குண்டு சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்திய விஞ்ஞானிகளுக்கு நமது கட்சி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது என்று வட கொரிய தொலைக்காட்சி செய்தியில் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே வட கொரிய அரசு செய்தி நிறுவனத்தின் (கே.சி.என்.ஏ.) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது: தற்போது நிகழ்த்தப்பட்ட அணு குண்டு சோதனை மூலம், ஏவுகணையில் பொருத்தி செலுத்தக் கூடிய அணு ஆயுதத்தை உருவாக்க முடியும் என்பது உறுதியாகியுள்ளது. அந்த அணு ஆயுதத்தின் வடிவம் எவ்வாறு இருக்க வேண்டும், அதன் திறன் என்னவாக இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விவரங்கள் குறித்து விஞ்ஞானிகள் இப்போது உறுதி செய்துள்ளனர் என்று வட கொரிய அரசு செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ. தெரிவித்தது.
வட கொரியா நிகழ்த்தும் ஐந்தாவது அணு குண்டு சோதனை இது. முதல் சோதனை 2006-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நிகழ்த்தப்பட்டது. அடுத்தது, 2009 மே மாதம் நிகழ்த்தப்பட்டது. மூன்றாவது சோதனை 2013-ஆம் ஆண்டு பிப்ரவரியில் நிகழ்த்தப்பட்டது. இவ்வாண்டு ஜனவரியில் 4-ஆவது சோதனை நிகழ்த்தப்பட்டது.
தற்போது நிகழ்த்தப்பட்ட 5-ஆவது அணு குண்டு சோதனையே வட கொரியா இதுவரை நடத்திய சோதனைகளிலேயே மிக சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதன் திறன் 10 கிலோ டன் அளவு என்று தெரிகிறது. இவ்வாண்டு ஜனவரி மாதம் அந்நாட்டு விஞ்ஞானிகள் நிகழ்த்திய 4-ஆவது சோதனை அளவைவிட இது இரு மடங்கு அதிகத் திறன் கொண்டது என்று கருதப்படுகிறது.
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், நீர்மூழ்கியிலிருந்து செலுத்தக் கூடிய ஏவுதளங்கள், நெடுந்தொலைவு பறந்து செல்லும் ஏவுகணைகள் உள்ளிட்டவை தங்களிடம் உள்ளதாக வட கொரியா கூறி வருகிறது.
ஏவுகணைகளில் பொருத்தக் கூடிய சிறிய அளவில் அணு ஆயுதத்தை வட கொரியா உருவாக்கக் கூடுமானால், அமெரிக்க நகரங்களை இலக்கு வைத்து அந்த ஏவுகணைகளை செலுத்தும் திறனை அந்நாடு பெறுவது சாத்தியமாகும்.
இந்த நிலையில், அதுபோன்ற ஏவுகணைகளில் பொருத்தக் கூடிய அணு ஆயுதத் திறனை அந்த நாடு பெற்றிருப்பதாக இப்போது கூறியுள்ளது.
முன்னதாக, வட கொரியா அணு குண்டு பரிசோதனைகளை மேற்கொண்டு வரும் பியூங்கே-ரி பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக உலகெங்கும் உள்ள பல்வேறு புவியியல் ஆய்வு மையங்கள் தெரிவித்தன. ரிக்டர் அளவுகோலில் 5.3 அலகுகளாக இந்த நிலநடுக்கம் பதிவானது. பூமிக்குக் கீழே நிகழ்த்தப்பட்ட அணு குண்டு சோதனை மூலம் ஏற்பட்ட நிலநடுக்கம் இதுவென்று பின்னர் உறுதி செய்யப்பட்டது.
சோதனை தொடர்பாக வட கொரியா அதிக விவரங்களை வெளியிடாத நிலையில், இது வெறும் அணு குண்டு சோதனையா, அல்லது அதைவிட சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் குண்டு சோதனையா என்பது குறித்து அறிய தென் கொரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர்.
இதனிடையே, பல்வேறு புவியியல் ஆய்வு மையங்களிலிருந்து கிடைக்கும் நிலநடுக்க விவரங்களின் அடிப்படையில், இந்த அணு குண்டு சோதனை குறித்து ஆய்வு செய்து வருவதாக தென் கொரிய ராணுவம் தெரிவித்தது.
