உலகம்

நேபாளப் பிரதமராக 2-ஆவது முறையாக பதவியேற்றார் சர்மா ஒலி

DIN

நேபாளப் பிரதமராக இரண்டாவது முறையாக நேபாள கம்யூனிஸ்ட் (யூஎம்எல்) கட்சித் தலைவர் கே.பி.சர்மா ஒலி வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
நேபாளத்தில் கடந்த நவம்பர் 26-ஆம் தேதியும், டிசம்பர் 7-ஆம் தேதியும் இரு கட்டங்களாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் மொத்தமுள்ள 275 இடங்களில் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான சிபிஎன்-யூஎம்எல் கட்சியும் பிரசண்டா தலைமையிலான சிபிஎன்-மாவோயிஸ்ட் சென்டர் கட்சியும் அடங்கிய இடதுசாரிக் கூட்டணி 174 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. 
மேலும், நாடாளுமன்ற மேலவையிலும் 39 இடங்களில் வெற்றி பெற்று இக்கூட்டணி பெரும்பான்மை பலம் பெற்றது. இதன் மூலம் நேபாளத்தில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படும் என்று பரவலாக நம்பிக்கை ஏற்பட்டது.
இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு சிபிஎன்-யூஎம்எல் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் லலித்பூரில் கடந்த புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற சிபிஎன்-யூஎம்எல் கட்சியின் தலைவராக கே.பி.சர்மா ஒலி இருப்பதால் அவரையே புதிய பிரதமராக கட்சி நிர்வாகிகள் தேர்வு செய்தனர்.
பதவியேற்பு: அதன்படி, காத்மாண்டில் உள்ள அதிபர் மாளிகையில் சர்மா ஒலி வியாழக்கிழமை பதவியேற்றார். அவருக்கு அதிபர் வித்யா தேவி பண்டாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சர்மா ஒலி, நேபாளத்தின் 51-ஆவது பிரதமர் ஆவார்.
சீனா ஆதரவான நிலைப்பாட்டை கொண்டவரான இவர், கடந்த 2015-ஆம் ஆண்டு அக்டோபர் 11-ஆம் தேதி முதல், 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3-ஆம் தேதி வரை பிரதமராகப் பதவி வகித்தார்.
மார்ச் 5-இல் அதிபர் தேர்தல்?: இதனிடையே, நேபாளத்தின் புதிய அதிபரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் மார்ச் 5-ஆம் நடைபெறவுள்ளதாக அந்நாட்டின் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. துணை அதிபர் தேர்தல் மார்ச் 16-ஆம் தேதி நடைபெறவுள்ளது. பிரதான கட்சிகளின் தலைவர்களிடம் கலந்தாலோசித்த பிறகு, தேர்தல் தேதிகள் முடிவு செய்யப்பட்டதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
நேபாளத்தின் முதல் பெண் அதிபராக கடந்த 2015-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வித்யா தேவி பண்டாரி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT