உலகம்

சவூதியில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி எதிரொலி! ஓட்டுநர் பயிற்சி பள்ளியை திறக்க மகளிர் பல்கலை. ஆயத்தம்

DIN

சவூதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டதையடுத்து அவர்களுக்கான பிரத்யேக ஓட்டுநர் பயிற்சி பள்ளியைத் தொடங்க உள்ளதாக இளவரசி நூரா மகளிர் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 
இதுகுறித்து அந்தப் பல்கலைக்கழகம் மேலும் தெரிவித்துள்ளதாவது: ரியாத் உள்ளிட்ட பல நகரங்களிலிருந்தும் 60,000-க்கும் மேற்பட்ட பெண்கள் இளவரசி நூரா பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வருகின்றனர். சவூதியில் பெண்கள் கார் ஓட்டுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கி கொள்ளப்பட்டதையடுத்து, எங்களின் மாணவிகள் ஓட்டுநர் பயிற்சியை பெறும் வகையில் புதிய பயிற்சி பள்ளியை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று அந்த பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
உலக அளவில் சவூதி அரேபியா மட்டுமே பெண்கள் கார் ஓட்டுவதற்கு தடை விதித்திருந்தது. இது பெண்கள் மீதான அடக்குமுறையை எடுத்துக் காட்டுவதாக உள்ளது என சர்வதேச அளவிலான பெண்கள் அமைப்புகள் கண்டனக் குரல்கள் எழுப்பின. பல கட்ட போராட்டங்களும் நடைபெற்றன. 
இந்த நிலையில், பெண்கள் கார் ஓட்ட அனுமதி அளித்து மன்னர் சல்மான் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தார். அதன் எதிரொலியாக, தற்போது பெண்கள் கார் ஓட்டுவதற்கும் பயிற்சி அளிக்க ஓட்டுநர் பயிற்சி பள்ளி திறப்பதாக முதல் முதலாக அறிவிப்பை வெளியிட்டு அந்தப் பல்கலை. அசத்தியுள்ளது.
சவூதி அரசின் இந்த முடிவால், பெண்களுக்கான வேலைவாய்ப்பு அதிகரிப்பதோடு கார் விற்பனையும் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 2018-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் சவூதி அரசு மதிப்பு கூட்டு வரியை அமல்படுத்த உள்ளது. இதனால், வரும் மாதங்களில் கார்கள் விற்பனை கணிசமான அளவில் உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
நிஸான், ஷெவர்லே, ஃபோர்டு உள்ளிட்ட கார் தயாரிப்பு நிறுவனங்கள் விற்பனையை அதிகரிக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. சவூதி நகர வீதிகளில் வரும் ஆண்டுகளில் இனி லட்சக்கணக்கான பெண்கள் கார்களில் பவனி வருவதை கண்கூடாக கண்டு ரசிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பச்சகுப்பம்: பாலாற்றில் வெள்ளம்!

சினிமாவிலிருந்து விலகுவீர்களா? கங்கனா ரணாவத் பதில்!

ரூ. 35 கோடி பறிமுதல்: ஜார்கண்ட் அமைச்சரின் செயலர், பணியாளர் கைது

தேர்தல் பணியிலிருந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்!

மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பேருந்தை நிறுத்திய பயணிகள்!

SCROLL FOR NEXT