கண்டம் விட்டு கண்டம் பாயும் புதிய ஏவுகணை: வட கொரியா சோதனை வெற்றி: 'அமெரிக்காவைத் தாக்கும் திறன் உள்ளது'
க ண்டம் விட்டு கண்டம் பாயும் சக்தி வாய்ந்த ஏவுகணையை (ஐ.சி.பி.எம்.) வெற்றிகரமாக சோதனை செய்ததாக வட கொரியா செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
க ண்டம் விட்டு கண்டம் பாயும் சக்தி வாய்ந்த ஏவுகணையை (ஐ.சி.பி.எம்.) வெற்றிகரமாக சோதனை செய்ததாக வட கொரியா செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
இந்த ஏவுகணை அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தைத் தாக்க வல்லது என்று அமெரிக்க நிபுணர்கள் தெரிவித்தனர். அமெரிக்க சுதந்திர தினம் ஜூலை 4- ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில், வட கொரியாவின் புதிய சக்தி வாய்ந்த ஏவுகணை சோதனை நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
வட கொரியா செலுத்தும் முதல் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை இதுவாகும்.
வெற்றிகரமான ஏவுகணை சோதனை அறிவிப்பை வட கொரிய அரசுத் தொலைக்காட்சி வெளியிட்டது. அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டதாவது:
ஹுவாஸோங்- 14 ரக ஏவுகணை சோதனையை விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். சோதனையின்போது, அது 2,802 கி.மீ. உயரத்துக்கு விண்ணில் பறந்தது; அது 933 கி.மீ. தொலைவு பறந்து சென்று நடுக்கடலில் விழுந்தது. விண்ணில் செலுத்துதல், இலக்கை அடைதல் உள்ளிட்ட பரிசோதனைகள் வெற்றிகரமாக இருந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
அணு ஆயுத நாடான வட கொரியா இந்த வெற்றிகரமான சோதனையின் மூலம், உலகின் எந்தப் பகுதியையும் தாக்கும் வல்லமையுள்ள கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை உருவாக்கியிருக்கிறது.
ஏவுகணை சோதனையை வட கொரிய அதிபர் கிம் ஜோங்- உன் நேரில் பார்வையிட்டார். வெற்றிகரமான சோதனையை நடத்தியமைக்காக விஞ்ஞானிகளை அவர் பாராட்டினார் என்று அரசுத் தொலைக்காட்சி தெரிவித்தது.
செவ்வாய்க்கிழமை காலை உள்ளூர் நேரப்படி 9 மணிக்கு ஏவுகணை சோதனை நடத்துவதற்கான உத்தரவில் திங்கள்கிழமை அதிபர் கையெழுத்திட்டார். குறித்த நேரத்தில் சோதனை நடைபெற்கத் தெரிகிறது.
வட கொரியாவின் ஏவுகணை சோதனையை அமெரிக்காவும் தென் கொரியாவும் உறுதி செய்தன.
அமெரிக்க பாதுகாப்புப் படையின் பசிபிக் படைப் பிரிவுத் தலைமை மையம் வட கொரியாவின் ஏவுகணை குறித்து தெரிவித்தது:
நிலத்திலிருந்து செலுத்தும் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டிருக்கிறது. இது நடுத்தர ரக ஏவுகணை எனத் தெரிகிறது. செலுத்தப்பட்டதும் 37 நிமிடங்களுக்குப் பறந்து பின்னர் கடலில் விழுந்தது. இந்த ரக ஏவுகணையால் வட அமெரிக்க கண்டத்துக்கு எந்த அச்சுறுத்தலும் கிடையாது என்று தெரிவித்தது.
வட கொரியாவின் பியோங்கான் மாகாணத்திலிருந்து அடையாளம் தெரியாத ஏவுகணை செலுத்தப்பட்டு, ஜப்பான் கடல் என்று அறியப்படும் கிழக்குக் கடலில் விழுந்தது என்று தென் கொரிய ராணுவம் தெரிவித்தது.
ஜப்பான் கடலில் விழுந்தது: ஜப்பான் கடற்கரையிலிருந்து சுமார் 370 கி.மீ. தொலைவில், அந்த நாட்டின் கடல்சார் சிறப்பு வர்த்தக மண்டலத்துக்கு உள்பட்ட பகுதியில், நடுக்கடலில், அந்த ஏவுகணை விழுந்தததாக ஜப்பான் அறிவித்தது.
கடலில் விழுவதற்கு முன்னர் 2,500 கி.மீ.க்கும் அதிகமான உயரத்தை எட்டியது என்று ஜப்பான் கூறியது.
'தாக்குதல் அச்சுறுத்தல் அதிகரித்திருப்பதை இந்தப் புதிய ஏவுகணை சோதனை காட்டுவதாக உள்ளது' என்று ஜப்பான் பிரதமர் ஷின்úஸா அபே கருத்து தெரிவித்தார்.
அமெரிக்காவும், சீனாவும் இந்த விவகாரத்தை தீவிரமாக அணுகி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அடுத்த சில நாட்களில் நடைபெறவிருக்கும் ஜி- 20 உச்சிமாநாட்டின்போது, அமெரிக்கா, தென் கொரியாவுடன் இந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடத்துவோம் என்றும் அவர் மேலும் கூறினார்.
பல்வேறு நாடுகளும் வட கொரியாவின் புதிய ஏவுகணை எட்டிய உயரத்தையும், பறந்த தொலைவையும் உறுதி செய்ததையடுத்து, அந்த நாடு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஐ.சி.பி.எம். ஏவுகணை உருவாக்குவதில் வெற்றி பெற்றுவிட்டதாக விஞ்ஞானிகள் உறுதி செய்தனர்.
அணு ஆயுதத்தை ஏவுகணையில் பொருத்தி, குறிப்பிட்ட இலக்கை நோக்கிச் செலுத்தித் தாக்கும் திறனைப் பெற்றுவிட்டதாக வட கொரியா கூறி வருகிறது.
இந்த நிலையில், தற்போதைய நீண்ட தொலைவு ஏவுகணையின் வெற்றிகர சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், புதிய அச்சுறுத்தலையும் தருவதாக உள்ளது என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்தனர்.
தற்போது கிடைத்திருக்கும் விவரங்களின் அடிப்படையில், அந்த ஏவுகணை 6,700 கி.மீ. தொலைவு பறக்க வல்லதாகத் தெரிகிறது என்று அமெரிக்க விஞ்ஞானி டேவிட் ரைட் கூறினார்.
இவ்வாண்டு அந்நாடு நிகழ்த்தும் 11- ஆவது ஏவுகணை சோதனை இதுவாகும்.
மூடத்தனத்தை முடிவுக்குகொண்டு வர வேண்டும்
வட கொரியாவின் செயல் ஏற்றுக் கொள்ள முடியாதது என்றும் அந்த நாட்டின் மூடத்தனத்துக்கு முடிவு கட்ட வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருக்கிறார். வட கொரியாவின் நட்பு நாடான சீனா, இந்த விவகாரத்தில் கடுமையான முடிவை எடுக்க வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தினார்.
வட கொரியா அணு ஆயுதத் திறன் பெறுவதை தடுப்பதே தனது பிரதான கடமை என்று அமெரிக்க அதிபர் அறிவித்திருந்தார். இந்த நிலையில், சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை அந்நாடு மேற்கொண்ட செய்தி வெளியாகியிருக்கிறது.
இதனிடையே, வட கொரியா விவகாரத்தில் நிலவும் பதற்ற நிலையைத் தணிக்க வல்லரசு நாடுகள் தவறினால், நிலைமை கட்டுக்கடங்காமல் போய்விடும் என்று ஐ.நா.வுக்கான சீனத்தூதர் லியு ஜியேயி நியூயார்க்கில் தெரிவித்தார்.