உலகம்

ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகர் என அங்கீகரிப்பதாக டிரம்ப் அறிவிப்பு

DIN

ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
நாட்டு மக்களுக்குத் தொலைக்காட்சியில் ஆற்றிய உரையில் தெரிவித்தது: 
ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகர் என்று அதிகாரபூர்வமாக அங்கீகரிப்பதற்கு இதுதான் சரியான தருணம் என்று முடிவு செய்துள்ளேன். தற்போது டெல் அவிவ் நகரில் உள்ள அந்நாட்டுக்கான அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேம் நகரில் மாற்றி அமைப்பதற்கான ஏற்பாடுகளை உடனடியாகத் தொடங்குமாறு வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட்டிருக்கிறேன். இஸ்ரேல் - பாலஸ்தீன் இடையே அமைதி ஏற்படுவதற்கு இந்த முடிவு உதவும் என்று கருதுகிறேன். அமெரிக்க நலனுக்கு உதவும் விதமாகவும் இந்த முடிவு அமையும்.
இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேம் நகரத்துக்கு மாற்றவும் அந்த நகரை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரிக்கவும் ஜெருசலேம் தூதரக சட்டம் என்ற சட்டத்தை கடந்த 1995-ஆம் ஆண்டு அமெரிக்க நாடாளுமன்ற கீழவை இயற்றியது. இரு தரப்பு எம்.பி.க்களின் ஆதரவும் அந்த சட்டத்துக்கு இருந்தது. இதற்கு மேலவை ஒப்புதலும் கிடைத்தது. ஆனால் அடுத்தடுத்து வந்த அமெரிக்க அதிபர்கள் அந்த சட்டத்தை செயல்படுத்துவதை ஒத்திப்போட்டு வந்தனர்.
பல்வேறு அதிபர்கள் தொடர்ந்து வாக்குறுதி அளித்து வந்தாலும், இவ்வளவு காலம் தள்ளிப்போட்டு வந்த முடிவை நான் எடுத்துள்ளேன். எனது தேர்தல் வாக்குறுதியை நான் நிறைவேற்றியுள்ளேன்.
ஜெருசலேம் நகரம் மூன்று பெரும் மதங்களின் இதயமாக உள்ளது. அது மட்டுமல்லாமல், உலகின் வெற்றிகரமான ஜனநாயகத்தின் இருப்பிடமாகவும் உள்ளது. இஸ்ரேலின் நாடாளுமன்றம், உச்ச நீதிமன்றம், அதிபர், பிரதமர் இல்லங்கள் அந்த நகரில்தான் உள்ளன. இதை மறந்துவிட்டு அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த முடியாது.
இந்த முடிவு மூலம், ஜெருசலேம் நகரில் இஸ்ரேலின் இறையாண்மையை உறுதி செய்யும் எல்லைகள், பிற எல்லைக் கோடு சர்ச்சைகளில் அமெரிக்கா எந்த நிலைப்பாடும் எடுக்கவில்லை.
இஸ்ரேல் - பாலஸ்தீன் என்கிற இரு நாடுகள் அமையும் முடிவு இரு தரப்பினருக்குள் ஏற்படும் பட்சத்தில் அமெரிக்கா அதனை ஏற்கும்.
மலைக்கோயில் - ஹராம் அல் ஷரீப் வழிபாட்டுத் தலம் குறித்து இரு தரப்பினரும் எடுக்கும் முடிவே இறுதியானது.
இஸ்ரேல் - பாலஸ்தீன் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா துணை புரியும். இரு தரப்பினருக்கும் ஏற்புடைய அமைதி ஒப்பந்தம் ஏற்பட அமெரிக்கா உதவும். அத்தகைய அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதற்கு எனது சக்திக்கு உள்பட்ட அனைத்தையும் நான் செய்வேன்.
என்னுடைய இந்த அறிவிப்பை ஏற்காமல் இருப்பது, எதிர்ப்பு தெரிவிப்பது என்பது எதிர்பார்க்கக் கூடியதுதான். ஆனால் பேச்சுவார்த்தை, ஆலோசனைகள் மூலம் தடைகளைக் கடந்து ஏற்புடைய முடிவுக்கு வருவோம் என்றார் அவர்.
ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அறிவிக்கும் உத்தரவை துணை அதிபர் மைக் பென்ஸ் முன்னிலையில் கையெழுத்திட்ட பின்னர் அதனை செய்தியாளர்களிடம் வெளியிட்டார்.
கிழக்கு ஜெருசலேம் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியாக பல்வேறு நாடுகள் கருதுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT