உலகம்

அமெரிக்க - சீன வர்த்தகப் பதற்றத்தால் உலகப் பொருளாதாரம் பாதிக்கப்படாது

தினமணி

அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள வர்த்தகப் பதற்றத்தால் உலகப் பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படாது என்று அமெரிக்க நிதியமைச்சர் ஸ்டீவன் மென்யூச்சின் தெரிவித்துள்ளார்.
 நிகழாண்டுக்கான சர்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) ஆண்டுப் பொதுக்கூட்டம், இந்தோனேசியாவின் பாலி தீவிலுள்ள நூஸா டுவா நகரில் கடந்த திங்கள்கிழமை முதல் நடைபெற்று வருகிறது.
 இந்தக் கூட்டத்தில், உலகின் இரு பெரும் பொருளாதார சக்திகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே அண்மைக் காலமாக அதிகரித்து வரும் வர்த்தகப் பதற்றம் சர்வதேச பொருளாதார வளர்ச்சியை நிலைகுலையச் செய்யும் என்று அச்சம் தெரிவிக்கப்பட்டது.
 இந்த நிலையில், இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த அமெரிக்க நிதியமைச்சர் ஸ்டீவன் மென்யூச்சின், செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
 சீனப் பொருள்கள் மீது அமெரிக்கா கூடுதல் வரிகளை விதிப்பதால் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள வர்த்தகப் பதற்றம், சர்வதேச பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாது.
 சீனாவுடன் சமநிலையிலான வர்த்தகத்தைப் பேண வேண்டும் என்பதே அதிபர் டிரம்ப் தலைமையிலான அரசின் நோக்கமாகும். எங்கள் நோக்கத்தில் நாங்கள் வெற்றியடைந்தால், அமெரிக்கா மட்டுமின்றி, ஐரோப்பா, ஜப்பான் ஆகிய நட்பு நாடுகளும் பயன் பெறும்.
 வர்த்தகப் பதற்றம் குறித்து ஐஎம்எஃப் விடுக்கும் எச்சரிக்கை, பிரச்னையின் தீவிரத்தை சீனா புரிந்துகொண்டு நடக்க வேண்டும் என்ற நோக்கத்தில் விடுக்கப்பட்டிருக்கலாம் என்றார் அவர்.
 முன்னதாக, அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே அதிகரித்து வரும் வர்த்தகப் பதற்றத்தால், நிகழாண்டில் உலக அளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி விகிதம் 0.2 சதவீதம் குறைந்து 3.7 சதவீதமாக இருக்கும் என்று ஐஎம்எஃப் தெரிவித்தது.
 சீனாவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருள்களின் மதிப்பைவிட, அந்த நாட்டிடமிருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருள்களின் மதிப்பு அதிகமாக இருப்பதால், அந்த வர்த்தகப் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக சீனப் பொருள்களின் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்போவதாக கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலின்போது டிரம்ப் வாக்குறுதி அளித்திருந்தார்.
 அதன்படி, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் மீது கூடுதல் வரி விதிக்கும் உத்தரவைப் அவர் பிறப்பித்து வருகிறார். இதற்குப் பதிலடியாக, அமெரிக்க இறக்குமதி பொருள்கள் மீது சீனாவும் கூடுதல் வரிகளை அறிவித்து வருகிறது. இதன் காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப் போர் வெடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

SCROLL FOR NEXT