உலகம்

மோடியிடம் ஹூஸ்டன் நகர சாவி ஒப்படைப்பு: கௌரவிப்பதில் இது அமெரிக்காவின் ஸ்டைல்!

"மோடி நலமா?' (ஹெளடி மோடி) நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஹூஸ்டன் நகருக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்த நகரின் சாவிகளை நகரின் மேயர் ஒப்படைத்தார்.

DIN

"மோடி நலமா?' (ஹெளடி மோடி) நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஹூஸ்டன் நகருக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்த நகரின் சாவிகளை நகரின் மேயர் ஒப்படைத்தார். இந்த நிகழ்ச்சியில் மோடியை வரவேற்ற பின், ஹூஸ்டன் நகர சாவிகளை மோடியிடம் மேயர் சில்வஸ்டர் டர்னர் வழங்கினார். 

அப்போது அவர் பேசுகையில் "அமெரிக்காவிலேயே மிகவும் பன்முகத்தன்மை வாய்ந்த நகரம் ஹூஸ்டன். இங்கு "நலமா?' என்ற வார்த்தையை நாம் 140 மொழிகளில் கூறுகிறோம்' என்று குறிப்பிட்டார். அமெரிக்காவில் சில குறிப்பிட்ட பிரபலங்களையும், தலைவர்களையும் கௌரவிக்க விரும்பும் நகரங்கள் தங்கள் நுழைவாயிலின் சாவியை அவர்களிடம் வழங்குவது என்ற மரபைப் பின்பற்றுவது வழக்கமாகும். 

"மோடி நலமா?' நிகழ்ச்சியில் 24 மாகாண ஆளுநர்களும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இந்தியா-அமெரிக்காவுக்கு எல்லைப் பாதுகாப்பு மிக முக்கியம்: டிரம்ப்
"மோடி நலமா' நிகழ்ச்சியில், அதிபர் டிரம்ப் இந்திய - அமெரிக்கர்கள் மத்தியில் சுமார் 25 நிமிடங்கள் உரையாற்றினார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்டு வரும் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் பெரிதும் பாராட்டத்தக்கவை என்று குறிப்பிட்ட அவர், இரு நாடுகளுக்கும் எல்லை பாதுகாப்பு மிக முக்கியமானது என்றார்.

டிரம்ப் மேலும் பேசியதாவது:
பிரதமர் மோடி சிறந்த மனிதர், சிறந்த தலைவர், எனது சிறந்த நண்பர். அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் (பிரதமர் மோடி கடந்த 17-ஆம் தேதி தனது 69-ஆவது பிறந்த நாளை கொண்டாடினார்). இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு மேற்கொண்டு வரும் பொருளாதார சீர்திருத்தங்கள் பெரிதும் பாராட்டத்தக்கவை. பிரதமர் மோடியின் மிகச் சிறந்த பணிகள் காரணமாகவே அவருக்கு மக்கள் பெருவாரியாக வாக்களித்துள்ளனர். 

இந்தியாவிலும், அமெரிக்காவிலும் முன்னெப்போதும் இல்லாத அளவில் இப்போது மக்களின் வாழ்வு வளமடைந்துள்ளது. அதிகாரத்துவத்தை கட்டுப்படுத்தியதே இதற்கு காரணம்.

அடிப்படைவாத இஸ்லாமிய பயங்கரவாத அச்சுறுத்தலில் இருந்து, அப்பாவி பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் என்பதில் இந்தியாவும், அமெரிக்காவும் உறுதியாக உள்ளன. நாட்டின் எல்லைகளை பாதுகாப்பது மிகவும் முக்கியம் என்பதை இருநாடுகளும் உணர்ந்துள்ளன (டிரம்ப் இவ்வாறு பேசியபோது மோடி உற்சாகத்துடன் கைதட்டி வரவேற்றார்). அமெரிக்காவைப் பொருத்தவரை, தென் எல்லையை பாதுகாப்பதில் முன்னெப்போதும் இல்லாத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாதுகாப்புத் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக, விரைவில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. இரு நாடுகளின் முப்படைகளும் பங்கேற்கும் "டைகர் டிரையம்ப்' கூட்டு பயிற்சி நவம்பரில் நடைபெறவிருக்கிறது என்றார் டிரம்ப்.

மேலும், தன்னைத் தவிர இந்தியாவுக்கு உண்மையான நண்பர் இருக்க முடியாது என்று குறிப்பிட்ட அவர், இந்திய - அமெரிக்கர்களின் பங்களிப்பையும் பாராட்டி பேசினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகளிா் தொழில்நுட்பக் கல்லூரியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

செண்டூரில் ஆடிப்பெருக்கு விழா: மயிலம் முருகனுக்கு தீா்த்தவாரி

கூட்டுறவும் நாட்டுயா்வும்!

மின்னணு பொருள்கள் விற்பனையகத்தில் தீ விபத்து

கோயில்களில் சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT