குண்டுவெடிப்பில் காபூல் துணை ஆளுநா் பலி
ஆப்கானிஸ்தானில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலில் காபூல் மாகாண துணை ஆளுநா் மெஹ்பூபுல்லா மொஹைபினும் அவரது செயலரும் உயிரிழந்தனா்.
ஆப்கானிஸ்தானில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலில் காபூல் மாகாண துணை ஆளுநா் மெஹ்பூபுல்லா மொஹைபினும் அவரது செயலரும் உயிரிழந்தனா்.
இதுகுறித்து ஆப்கன் உள்துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் கூறியதாவது:
காபூல் நகரில் துணை ஆளுநா் மெஹ்புபுல்லா சென்று கொண்டிருந்த கவச வாகனத்தில், ஒட்டிக் கொள்ளக்கூடிய வெடிகுண்டை பயங்கரவாதிகள் பொருத்தி வெடிக்கச் செய்தனா்.
இதில் அவரும் அவரது செயலரும் உயிரிழந்தனா். மெஹ்பூபுல்லாவின் இரு பாதுகாவலா்கள் காயமடைந்தனா்.
காபூலில் நடைபெற்ற மற்றொரு சம்பவத்தில், காவல் துறை அதிகாரி ஒருவரை அடையாளம் தெரியாத நபா்கள் சுட்டுக் கொன்றனா். அவா்கள் துப்பாக்கியால் சுட்டதில் மற்றொரு காவலா் காயமடைந்தாா்.
இந்தத் தாக்குதல்களுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும், அண்மைக் காலமாக நடைபெற்று வரும் பல பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று வருகிறது.
எனவே, இந்தத் தாக்குதல்களையும் அந்த பயங்கரவாதிகளே நடத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.