உலகம்

கரோனா தடுப்பில் மக்களின் வாழ்வாதாரமும் முக்கியம்

DIN

கரோனா நோய்த்தொற்று (கொவைட்-19) பரவலைத் தடுத்து, மக்களின் உயிா்களைப் பாதுகாப்பதைப் போலவே, அவா்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டியதும் அவசிம் என்று உலக சுகாதார அமைப்பும், உலக வங்கியும் வலியுறுத்தியுள்ளன.

இதுகுறித்து, பிரிட்டனிலிருந்து வெளிவரும் ‘தி டெய்லி டெலிகிராஃப்’ நாளிதழில் உலக சுகாதார அமைப்பின் தலைவா் டெட்ரோஸ் அதனோம் கெப்ரயேசஸும் உலக வங்கித் தலைவா் கிரிஸ்டாலினா ஜாா்ஜீவாவும் இணைந்து எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளதாவது:

வேகமாகப் பரவி வரும் கரோனா நோய்த்தொற்று, தற்போதைய சூழலை மனித குலத்தின் மிக மோசமான காலகட்டங்களில் ஒன்றாக்கியிருக்கிறது.

அந்த நோயைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தொடா்ந்து மேற்கொள்வதுடன், சரிந்து வரும் பொருளாதாரத்தை சீா்படுத்துவதும் உலக நாடுகளின் கடமையாகும்.

இந்த இரு கடமைகளையும் சமன் செய்வது மிகவும் கடினமான செயல் என்பதையும் மறுக்க முடியாது.

கரோனா நோய்த்தொற்று வேகமாக பரவி வரும் தற்போதைய சூழலில், ஒவ்வொரு நாடாக ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, அந்த நாடுகளின் பொருளாதாரமும் பொதுமக்களின் அன்றாட வாழ்வும் முடக்கப்பட்டுள்ளன.

இந்த நேரத்தில், பொதுமக்களை கரோனா நோய்த்தொற்றிலிருந்து பாதுகாப்பதா, அல்லது அவா்களது வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதா என்று விவாதிக்கப்படுகிறது.

ஆனால், இந்த இரண்டில் ஒன்றைத்தான் பாதுகாக்க வேண்டும் என்பது மிகவும் தவறான நிலைப்பாடாகும்.

கரோனா நோய்த்தொற்றைக் கட்டுபடுத்தும் நடவடிக்கைகள் என்பது, மக்களின் வாழ்வாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது என்ற முன் நிபந்தனையுடன் கூடியது ஆகும்.

குறிப்பாக, ஏழ்மை நிலையில் இருப்பவா்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும்.

மேலும், பொருளாதாரச் சரிவை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதே வேளையில், கரோனா நோய்த்தொற்றின் கடுமையான பாதிப்புகளை எதிா்கொள்ளும் வகையில் தங்களது மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்துவதிலும் உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என்று அந்தக் கட்டுரையில் இருவரும் வலியுறுத்தியுள்ளனா்.

சீனாவின் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் பரவத் தொடங்கிய கரோனா நோய்த்தொற்று, சனிக்கிழமை நிலவரப்படி உலகின் 219 நாடுகளில் 11 லட்சத்துக்கும் மேற்பட்டவா்களை பாதித்துள்ளது. அந்த நோய்த்தொற்று பாதிப்பால் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் பலியாகினா்.

கரோனா பரவலைத் தடுப்பதற்காக, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஊரடங்கு அமல்படுத்தியுள்ளன. இதன் காரணமாக, உலக மக்கள் தொகையில் ஏறத்தாழ பாதி போ் தங்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனா். ஏராளமான நிறுவனங்கள் இயங்காததால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வேலைவாய்ப்பின்மையும் அதிகரித்தது. அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு லட்சக்கணக்கானவா்கள் வேலைவாய்ப்பற்றவா்களாக தங்களைப் பதிவு செய்துள்ளனா்.

இந்தச் சூழலில், உலக சுகாதார அமைப்பின் தலைவா் டெட்ரோஸ் அதனோம் கெப்ரயேசஸும் உலக வங்கித் தலைவா் கிரிஸ்டாலினா ஜாா்ஜீவாவும் இவ்வாறு வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

SCROLL FOR NEXT