உலகம்

உள்விவகாரங்களில் அந்நிய தலையீட்டை ஏற்க முடியாது: பிரதமர் மோடி உறுதி

DIN


ஒரு நாட்டின் உள்விவகாரங்களில் அந்நிய நாட்டின் தலையீட்டை ஏற்க முடியாது என்பதில் இந்தியாவும் ரஷியாவும் உறுதியாக உள்ளன என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தும், அந்த மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக  பிரித்தும் மத்திய அரசு அண்மையில் நடவடிக்கை மேற்கொண்டது. 
இந்த விவகாரத்தை, சர்வதேச பிரச்னையாக மாற்ற பாகிஸ்தான் முயற்சித்து வருகிறது. எனினும், அந்த நாட்டுக்கு தொடர்ந்து தோல்விகளே மிஞ்சி வருகின்றன.

இந்நிலையில், ரஷியாவின் விளாடிவோஸ்டோக் நகரில் ரஷிய அதிபர் விளாதிமிர் புதினுடன், பிரதமர் மோடி புதன்கிழமை உயர்நிலை பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, காஷ்மீர் விவகாரத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கான காரணம்  குறித்து புதினிடம் மோடி எடுத்துரைத்தார். மேலும், இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு ரஷியா அளித்து வரும் ஆதரவுக்காக, அவர் நன்றியும் தெரிவித்தார்.

இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு பின்னர், இருவரும் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனர். 
அப்போது, மோடி கூறியதாவது:
ஒரு நாட்டின் உள்விவகாரங்களில் அந்நிய நாட்டின் தலையீட்டை ஏற்க முடியாது என்பதில் இந்தியாவும் ரஷியாவும் உறுதியாக உள்ளன. இந்தியா, ரஷியா இடையிலான நட்புறவு, இரு நாடுகளின் தலைநகரங்களையும் தாண்டி விரிவடைந்துள்ளது. இருதரப்பு நட்புறவும் ஒத்துழைப்பும் முழு வேகத்தில் வளர்ந்து வருகின்றன. அணுசக்தி துறையில் உண்மையான பங்களிப்பை இரு நாடுகளும் கொண்டுள்ளன. இந்தியாவுடனான உறவுகளை புதிய உச்சத்துக்கு இட்டுச் செல்வதில், அதிபர் புதின் மேற்கொண்டு வரும் முயற்சிகள் பாராட்டுக்குரியவை என்றார் மோடி.

செய்தியாளர்களிடம் அதிபர் புதின் கூறியதாவது: ரஷியாவின் முக்கிய கூட்டாளி நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தின் மதிப்பு கடந்த ஆண்டு 17 சதவீதம் அதிகரித்தது. இந்தியாவுக்கான எண்ணெய் விநியோக நாடுகளில் முக்கிய இடத்தை ரஷியா பெற்றுள்ளது. கடந்த ஆண்டு சுமார் 3.3 மில்லியன் டன் எண்ணெயை இந்தியாவுக்கு விநியோகித்துள்ளோம். தடையற்ற வர்த்தகத்துக்கான ஒப்பந்தத்தை எட்டுவதே, இரு நாடுகளுக்கும் பொதுவான இலக்காகும்.
அணுசக்தி துறையில் இந்தியா - ரஷியா இடையிலான ஒத்துழைப்புக்கான முக்கிய திட்டமாக கூடங்குளம் அணுமின் நிலையம் திகழ்கிறது. அங்கு ஏற்கெனவே இரண்டு அலகுகள் செயல்பாட்டில் உள்ளன. 3, 4-ஆவது அலகுகளுக்கான பணிகள் திட்டமிட்டபடி நடைபெற்று வருகின்றன என்றார் புதின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

திமிரும் தன்னடக்கமும்...!

வார இறுதி நாட்கள் - மெட்ரோ அறிவித்த சூப்பர் ஆஃபர்

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு 3 விதமான பணிநேரங்கள்: மக்கள் நல்வாழ்வுத் துறை

நாட்டு நடப்பு!

SCROLL FOR NEXT