முகப்பு
உலகம்

மும்பையில் தாக்குதல் நடத்தியது பாகிஸ்தான் பயங்கரவாதிகள்தான்: நவாஸ் ஷெரீஃப் மீண்டும் திட்டவட்டம்

கடல்வழியாக ஊடுருவி, மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு தாக்குதல் நடத்தியது பாகிஸ்தானில் இருக்கும் பயங்கரவாதிகள்தான் என்று அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மீண்டும் உறுதிபட கூறியுள்ளார்.

Updated On : 15 மே, 2018 at 12:51 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

கடல்வழியாக ஊடுருவி, மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு தாக்குதல் நடத்தியது பாகிஸ்தானில் இருக்கும் பயங்கரவாதிகள்தான் என்று அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மீண்டும் உறுதிபட கூறியுள்ளார்.
மும்பைத் தாக்குதல் சம்பவம் நடைபெற்று சுமார் 10 ஆண்டுகள் ஆகும் நிலையில், அந்தத் தாக்குதலில் ஈடுபட்டது பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள்தான் என்று நவாஸ் ஷெரீஃப் அண்மையில் அளித்த பேட்டியில் முதல்முறையாக ஒப்புக் கொண்டிருந்தார். எனினும், அந்தப் பேட்டியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளை, எந்த நாட்டையும் சேராதவர்கள் என்ற பொருள்படும் வார்த்தையில் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து, நவாஸ் ஷெரீஃபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சி சார்பில் மறுப்புத் தெரிவித்து அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில், நவாஸ் ஷெரீஃபின் கருத்துகளை இந்திய ஊடகங்கள் திரித்து வெளியிட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், பாகிஸ்தானைச் சேர்ந்த ஊடகங்கள், நவாஸ் ஷெரீஃபை துரோகி என்று விமர்சித்திருந்தன.
இந்நிலையில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் நவாஸ் ஷெரீஃப் திங்கள்கிழமை மீண்டும் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
முந்தைய பேட்டியில் நான் தெரிவித்திருந்தது அனைத்தும் உண்மைதான். நான் தெரிவித்த கருத்துகளை, முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப், முன்னாள் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக், முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான மேஜர் ஜெனரல் (ஓய்வு) முகமது துரானி ஆகியோரும் ஏற்கெனவே உறுதி செய்துள்ளனர்.
பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில், பாகிஸ்தான் 50 ஆயிரம் பேரின் உயிர்களை தியாகம் செய்துள்ள நிலையில், ஏன் உலகம் இந்த விவகாரத்தில் நமது கருத்தை கேட்க மறுக்கிறது? இந்த கேள்வியைக் கேட்கும் நபர்கள் மீது நமது நாட்டில் துரோகிகள் என்று முத்திரை குத்தப்படுகிறது. என்னை ஊடகங்கள், துரோகி என்று தெரிவித்துள்ளன. என்னை அப்படி அழைக்கும்படி, ஊடகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
விளைவுகளை சந்திக்க தயார்: நாடு, அரசியலமைப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தியவர்கள், தேசாபிமானிகளா? நீதிபதிகளை அவர்களது அலுவலகத்துக்கு சென்று தாக்கியவர்கள் தேசாபிமானிகளா? இந்த விவகாரத்தில் நான் உண்மையையே பேசுவேன். இதற்காக எந்த விளைவுகளையும் சந்திக்கத் தயாராக உள்ளேன் என்றார் நவாஸ் ஷெரீஃப். பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் செயல்பாடு இருப்பதாக ஒப்புக் கொள்கிறீர்களா? என நவாஸ் ஷெரீஃபிடம் கேட்கப்பட்டது. அப்போது நவாஸýடன் உடனிருந்த அவரது மகள், "அப்படியெனில் யாருக்கு எதிராக ஜார்ப்-இ-அஸ்ப் தாக்குதல் நடவடிக்கை நடத்தப்படுகிறது?' என பதில் கேள்வியெழுப்பினார்.
பாகிஸ்தானில் இருக்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக கடந்த 2014-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தாக்குதல் நடவடிக்கையின் பெயரே ஜார்ப்-இ-அஸ்ப் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் அரசு மறுப்பு

மும்பைத் தாக்குதல் தொடர்பான நவாஸ் ஷெரீஃபின் கருத்துகளை பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு குழு (என்எஸ்சி) மறுத்துள்ளது. மும்பைத் தாக்குதல் குறித்து நவாஸ் ஷெரீஃப் தெரிவித்த கருத்துகள் குறித்து, இஸ்லாமாபாதில் அந்நாட்டு தேசிய பாதுகாப்புக் குழு கூடி ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனைக்கு, பாகிஸ்தான் பிரதமர் ஷாஹித் ககான் அப்பாஸி தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில், நவாஸ் ஷெரீஃபின் கருத்தைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் எழுந்துள்ள சூழ்நிலை குறித்து விவாதிக்கப்பட்டது. இதையடுத்து என்எஸ்சி-யால் வெளியிடப்பட்ட அறிக்கையில், "மும்பைத் தாக்குதல் தொடர்பாக நவாஸ் அண்மையில் தெரிவித்த கருத்துகள், தவறானவை; அதில் உண்மையில்லை. நவாஸின் கருத்துகளில் உண்மைகளும், உறுதியான ஆதாரமும் நிராகரிக்கப்பட்டிருப்பது துரதிருஷ்டவசமானது. இந்த குற்றச்சாட்டுகளை என்எஸ்சி நிராகரிக்கிறது; தவறான கருத்துகளுக்கு என்எஸ்சி தனது கண்டனத்தையும் தெரிவித்து கொள்கிறது' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.