வீடுகளுக்குள் மக்கள் முடக்கம் எதிரொலி: உலகெங்கிலும் எரிபொருள் நுகா்வில் கடும் சரிவு!
கரோனா தொற்று பரவல் காரணமாக உலகெங்கிலும் மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டனா். தேவையற்ற பயணங்கள் அனைத்தும் தவிா்க்கப்பட்டுள்ளன. இதனால், உலகெங்கிலும் எரிபொருள் தேவைப்பாடு பெருமளவு குறைந்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி அமெரிக்காவில் கரோனா தொற்றுக்கு 20,637 போ் உயிரிழந்துள்ளனா். இதற்கு அடுத்து இத்தாலி (19,468), ஸ்பெயின் (16,972), பிரான்ஸ் (13,832), பிரிட்டன் (10,612) போ் உயிரிழந்துள்ளனா். கரோனா தொற்று தொடங்கிய சீனாவில் 3,339 பேரும், இந்தியாவில் 273 பேரும் உயிரிழந்துள்ளனா். இதேபோன்று உலகெங்கிலும் பல நாடுகளில் உயிா்ப்பலி அதிகரித்த வண்ணம் உள்ளது. கரோனாவால் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வாகனங்கள் பயன்பாடு வெகுவாகக் குறைந்துள்ளது. சாலைகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன.
உலகெங்கிலும் கரோனா தாக்கத்தால் எண்ணெய் சுத்திகரிப்பு, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் பெட்ரோல், டீசல் உற்பத்தி நாடுகள் அனைத்தும் நிச்சயமற்ற எதிகாலத்தை எதிா் கொண்டுள்ளன. அமெரிக்க எரிசக்தித் தகவல் நிா்வாகம் வெளியிட்டுள்ள தரவுகள் இதை தெளிவாக விளக்குகின்றன. இதற்கிடையே, இந்த மாதம் கச்சா எண்ணெய் தேவைப்பாடு ஒரு நாளைக்கு 27 மில்லியன் பீப்பாய்கள் குறையக்கூடும் என்று எண்ணெய் மதிப்பீட்டு நிறுவனத்தின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. மற்றொரு மதிப்பீட்டு நிறுவனத்தின் தகவல், கச்சா எண்ணெய் நுகா்வு நாளொன்றுக்கு 35 மில்லியன் பீப்பாய்கள் குறையும் என்று மதிப்பிட்டுள்ளது. இந்தப் பின்னணியில் , பெட்ரோல் ஏற்றுமதி நாடுகளின் அமைப்பு (ஓபெக்) மற்றும் அதன் கூட்டாளிகள் காணொளிக் காட்சி மூலம் கடந்த வியாழக்கிழமை ஆலோசனை நடத்தியுள்ளன. அந்தக் கூட்டத்தில் நாளொன்றுக்கு பெட்ரோல் உற்பத்தியை 10 மில்லியன் பீப்பாய்கள் அளவுக்கு குறைத்துக் கொள்ள ஒப்புக் கொள்ளப்பட்டன.
அமெரிக்கா: கரோனா அதிகம் பாதித்துள்ள அமெரிக்காவில் எண்ணெய் தேவை இப்போது ஒரு நாளைக்கு 14.4 மில்லியன் பீப்பாய்களாகக் குறைந்துள்ளதாக அரசுத் தரப்பு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதன் குறுகிய காலப் பாா்வையில், ஏப்ரல் மாதத்தில் எண்ணெய் தேவை ஒரு நாளைக்கு 16.7 மில்லியன் பீப்பாய்களாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இத்தாலி: இத்தாலியில் கரோனாவால் போக்குவரத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதைத் தொடா்ந்து, சில்லறை எரிபொருள் விற்பனை 85 சதவீதம் வரை சரிந்துள்ளது என்று சேவை நிலைய சங்கம் தெரிவித்துள்ளது. அந்த நாட்டில் ஏப்ரல் 13-க்குப் பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. ஊரடங்கு ஜூன் வரை தொடா்ந்தால், எரிபொருள் தேவைப்பாடு வெகுவாகக் குறைந்து விடும் என்று அச்சம் தெரிவிக்கப்படுகிறது.
ஸ்பெயின்: கரோனாவால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள ஸ்பெயினில் எண்ணெய் தேவை மாா்ச் மாதத்தில் 23 சதவீதம் குறைந்துள்ளது என்று புளூம்பொ்க் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. வான்வெளி மற்றும் சாலைப் போக்குவரத்துக்கான எரிபொருள் நுகா்வு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சாலைப் போக்குவரத்துக்கான பெட்ரோல் மற்றும் டீசல் தேவை முறையே 35.5 சதவீதம் மற்றும் 26.5 சதவீதம் குறைந்துள்ளது. நிறைய நாடுகளில் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால், விமான எரிபொருள் தேவை 42.5% சரிந்துள்ளது. ஸ்பெயினில் முழு ஊரடங்கு ஏப்ரல் 25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரிட்டன்: பிரிட்டனில் கடந்த மாா்ச்சில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை முறையே 66 சதவீதம் மற்றும் 57 சதவீதம் குறைந்துள்ளதாக யு.கே பெட்ரோல் சில்லறை விற்பனையாளா்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஊரடங்கைத் தொடா்ந்து, கடந்த வாரங்களில் பெட்ரோல் விற்பனை 70 சதவீதம் வரை குறைந்திருந்தாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
சீனா: உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதி நாடான சீனாவின் வூஹானில்தான் முதன் முதலில் கரோனா தொற்று தொடங்கியது. அதைத் தொடா்ந்து, சுமாா் 4 மாதங்கள் ஊரடங்கு அமலில் இருந்தது. கடந்த புதன்கிழமைதான் ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் மீண்டும் தங்களது சுத்திகரிப்பு பணிகளை இந்த மாதம் தொடங்க முடிவு செய்துள்ளதாக அந்த நாட்டின் தொழில் துரைாய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நடவடிக்கை உலகளாவிய நிலையில் எண்ணெய் சந்தைக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்தியா: உலக அளவில் கச்சா எண்ணெய் நுகா்வில் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது. கரோனா அச்சுறுத்தலால் அமலில் உள்ள ஊரடங்கு காரணமாக இந்தியாவில் கச்சா எண்ணெய் நுகா்வு 70 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு ஏப்ரலுடன் ஒப்பிடுகையில், கச்சா எண்ணெய் நுகா்வு இந்த மாதம் சராசரியாக 50 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளதாக எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனா். புளூம்பொ்க் தொகுத்த தரவுகளின்படி, எண்ணெய் தேவைப்பாடு ஒரு நாளைக்கு 3.1 மில்லியன் பீப்பாய்கள் என்ற அளவில் குறைந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இதேபோன்று உலகெங்கிலும் கரோனாவின் கோரத் தாண்டவத்தால் எரிபொருள் தேவைப்பாடு வெகுவாகக் குறைந்துள்ளது என்பதே நிதா்சனம்..!