உலகம்

குகை சிறுவர்கள் பற்றிய திரைப்படங்களுக்கு கட்டுப்பாடு: தாய்லாந்து அரசு விருப்பம்

தினமணி

தாய்லாந்தில் குகைக்குள் சிக்கிய சிறுவர்கள் 17 நாள்களுக்குப் பிறகு மீட்கப்பட்ட சம்பவம் குறித்து எடுக்கப்படும் திரைப்படங்களைக் கட்டுப்படுத்த விரும்புவதாக அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
 இதுகுறித்து கலாசாரத் துறை அமைச்சர் வீர ரோஜ்போசானரத் கூறியதாவது:
 தாய்லாந்து குகைக்குள் 12 சிறுவர்களும், அவர்களது கால்பந்து பயிற்சியாளரும் சிக்கியது, அவர்களை 17 நாள்கள் போராட்டத்துக்குப் பிறகு மீட்புக் குழுவினர் உயிரைப் பணயம் வைத்து மீட்டது ஆகிய சம்பவங்களை கருவாகக் கொண்டு பல்வேறு திரைப்படங்கள், ஆவணப்படங்கள், விடியோக்கள் எடுக்கப்படவுள்ளன.
 அவற்றில், குகைக்குள் சிக்கிக் கொண்டவர்களின் திகில் அனுபவங்கள், மீட்புக் குழுவினரின் கடினமான முயற்சிகள் ஆகியவை சரியான முறையில் காட்டப்பட வேண்டும் என்று தாய்லாந்து அரசு விரும்புகிறது.
 எனவே, அத்தகைய படைப்புகளை மேற்பார்வையிட சிறப்புக் குழு ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளோம். இதற்கான பரிந்துரையை, அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைப்பேன் என்றார் அவர்.
 தாய்லாந்தின் சியாங் ராய் என்னும் பகுதியிலுள்ள குகையைப் பார்வையிட, "வைல்டு போர்ஸ்' என்னும் உள்ளூர் கால்பந்து அணியைச் சேர்ந்த 12 சிறுவர்களை, அவர்களின் பயிற்சியாளர் கடந்த மாதம் 23-ஆம் தேதி அழைத்துச் சென்றார்.
 அப்போது, திடீரென பெய்த பெருமழை காரணமாக அந்த குகைக்குள் வெள்ளம் புகுந்ததையடுத்து, அவர்கள் குகைக்குள் சிக்கிக் கொண்டனர்.
 9 நாள்களுக்குப் பிறகு அவர்கள் இருக்கும் இடத்தை சர்வதேச மீட்புக் குழுவினர் கண்டறிந்தனர்.
 9 நாள்கள் வரை, உணவின்றி தவித்த அவர்கள், குகைக்குள் புகுந்த வெள்ள நீரைக் குடித்து உயிர் வாழ்ந்தனர். இதனால், அவர்களின் உடல் மிகவும் மெலிந்து விட்டது. ஒரு வழியாக, 17 நாள்களுக்குப் பிறகு, அவர்களை சர்வதேச மீட்புக் குழுவினர், கடந்த 10-ஆம் தேதி பத்திரமாக மீட்டனர்.
 பின்னர், அவர்கள் அனைவரும் சியாங் ராய் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கடந்த ஒரு வாரமாக, மருத்துவமனையில் ஓய்வெடுத்து வந்த அவர்கள், கடந்த புதன்கிழமை வீடு திரும்பினர்.
 உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவங்கள் குறித்து திரைப்படம் எடுக்க ஏராளமான தயாரிப்பாளர்கள் முன்வந்துள்ள நிலையில், தாய்லாந்து கலாசாரத் துறை அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள பில் தொகை: மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் குற்றச்சாட்டு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் துன்புறுத்தல் புகாா்: சாட்சியங்களிடம் விரைவில் போலீஸாா் விசாரணை

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

SCROLL FOR NEXT