முகப்பு
உலகம்

சீனாவில் 80% ஊரகப் பகுதியில் பாதுகாப்பான குடிநீர்

நீரின் மகத்துவத்தை சுட்டும் விதம் ‘நீரின்றி அமையாது உலகு’ என்று திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:11 PM
சீனாவில் 80% ஊரகப் பகுதியில் பாதுகாப்பான குடிநீர்
பகிர்:

நீரின் மகத்துவத்தை சுட்டும் விதம் ‘நீரின்றி அமையாது உலகு’ என்று திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ளார். புவியில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் நீர் மிக மிக அத்தியாவசியமானது. நீரின் அவசியத்தை உணர்ந்த பண்டை கால அரசர்கள் பல அணைகள் கட்டி நீரைத் தேக்கினர். சமகாலத்தில் மக்கள் தொகைப் பெருக்கம், வேளாண்மை உற்பத்தி அதிகரிப்பு, நகரப்புறங்களுக்கு மக்கள் குடிபெயர்வு, தொழிற்துறை பெருக்கம் என பல காரணங்களால் நீரின் தேவை அதிகரித்துக் கொண்டே செல்கிறது, ஆனால் நீர் வளம் குறைந்து கொண்டே வருகிறது. 

இந்நிலையில் மக்களுக்கு துய்மையான மற்றும் பாதுகாப்பான குடிநீர் விநியோகம் கிடைக்கச் செய்வது அரசுக்கு பெரும் அறைகூவலாக மாறியுள்ளது. நீர் மேலாண்மைத் திட்டங்கள் சீனாவில் திறம்பட மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நீர்நிலைகளுக்கு பாதிப்பின்றி மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டங்கள், புதுப்புது அணைகள் கட்டுமானம், நீர் மறுசுழற்சி, நீர் சேமிப்பு என பல வழிமுறைகளில் நீர் பாதுகாப்பை சீன அரசு உறுதி செய்து வருகின்றது. அரசின் இத்தகைய முயற்சிகளுக்கு நல்ல பலன்களும் கிடைத்துள்ளன. 

சீனாவின் நீர்வள அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, ஊரகப் பகுதிகளில் வாழும் 80 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் பாதுகாப்பான குடிநீரைப் பெற்று வருகின்றனர். நன்கு திட்டமிட்டு அமைக்கப்பட்ட நீர் விநியோக அமைப்புமுறையின் காரணமாக மிகவும் வறுமையான பகுதிகளில் வாழும் மக்களின் வீடுகளில் குடிநீர் குழாய் மூலம் நீர் வழங்கப்பட்டு வருகிறது என்று அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நீர்வளத்துறை துணை அமைச்சர் தியன் சியுபின் கூறுகையில், சின்ஜியாங் மற்றும் சிச்சுவான் பகுதிகளில் 25 ஆயிரம் கிராமவாசிகளுக்கு 2019ஆம் ஆண்டு வரை பாதுகாப்பான குடிநீரைப் பயன்படுத்த முடியாத நிலை இருந்து வந்தது. இந்தப் பிரச்னையைப் போக்க 1000 சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, நீர் விநியோகக் கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டு, விரிவான முறையில் இந்தப் பிரச்னை தீர்க்கப்பட்டு வருகிறது என்றார். சீனாவைப் போலவே அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் நீர் பற்றாக்குறை பிரச்னை கடுமையாக உருவெடுத்துள்ளது.

2018ஆம் ஆண்டு நிதி அயோக் வெளியிட்ட ஓர் அறிக்கையில் இந்தியாவின் 21 நகரங்களில் நிலத்தடி நீர் மிக மோசமான நிலைக்குச் செல்லும் என்று அபாய மணியை எழுப்பியிருந்தது. தவிரவும், நீர்நிலைகள் வறண்டு வருவது, தொழிற்சாலைகளின் கழிவுகள் நீர் நிலைகளில் கலப்பது, அதிக அளவு பயன்பாட்டால் நிலத்தடிநீர் குறைந்து வருவது போன்ற உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டிய பிரச்னைகள் அதிகம் உள்ளன. இச்சூழலில் சீனாவில், குறிப்பாக ஊரகப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் நீர் மேலாண்மைத் திட்டப் பணிகள் இந்தியாவுக்கு மட்டுமல்ல, மற்ற நாடுகளுக்கு நல்ல முன்னுதாரணமாக அமையக்கூடும்.

மலைப்பாங்கான இடங்களில் வாழும் மக்களின் வீடுகளுக்கு குடிநீர் குழாய் பொருத்தும் பணியில் சீன அரசு சிறப்பாக ஈடுபட்டு வருகின்றது. மேலும், குளிர்காலங்களிலும் பாதிப்பில்லாத நீர் விநியோகத்துக்காக உகந்த நீர் வளங்களைக் கண்டறியும் முயற்சியில் அரசு முனைப்புடன் பங்காற்றி வருகிறது. ஊரகப் பகுதியில் பாதுகாப்பான குடிநீர் விநியோகத்துக்காக குடிநீர் குழாய் பிணையங்கள் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட நீர் விநியோக முறைமை ஆகியவற்றை அரசு ஏற்படுத்தி வருகிறது. ஒரு வழிமுறை அனைத்து பிரச்னைகளுக்கும் பொருந்தாது என்பதால், மலைப்பகுதிகளில் ஆங்காங்கே சிதறி வாழும் மக்களுக்கு நீர் அளிக்கும் விதம் சிறு சிறு நீர் விநியோகத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று சீனாவின் நீர்நிலை மறுசீரமைப்புத் துறையின் இயக்குநர் லு ஷென்பெங் தெரிவித்துள்ளார். நீர்வளம் மற்றும் நீர் நிலைகளைக் காக்க அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான் உலக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.