உலகம்

வெனிசூலா அரசியல் நிர்ணய சபை தேர்தலுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் பொது வாக்கெடுப்பு

DIN

வெனிசூலாவில் நடைபெறவுள்ள அரசியல் நிர்ணய சபை உறுப்பினர் தேர்தலை எதிர்த்து அந்நாட்டு எதிர்க்கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை நடத்திய பொது வாக்கெடுப்பில் 71 லட்சம் பேர் வாக்களித்தனர்.
அதிபருக்கு சர்வாதிகாரம் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அதிகாரங்களை அளிக்க அந்த நாட்டு அதிபர் நிக்கோலஸ் மடூரோ திட்டமிட்டுள்ளார். இதற்காகப் புதிய அரசியல் சாசனத்தை இயற்ற அவர் முடிவு செய்தார். அதனை இயற்றுவதற்கான அரசியல் நிர்ணய சபையில் இடம் பெறும் உறுப்பினர்களின் தேர்தல் வரும் ஜூலை 30-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதற்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மக்கள் ஆதரவை இழந்துவிட்ட அதிபர் மடூரோ பதவி விலகி, புதிய அதிபருக்கான தேர்தல் நடைபெற வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இதனிடையே, புதிய அரசியல் சாசனத்தை இயற்றுவதற்கான அரசியல் நிர்ணய சபைத் தேர்தலை நாட்டு மக்கள் விரும்பவில்லை என்பதைக் காட்டும் விதமாக, எதிர்க்கட்சியினர் பொது வாக்கெடுப்புக்கு ஏற்பாடு செய்தனர். அந்தப் பொது வாக்கெடுப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நாடு முழுவதும் 2,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
காலையில் பொது வாக்கெடுப்பு தொடங்கியதிலிருந்தே ஏராளமானோர் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்தனர். மாலையில் வாக்கெடுப்பு நிறைவடைந்தபோது, 71 லட்சத்துக்கும் அதிகமானோர் வாக்களித்ததாக அறிவிக்கப்பட்டது.
வெனிசூலா மட்டுமல்லாமல், கொலம்பியா, அமெரிக்கா, பிரேஸில், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் வசித்து வரும் வெனிசூலா வம்சாவளியினரும் பொது வாக்கெடுப்பில் வாக்களித்ததாகத் தெரிவிக்கப்பட்டது. எனினும் வாக்களித்தோர் எண்ணிக்கை தனியாக வெளியிடப்படவில்லை.
எதிர்க்கட்சியினர் நடத்திய பொது வாக்கெடுப்பு செல்லாது என்று அதிபர் நிக்கோலஸ் மடூரோ ஏற்கெனவே அறவித்துவிட்டார். வெனிசூலாவின் தேர்தல் ஆணையமும் பொது வாக்கெடுப்பு முடிவுகளுக்கு எந்த சட்ட அங்கீகாரமும் கிடையாது என்று தெரிவித்திருக்கிறது. தேர்தல் ஆணைய உறுப்பினர்கள் யாவரும் கம்யூனிஸ்ட் அதிபர் நிக்கோலஸ் மடூரோ நியமித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் பொது மக்கள் பெரும் திரளாக வந்து பொது வாக்கெடுப்பில் கலந்து கொண்டது வெனிசூலாவில் நிலவும் அரசியல், சமூகச் சூழலைச் சுட்டிக் காட்டுவதாக உள்ளது என்று முக்கிய எதிர்க்கட்சித் தலைவரும் நாடாளுமன்ற அவைத் தலைவருமான ஜூலியோ போர்ஹேஸ் கூறினார்.
முன்னதாக, மெக்ஸிகோவின் முன்னாள் அதிபர் வின்சன்ட் ஃபாக்ஸ், தென் அமெரிக்க நாடுகளின் முன்னாள் அதிபர்களுடன் கடந்த சனிக்கிழமை வெனிசூலா சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.
அதிபர் மடூரோவின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்த அவர்கள், அத்தியாவசியப் பொருள்களுக்குக் கூட தட்டுப்பாடு ஏற்பட்டு வெனிசூலா மக்கள் தவித்து வருவதாக கூறினர்.
புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சியினர் கடந்த பல மாதங்களாக நடத்தி வரும் ஆர்ப்பாட்டத்தில் இதுவரை 90-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்ற இளைஞரால் பரபரப்பு!

‘எங்கேயும் எப்போதும்..’

பாலியல் விடியோக்களை வெளியிட்டது நான்தான்.. பிரஜ்வல் ஓட்டுநர் பரபரப்பு வாக்குமூலம்!

மழை வேண்டி நூதன வழிபாடு: பன்றி பலியிட்டு விருந்து!

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

SCROLL FOR NEXT