உலகம்

மாலத்தீவின் புதிய அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா வழங்கும்: அதிபர் சோலியிடம் பிரதமர் மோடி உறுதி

DIN

மாலத்தீவில் புதிதாக அமைந்துள்ள அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா வழங்கும் என்று அந்நாட்டு அதிபர் இப்ராஹிம் முகமது சோலியிடம் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.
மாலத்தீவின் 7-ஆவது அதிபராக சோலி சனிக்கிழமை பதவியேற்றுக் கொண்ட நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்றார். பதவியேற்புக்குப் பிறகு பிரதமர் மோடி-அதிபர் சோலி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதுகுறித்து கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது:
இந்தியா-மாலத்தீவு இடையேயான நட்புறவு, ஒத்துழைப்பை புதுப்பித்துக் கொள்வதில் இரு நாட்டுத் தலைவர்களும் நம்பிக்கை தெரிவித்தனர். மேலும், இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைபெறச் செய்வதற்கான முக்கியத்துவத்தையும் இருவரும் பரஸ்பரம் ஒப்புக் கொண்டனர்.
அத்துடன் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை தொடர்பாக தங்களது விருப்பங்களையும், கருத்துகளையும் பரிமாறிக் கொண்டனர். அப்போது, மாலத்தீவின் பொருளாதாரம் இக்கட்டான சூழலில் உள்ள நிலையில் தாம் பதவியேற்றதாக அதிபர் சோலி, பிரதமர் மோடியிடம் விளக்கினார்.
மாலத்தீவின் புதிய அரசு, அந்தத் தீவு மக்களுக்கு அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான உதவிகளை வழங்குவது உள்பட, மாலத்தீவின் வளர்ச்சிக்கான ஒத்துழைப்பை இந்தியா தொடர்ந்து வழங்குவதற்கான வழிகள் குறித்து பிரதமர் மோடி-அதிபர் சோலி கலந்தாலோசித்தனர். குறிப்பாக, வீட்டு வசதி, அடிப்படைக் கட்டமைப்புகள், குடிநீர் - கழிவுநீர் அமைப்புகள் ஆகியவற்றுக்கான தேவை அதிகரித்துள்ளதை பிரதமர் மோடியிடம் அதிபர் சோலி எடுத்துரைத்தார்.
அப்போது, நிலையான சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டை மாலத்தீவு அடைவதற்கு உரிய ஆதரவை வழங்க இந்தியா உறுதி பூண்டுள்ளதாக அதிபர் சோலியிடம் பிரதமர் மோடி கூறினார். மேலும், மாலத்தீவுக்கான உதவிகளை வழங்க இந்தியா தயார் நிலையில் இருப்பதாகத் தெரிவித்த பிரதமர் மோடி, மாலத்தீவு மக்களுக்கான தேவைகள் தொடர்பாக இருநாட்டு அதிகாரிகளும் விரைவில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
இருதரப்பு நலனுக்காக மாலத்தீவில் பல்வேறு துறைகளில் இந்திய நிறுவனங்கள் முதலீடு செய்வதற்காக பரவலான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதை பிரதமர் மோடி வரவேற்றார். இருநாட்டு மக்களும் பரஸ்பரம் பயணம் மேற்கொள்வதால், நுழைவு இசைவு (விசா) விதிமுறைகளை எளிமைப்படுத்துவதற்கான தேவையை இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். 
பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க இரு தலைவர்களும் உறுதி பூண்டனர் என்று அந்த அறிக்கையில் 
கூறப்பட்டிருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

SCROLL FOR NEXT