உலகம்

மலேசிய பள்ளி தீ விபத்து: 24 பேர் சாவு

DIN

மலேசியாவில் உள்ள இஸ்லாமிய பள்ளி விடுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 22 சிறுவர்கள் உள்பட 24 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

பலத்த தீக்காயமடைந்த மேலும் ஆறு சிறுவர்கள் உயிருக்குப் போராடி வருகின்றனர். சில சிறுவர்கள் காயமின்றித் தப்பினர் என்று தெரிவிக்கப்பட்டது. பதின்மூன்று வயது முதல் 17 வயதான மாணவர்கள் அந்தப் பள்ளியில் பயின்று வந்தனர்.
தலைநகர் கோலாலம்பூரில் தாருல் குர்ஆன் இத்திஃபாக்கியா பள்ளி செயல்பட்டு வருகிறது. அது "தஹ்ஃபீஸ்' என்று அறியப்படும் இஸ்லாமிய மத போதனைப் பள்ளிக்கூடமாகும். மூன்று நிலை கட்டடத்தில் அந்தப் பள்ளி இயங்கி வந்தது. மூன்றாம் நிலையில் மாணவர்கள் தங்கும் விடுதி உள்ளது. அங்கு காலை வேளையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது இருபதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் அங்கு இருந்தனர்.
திடீரென விடுதிப் பகுதியில் தீப்பிடித்து வேகமாகப் பரவியது. அந்தப் பகுதிக்கு ஒரு கதவு மட்டுமே இருந்தது. ஜன்னல்கள் யாவும் இரும்புக் கம்பிகள் கொண்டவையாக இருந்தன. வெளியேறுவதற்கு ஒரே வழியான கதவு தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததால் மாணவர்கள் வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டனர். அவர்களது அலறலைக் கேட்டு தீயணைப்புப் படையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது.
அந்த இடத்துக்கு விரைந்த தீயணைப்புப் படையினர் 1 மணி நேரம் போராடித் தீயை அணைத்தனர்.
ஆனால் தீயணைப்புப் படையினர் வருவதற்குள் சிறுவர்களின் ஓலம் நின்றுவிட்டிருந்தது என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.
குடியிருப்புப் பகுதியில் அமைந்த அந்த மத போதனைப் பள்ளி அமைந்திருந்ததால் அக்கம்பக்கத்திலிருந்தவர்கள் அங்கு விரைந்தனர். இருந்தபோதிலும் அவர்களால் எந்த உதவியையும் அளிக்க முடியவில்லை.
மாணவர்களின் கருகிய உடல்கள் ஒன்றின் மேல் ஒன்றாக ஒரு மூலையில் குவிந்திருந்தன என்று தீயணைப்புப் படையினர் தெரிவித்தனர்.
தப்பி வெளியேற முடியாமல் ஒரு மூலையில் ஒதுங்கி 22 மாணவர்களும் இரு ஆசிரியர்களும் தீக்கிரையாகியிருக்கலாம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
பயங்கரத் தீயில் உடல்கள் முற்றிலும் கருகிவிட்டதால் இறந்தவர்களை உடனடியாக அடையாளம் காண்பதில் சிக்கல் உள்ளதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மரபணு சோதனை மூலம் பலியானவர்களை அடையாளம் காண வேண்டி வரும் என்று அவர்கள் கூறினர்.
மின் கசிவு காரணமாக இந்த தீவிபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. கடந்த இருபதாண்டு காலத்தில் இதுவே மிகவும் கோரமான தீ விபத்து என்று கோலாலம்பூர் தீயணைப்புத் துறை தெரிவித்தது.
அந்தக் கட்டடத்தில் இஸ்லாமிய பள்ளி நடத்துவதற்கும், மாணவர்கள் தங்கும் விடுதி அமைப்பதற்கும் முறைப்படியான அங்கீகாரம் பெறப்படவில்லை என்று மலேசிய உள்ளாட்சித் துறை அமைச்சர் அமைச்சர் தெங்க்கு அட்னான் கூறினார்.
உரிய அனுமதிகள் பெறாமல், சட்டத்துக்குப் புறம்பாக ஏராளமான மத போதனைப் பள்ளிகள் மலேசியாவில் செயல்பட்டு வருகின்றன. அவை பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்காமல், இஸ்லாமிய அமைப்புகளின் கீழ் இயங்கி வருகின்றன. ஆனால் அதுபோன்ற மத போதனை பள்ளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மலேசிய அரசு தயக்கம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

SCROLL FOR NEXT