கொரியா ஜனநாயக மக்கள் குடியரசு என்னும் வட கொரியா நிறுவிய தினமான செப். 9-ஆம் தேதி அணு குண்டு பரிசோதனை நிகழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 1948-ஆம் ஆண்டு செப். 9-ஆம் தேதி வட கொரியா தனி நாடாக உருவானது. அப்போது முதல் ஆண்டுதோறும் அந்த நாளை தேசிய தினமாக வட கொரியா கொண்டாடி வருகிறது.
அழிவை நோக்கி செல்கிறது வட கொரியா-தென் கொரியா கண்டனம்
வட கொரியாவின் அணு குண்டு சோதனை குறித்து தென் கொரிய அதிபர் பார்க் குன்ஹியே வெளியிட்ட கண்டன அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
வட கொரியாவின் அணு குண்டு சோதனை நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது. உலக நாடுகளின் கண்டனத்தையும் மீறி, அணு ஆயுதக் குவிப்பில் ஈடுபட நினைக்கும் அந்நாட்டுத்தலைவரின் பொறுப்பற்ற போக்கு, தன்னையே அழித்துக் கொள்ளும் கொடிய பாதையில் அந்நாட்டை
இட்டுச் செல்கிறது.
தற்போதைய அணு குண்டு சோதனை மூலம் வட கொரியா மேலும்
தனிமைப்படுத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் கொண்டு வரப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
சீனா எதிர்ப்பு
வட கொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையை உறுதியுடன் எதிர்ப்பதாக சீனா தெரிவித்தது.
இது தொடர்பாக சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
வட கொரியாவின் அணு குண்டுப் பரிசோதனைக்கு சீனா தனது உறுதியான எதிர்ப்பைத் தெரிவித்துக் கொள்கிறது. சர்வதேச எதிர்பார்ப்புகளுக்கு விரோதமாக அந்நாடு நடந்து கொண்டுள்ளது.
ஐ.நா. பாதுகாப்புக் குழு தீர்மானங்களுக்கு ஏற்ப வட கொரியா தனது அணு ஆயுதப் பரிசோதனைகளை நிறுத்த வேண்டும். அரசியல்-பாதுகாப்பு நிலவரம் மேலும் மோசமாகும் விதமாக வட கொரியா நடந்து கொள்ளக் கூடாது. கொரிய தீபகற்ப பகுதியை அணு ஆயுதம் இல்லா பிராந்தியமாக மாற்ற சீனா தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளும்' அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் சீனா தனது எதிர்ப்பை வட கொரிய வெளியுறவுத் துறை அமைச்சகம் வழியாகவும் தெரிவித்தது.
ஜப்பான் கண்டனம்
ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: வட கொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனை ஏற்றுக் கொள்ள முடியாதது; இதற்கு ஜப்பான் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. ஜப்பானின் பாதுகாப்புக்கு மிகுந்த அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்தப் பிராந்தியத்தின் அமைதியும் பாதுகாப்பும் கேள்விக்குரியதாகிவிட்டது என்று ஜப்பான் பிரதமர் அபே குறிப்பிட்டார்.
அமெரிக்கா கண்டனம்
வட கொரியாவின் அணு குண்டு சோதனைக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்தார்.
கடும் பின்விளைவுகளை அந்த நாடு சந்திக்க வேண்டி வரும் என்று தனது கண்டன அறிக்கையில் தெரிவித்தார் ஒபாமா. இந்த விவகாரம் குறித்து, தென் கொரிய அதிபருடனும், ஜப்பான் பிரதமருடனும் ஒபாமா அவசர ஆலோசனை நடத்தினார்.
ஐ.நா. அணுசக்தி அமைப்பு கவலை
ஐ.நா.வின் கீழ் செயல்படும் சர்வதேச அணு சக்தி அமைப்பின் தலைவர் யூகியா அமானோ தெரிவித்ததாவது: ஐ.நா. பாதுகாப்புக் குழுவின் தீர்மானங்களுக்கு விரோதமாக இந்த அணு குண்டு சோதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இது மிகவும் கவலை அளிக்கிறது. வட கொரியாவின் அணு சக்திப் பரிசோதனை விவகாரத்தில் அமைதியான முறையில் தீர்வு காண உலக நாடுகளின் ஒத்துழைப்புடன் முயற்சி மேற்கொள்வோம் என்றார் அவர். 2006-இல் நிகழ்த்தப்பட்ட முதல் அணு குண்டு சோதனையைத் தொடர்ந்து, இவ்வாண்டு ஜனவரியில் நடைபெற்ற சோதனை வரை வட கொரியா மீது ஐ.நா. பாதுகாப்புக் குழு 5 பொருளதாரத் தடை உத்தரவுகளைப் பிறப்பித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.