உலகம்

கிறைஸ்ட்சர்ச் மசூதி தாக்குதல் நடத்தியவர் சிறையிலிருந்து கடிதம்: அதிகாரிகள் அதிர்ச்சி

DIN


நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகர மசூதிகளில் துப்பாக்கிச் சூடு நடத்தி 51 பேரைக் கொன்ற பிரென்டன் டாரன்ட், தனது நண்பருக்கு ரகசியமாக கடிதம் எழுதி அனுப்பியுள்ள தகவல் அதிகாரிகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
கிறைஸ்ட்சர்ச் மசூதித் தாக்குதல் நடத்தி, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரென்டன் டாரன்ட், அலன் எனப்படும் தனது ரஷிய நண்பருக்கு எழுதிய கடிதம், 4சான் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
பொதுவாக வெள்ளை இனவாதிகள் தங்கள் கருத்துகளை வெளியிடப் பயன்படுத்தும் அந்த இணையதளத்தில், டாரன்ட் எழுதிய கடிதம் வெளியிடப்பட்டது அதிகாரிகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
அண்மைக் கால வரலாற்றில், நியூஸிலாந்தின் மிக மோசமான பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியுள்ள பிரென்டன் டாரன்டின் பெயரைக் கூட வெளியிட அந்த நாட்டு அரசு தொடக்கத்தில் தயங்கியது.
பிறகு அவரது படத்தை வெளியிடுவதற்கும் ஊடகங்களுக்கு நீதிமன்றம் தடை விதித்து, பிறகு அந்தத் தடை நீக்கப்பட்டது.
புகழ் பெறுவதற்காகவும், தனது வெள்ளை இனவெறி கருத்துகளைப் பரப்புவதற்காகவுமே பிரென்டன் அத்தகைய கொடூரத் தாக்குதலில் ஈடுபட்டதாகவும், அவரது நோக்கத்தை முறியடிக்கும் வகையில் அவர் இருட்டடிப்பு செய்யப்பட வேண்டும் எனவும் அந்தத் தாக்குதலுக்குப் பிறகு நியூஸிலாந்து நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் குறிப்பிட்டார்.
இந்தச் சூழலில், சிறையிலிருந்துகொண்டு டாரன்ட் கடிதம் எழுதி அனுப்பியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பென்சிலால் எழுதப்பட்ட அந்தக் கடிதம், ரஷியாவைச் சேர்ந்த அலன் என்பவருக்கு எழுதப்பட்டுள்ளது. அலனுடன் ரஷியாவை 1 மாத காலம் சுற்றிப் பார்த்தது குறித்து மட்டுமே பெரும்பாலும் குறிப்பிடப்பட்டிருந்த அந்தக் கடிதத்தில், நிறவெறியைப் பரப்பும் கருத்துகள் எதுவும் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை.
எனினும், மிகப் பெரிய மோதல் வெடிக்கப் போவதாக அந்தக் கடிதத்தில் எச்சரித்துள்ள டாரன்ட், ஆயுதப் போராட்டத்துக்கு மறைமுகமாக அழைப்பு விடுக்கும் வகையில் வார்த்தைகளைப் பிரயோகித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதிகாரிகளின் அலட்சியத்தால் டாரன்டின் கடிதம் வெளியாகியிருப்பதற்கு சிறைத் துறை அமைச்சர் கெல்வின் டேவிஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற தவறுகள் இனியும் நடக்காமல் பார்த்துக்கொள்வதாகவும் அவர் உறுதியளித்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
28 வயது ஆஸ்திரேலியரான பிரென்டன் டாரன்ட், நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரிலுள்ள இரு மசூதிகளில் கடந்த மார்ச் மாதம் 15-ஆம் தேதி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் 51 பேர் பலியாகினர்; 40 பேர் காயமடைந்தனர்.
கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்திய அந்தத் தாக்குதல் தொடர்பாக பிரென்டன் கைது செய்யப்பட்டு, அவருக்கு எதிராக பயங்கரவாத வழக்கு நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

SCROLL FOR NEXT