ஆப்கன் அரசு - தலிபான்கள் இடையே சமரசம் செய்து வைக்கத் தயார்: பாகிஸ்தான்
போரால் பாதிக்கப்படுள்ள ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்காக, அந்த நாட்டு அரசுக்கும், தலிபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே சமாதானப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு
உலகம்ஆப்கன் அரசு - தலிபான்கள் இடையே சமரசம் செய்து வைக்கத் தயார்: பாகிஸ்தான்
போரால் பாதிக்கப்படுள்ள ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்காக, அந்த நாட்டு அரசுக்கும், தலிபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே சமாதானப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு
போரால் பாதிக்கப்படுள்ள ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்காக, அந்த நாட்டு அரசுக்கும், தலிபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே சமாதானப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு உதவத் தயார் என்று பாகிஸ்தான் வாக்குறுதி அளித்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் காவாஜா ஆசிஃப் , தலைநகர் இஸ்லாமாபாதில் வியாழக்கிழமை கூறியதாவது:
தலிபான் அமைப்புக்கும், ஆப்கன் அரசுக்கும் இடையே நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தை அரசியல் ரீதியிலானது ஆகும். எனவே அத்தகையப் பேச்சுவார்த்தையை நாங்கள் முழுமையாக வரவேற்கிறோம்.
அவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு இரு தரப்பினருக்கும் இடையிலான நல்லெண்ணத் தூதுவராகச் செயல்படவும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றார் அவர்.
ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தை நடத்த தலிபான் பயங்கரவாத அமைப்புக்கு அந்த நாட்டு அதிபர் அஷ்ரஃப் கனி அழைப்பு விடுத்துள்ளதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளது.
ஆப்கன் பிரச்னைக்கு அமைதித் தீர்வு காண்பதற்காக அந்த நாட்டுத் தலைநகர் காபூலில் 20-க்கும் மேற்பட்ட நாடுகள் புதன்கிழமை பங்கேற்ற சர்வதேச மாநாட்டில் அதிபர் கனி பேசுகையில், அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க வரும் தலிபான் அமைப்பினருக்கு ஆப்கன் அரசு உரிய பாதுகாப்பு வழங்கும் எனவும் குறிப்பிட்டார்.
ஆப்கன் அமைதி முயற்சியில் தலிபான்களின் கருத்துகளையும் அறிய விரும்புவதாக அவர் கூறினார்.
முன்னதாக, ஆப்கன் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வருமாறு அமெரிக்காவுக்கு தலிபான் பயங்கரவாதிகள் அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தான் குறித்த தனது கடுமையான கொள்கையை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, அந்த நாட்டில் தலிபான்கள் மற்றும் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் தங்களது தாக்குதல்களின் எண்ணிக்கையையும், தீவிரத்தையும் கடந்த சில மாதங்களாக அதிகரித்த நிலையில் இந்த அழைப்பை விடுத்தது குறிப்பிடத்தக்கது.
எனினும், தலிபான்களுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையாக இருந்தாலும், அதில் ஆப்கன் அரசும் இடம் பெற வேண்டும் என்று கூறி வரும் அமெரிக்கா, தலிபான்களின் இந்த அழைப்பு குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளது.