பயங்கரவாத தாக்குதல் தொடர வாய்ப்புள்ளது: இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க
இலங்கையில் ஜிகாதி மற்றும் மத அடிப்படைவாத பயங்கரவாதிகளை ஒடுக்கும் வகையில் கடுமையான சட்டங்கள் இயற்றப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இலங்கையில் ஈஸ்டர் (ஏப்.21) தினத்தில் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளைக் குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 257 பேர் வரை உயிரிழந்தனர். இதையடுத்து இலங்கையில் ஜிகாதி மற்றும் மத அடிப்படைவாத பயங்கரவாதிகளை ஒடுக்கும் வகையில் கடுமையான சட்டங்கள் இயற்றப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இந்நிலையில், தாக்குதல் நடத்தப்பட்ட தேவலாயம் ஒன்றில் வெள்ளிக்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியதாவது:
ஈஸ்டர் தினத்தில் நடந்த தாக்குதலுக்கு காரணமானவர்களில் பெரும்பாலானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலர் ராணுவத்துடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்துவிட்டனர். இலங்கை முழுவதும் உள்ள ஐஎஸ் பயங்கரவாத தொடர்பு மையங்கள் குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
Advertisement
இருப்பினும் இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமான இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகள், நாட்டிலுள்ள பெரும்பாலான மேம்பாலங்கள் மற்றும் காவல்நிலையங்களின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனவே இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் தொடர வாய்ப்புள்ளது. இருப்பினும் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இலங்கையில் இருந்து ஐஎஸ் பயங்கரவாத அமைப்பை முழுவதுமாக ஒழிப்பது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
வருகிற திங்கள்கிழமை முதல் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும். எனவே அப்போது முதல் இங்கு இயல்பு நிலை திரும்பும் என நான் நம்புகிறேன் என்று தெரிவித்தார். ஈஸ்டர் தின பயங்கரவாத தாக்குதலில் 50 குழந்தைகள் வரை படுகொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.