முகப்பு
உலகம்

பனாமா ஊழலில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் பதவி பறிப்பு: அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில், நவாஸ் ஷெரீஃப் சட்டவிரோதமாக சொத்து சேர்த்தது நிரூபணமானதால் பாகிஸ்தான் பிரதமர் பதவியிலிருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள

Updated On : 28 ஜூலை, 2017 at 1:06 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 10:02 PM


பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில், நவாஸ் ஷெரீஃப் சட்டவிரோதமாக சொத்து சேர்த்தது நிரூபணமானதால் பாகிஸ்தான் பிரதமர் பதவியிலிருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கு தொடர்பாக அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழுவின் அறிக்கையை அடுத்து, பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

பனாமா பேப்பர்ஸ் முறைகேடு விவகாரத்தில், நவாஸ் ஷெரீஃப் மற்றும் அவரது குடும்பத்தினர் வெளிநாடுகளில் சொத்து குவித்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, நவாஸ் ஷெரீஃப் மீது கிரிமினல் வழக்குத் தொடரவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

Advertisement

வழக்கின் பின்னணி: 
பனாமா ஆவணக் கசிவைத் தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கின் விசாரணை முடிந்து, இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

வட அமெரிக்க நாடான பனாமா, வரி ஏய்ப்பாளரின் சொர்க்கமாகத் திகழும் நாடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பல முக்கிய அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் பனாமாவில் ரகசியமாக போலி நிறுவனங்களைப் பதிவு செய்து, அவற்றின் மூலம் வரி ஏய்ப்புப் பணத்தைப் பரிவர்த்தனை செய்து வருவது கடந்த ஆண்டு தெரிய வந்தது. சர்வதேச பத்திரிகையாளர் அமைப்பு நடத்திய புலனாய்வில் பனாமா போலி நிறுவனங்கள் குறித்த ஆவணங்கள் வெளியாகின. பனாமா ஆவணங்கள் மூலம், பல நாடுகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள், நிறுவனங்கள் பெயர்கள் அம்பலமாயிற்று. இந்தியர்கள் சிலரின் பெயர்களும் அந்த ஆவணங்கள் மூலம் தெரிய வந்தது.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் குடும்பத்தினருக்கு பிரிட்டன் தலைநகர் லண்டனில் குடியிருப்புகள் இருப்பது அதன் மூலம் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, ஊழல் செய்து சேர்த்த தொகை மூலம் வெளிநாடுகளில் சொத்து சேர்த்ததாக நவாஸ் ஷெரீஃப் மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய வழக்கு விசாரணை பிப்ரவரி மாதம் வரை நடைபெற்றது. விசாரணை இடையே லண்டன் குடியிருப்புகளை வாங்குவதற்குப் பணம் அளித்ததாக கத்தார் இளவரசர் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் வாக்குமூலம் தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கு விசாரணை முடிவில், பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்குப் போதிய ஆதாரம் இல்லை என்று கூறியது. எனினும் லண்டன் குடியிருப்புகளை வாங்க கத்தார் இளவரசர் அளித்த பணம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து முழுமையாக விசாரிக்க சிறப்பு கூட்டு விசாரணைக் குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது. இரண்டு மாதங்களுக்குள் அதன் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், முன்னதாக இடைக்கால அறிக்கைகளைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

பிரதமர் நவாஸ் ஷெரீஃப், அவருடைய இரு மகன்கள், ஷெரீஃபின் இளைய சகோதரரும் பஞ்சாப் மாகாண முதல்வருமான ஷாபாஸ் ஷெரீஃப் உள்ளிட்டோர், கூட்டு விசாரணைக் குழு முன்பாக ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். நவாஸ் ஷெரீஃபின் மகள் மரியம், அவரது கணவர் முன்னாள் ராணுவ அதிகாரி முகமது ஸஃப்தார் ஆகியோரும் கூட்டு விசாரணைக் குழுவிடம் வாக்குமூலம் அளித்தனர்.

இரண்டு மாத கெடு முடிவடைந்த நிலையில், கூட்டு விசாரணைக் குழு தனது இறுதி அறிக்கையை பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்துள்ளது.

இந்த வழக்கை, நீதிபதிகள் ஷேக் அஸ்மத் சயீத், இஜாஸுல் எஹ்ஸான், இஜாஸ் அஃப்ஸல் ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வந்தனர். இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.