உலகம்

பாதுகாப்பு நடவடிக்கைகளில் தோல்வி..! மன்னிப்பு கோரியது இலங்கை அரசு

DIN

இலங்கையில் பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற இருப்பதாக உளவுத் துறைகள் எச்சரிக்கை விடுத்தும், பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ள தவறியதற்காக அந்நாட்டு அரசு மன்னிப்பு கேட்டுள்ளது.
இலங்கையில் மூன்று தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் உள்பட மொத்தம் 8 இடங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அடுத்தடுத்து குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. இதில் 7 இடங்களில் தற்கொலைத் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன. இந்த தாக்குதலில் 10 இந்தியர்கள் உள்பட 321 பேர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதல்கள் தொடர்பாக இதுவரை 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக, இலங்கையில் பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற வாய்ப்பிருப்பதாக சர்வதேச உளவு அமைப்புகள் கடந்த 4-ஆம் தேதி எச்சரித்திருந்தன. 
அதுமட்டுமன்றி, நாட்டின் பிரதான தேவாலயங்களில் ஏப்ரல் 21-ஆம் தேதி தற்கொலைத் தாக்குதல் நிகழ்த்துவதற்கான சதித்திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது என்று இலங்கை காவல்துறைத் தலைவரும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
இந்நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறிவிட்டதாக இலங்கை அரசு மன்னிப்பு கோரியுள்ளது. 
இதுதொடர்பாக அரசு செய்தித் தொடர்பாளரும், சுகாதாரத் துறை அமைச்சருமான ரஜிதா சேனரத்ன கூறியதாவது:
நாட்டில் பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற வாய்ப்பிருப்பதாக உளவுத் துறைகள் எச்சரிக்கை விடுத்தன. அந்த எச்சரிக்கைகளின் படி, பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த முடிவு செய்தோம். எனினும், அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு அளிக்க தவறியதற்காக மன்னிப்பு கேட்கிறோம்.  இந்த குண்டுவெடிப்புகளில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடமும், நிறுவனங்களிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் தக்க இழப்பீடு வழங்கப்படும். தகர்க்கப்பட்ட தேவாலயங்கள் மீண்டும் கட்டமைத்து தரப்படும்.
உளவுத் துறை தகவல்களில் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு குறித்தும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 
எனினும் அந்த அமைப்பு மட்டும் தனியே இத்தகைய தாக்குதல்களை நடத்தியிருக்க சாத்தியமில்லை. இந்த தாக்குதல்களுக்கு பின்னணியில் நிச்சயம் சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுக்கு தொடர்பு இருக்கும் என்று சந்தேகம் உள்ளது என்றார்.
இதனிடையே, இலங்கையில் இவ்வளவு பயங்கரமான தாக்குதல் நடத்தப்படும் என்று அரசு எதிர்பார்க்கவில்லை என்று அந்நாட்டின் பாதுகாப்பு துறை செயலர் ஹேமஸ்ரீ பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

3 நிமிட மெளன அஞ்சலி

இலங்கையில் தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட 8 இடங்களில் நிகழ்த்தப்பட்ட  அடுத்தடுத்த குண்டுவெடிப்புகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 321-ஆக அதிகரித்துள்ளது. 
இந்நிலையில் இலங்கை முழுவதும் செவ்வாய்க்கிழமை 3 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. 
இதுதொடர்பாக உள்துறை அமைச்சகத்தின் செயலர் கூறுகையில், "தேசிய துக்க தினமாக செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு முதல் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததை நினைவில் கொண்டு, செவ்வாய்க்கிழமை காலை 8. 30 மணி முதல் 3 நிமிடங்கள் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. 
உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அனைத்து மக்களும் வெள்ளைக் கொடியை ஏந்திச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்' என்றார்.

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்பு

இலங்கையில் உள்ள தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் மற்றும் குண்டுவெடிப்புகளுக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இதுதொடர்பாக அந்த அமைப்பு செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
இலங்கையில் உள்ள கிறிஸ்தவர்கள் மற்றும் அமெரிக்கர்களை குறி வைத்து ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல் ஐ. எஸ்.ஜிகாத் போராளிகளால் நிகழ்த்தப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. ஜிகாத் போராளிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் செய்தி நிறுவனம் வழியாக இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதனிடையே, தாக்குதல் குறித்து அரசு செய்தித் தொடர்பாளர் ரஜீதா சேனரத்ன கூறுகையில், " உடலில் வெடிகுண்டை கட்டிக்கொண்டு தற்கொலைத் தாக்குதல் நடத்தியவர்கள் இலங்கையின் குடிமக்களாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. உள்நாட்டு பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புக்கு இந்த தாக்குதலில் தொடர்பிருக்கலாம்' என்றார்.
இராக், சிரியா ஆகிய நாடுகளின் சில பகுதிகளை பிரித்து முஸ்லிம்களுக்கு தனிநாடாக அறிவிக்க வேண்டும் என்று செயல்படும் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு, இதற்கு முன்னரும் பல இடங்களில் தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT