உலகம்

ஹெச் 1-பி விசா விவகாரம்: 60 நாள்கள் அவகாசம் கோரியது டிரம்ப் நிர்வாகம்

DIN

அமெரிக்காவில் ஹெச் 1-பி விசா பெற்று பணிபுரியும் வெளிநாட்டினருடன், அவர்களின் மனைவி அல்லது கணவரும் பணிபுரிய அனுமதிக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடுக்கப்பட்ட வழக்கில், அரசு தரப்பில் பதிலளிப்பதற்கு டிரம்ப் நிர்வாகம் 60 நாள்கள் அவகாசம் கோரியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் உள்பட ஏராளமான வெளிநாட்டினர், ஹெச் 1-பி விசா அனுமதி பெற்று பணியாற்றி வருகின்றனர். இதனிடையே, அவர்களுடன் ஹெச் 4 விசா அனுமதியின் பேரில், அவர்களின் மனைவி அல்லது கணவரையும் பணிபுரிவதற்கு அனுமதிக்கலாம் என முன்னாள் அதிபர் ஒபாமாவின் நிர்வாகம் கடந்த 2015-ஆம் ஆண்டு முடிவு செய்தது.
இந்த முடிவுக்கு அமெரிக்காவில் பணியாற்றும் ஏராளமான இந்தியர்கள் வரவேற்பு தெரிவித்திருந்தனர். ஆனால், "சேவ்ஸ் ஜாப்ஸ்' என்ற தன்னார்வ அமைப்பினர், ஒபாமா அரசின் முடிவை எதிர்த்து வழக்கு தொடுத்தனர். அந்த வழக்கில், அரசின் முடிவுக்கு மாவட்ட நீதிமன்றம் ஆதரவு தெரிவித்ததை அடுத்து, வாஷிங்டன் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுதாரர்கள் மேல்முறையீடு செய்தனர். இந்நிலையில், இந்த விவகாரத்தில் தங்களது தரப்பு கருத்தைத் தெரிவிப்பதற்கு 60 நாள்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் டிரம்ப் நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதற்கு முன்பு, ஹெச் 4 விசா வைத்திருப்பவர்களை, அமெரிக்க நிறுவனங்களில் பணியில் நியமிப்பதற்கான நடவடிக்கைகளை 60 நாள்களுக்கு நிறுத்தி வைக்குமாறு அதிபர் டிரம்ப் கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி உத்தரவிட்டார். இதனால், ஹெச் 4 விசா அனுமதியில் அமெரிக்காவில் பணியாற்றுபவர்கள் கவலையடைந்தனர்.
இந்நிலையில், ஹெச் 4 விசா வைத்துள்ள ஆயிரக்கணக்கானோர் சார்பில், இந்த வழக்கில் "இம்மிகிரேஷனஅ வாய்ஸ்' என்ற மற்றொரு அமைப்பு தன்னையும் ஒரு மனுதாரராக இணைத்துக் கொண்டுள்ளது.
இதுதொடர்பாக, மனுதாரர்களில் ஒருவரான சுதர்சனா சென்குப்தா என்பவர் கூறியதாவது:
அமெரிக்காவில் நான் கடந்த 13 ஆண்டுகளாக மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறேன். கடந்த 2015-ஆம் ஆண்டில் ஹெச் 4 விசா அனுமதியில் எனது ஆய்வைத் தொடர விரும்பினேன். இதனிடையே, ஹெச் 4 விசாவை ரத்து செய்துவிட்டால், புற்றுநோய் தொடர்பான எனது புதிய ஆய்வைத் தொடங்க முடியாது என்றார் அவர்.
இதேபோல், அனுஜ் தமிஜா என்பவர் கூறியதாவது:
நான், "பார்ச்சூன் 100' என்ற நிறுவனத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டில் இருந்து திட்ட மேலாளராகப் பணியாற்றி வருகிறேன். கிரீன் கார்டு பெறுவதற்கு சிரமமாக இருந்ததால், ஹெச் 4 விசா அனுமதி பெற்றேன். ஏனெனில், அதுதான் நான் புதிதாக தொழில் தொடங்குவதற்கு வசதியாக உள்ளது. இதனிடையே, ஹெச் 4 அனுமதியை ரத்து செய்துவிட்டால், எனது வேலையயும், எனது ஒட்டுமொத்த முதலீட்டையும் இழக்கும் அபாயம் ஏற்படும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: தமிழக தொகுதிகளில் அதிகாரபூர்வ வெற்றி அறிவிப்பு!

மக்களவைத் தேர்தலில் பாஜக கனவு பலிக்கவில்லை: முதல்வர் ஸ்டாலின்

400 தொகுதிகளில் வெல்லாதது வருத்தம்: பாஜக

காங்கிரஸ் வியூகம் என்ன? நாளை தெரியும் என்கிறார் ராகுல்

தேர்தல் முடிவு இப்படியிருக்கும் என கற்பனைகூட செய்யவில்லை: ஜெகன்மோகன்

SCROLL FOR NEXT