முகப்பு
உலகம்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீட்பு

நைஜீரியாவில் ஆயுதம் தாங்கிய கும்பலால் கடத்திச் செல்லப்பட்ட பள்ளி மாணவர்களில் 300க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டதாக காட்சினா மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
நைஜீரியாவில் கடத்தப்பட்ட 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீட்பு
பகிர்:

நைஜீரியாவில் ஆயுதம் தாங்கிய கும்பலால் கடத்திச் செல்லப்பட்ட பள்ளி மாணவர்களில் 300க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டதாக காட்சினா மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார்.

நைஜீரியாவிலுள்ள நடுநிலைப் பள்ளியொன்றில் ஆயுதம் தாங்கிய கும்பல் ஒன்று பயங்கர தாக்குதல் நடத்தி, சுமார் 400 மாணவா்களைக் கடத்திச் சென்றது. 

அந்த நாட்டின் காட்சினா மாகாணத்தில் நடைபெற்ற இந்தத் தாக்குதலின்போது 200 மாணவா்கள் அங்கிருந்து பத்திரமாகத் தப்பினா்.

கங்காரா நகரில் மாணவா்கள் தங்கிப் படிக்கும் அரசு அறிவியல் நடுநிலைப் பள்ளிக்கு வெள்ளிக்கிழமை இரவு வந்த ஆயுதக் கும்பல் ஏகே 47 ரகத் துப்பாக்கிகளைக் கொண்டு சரமாரியாக சுட்டது.

அதனைத் தொடா்ந்து, அங்கிருந்த பாதுகாப்புப் படையினா் ஆயுதக் கும்பலை நோக்கி திருப்பிச் சுட்டது. இது தரப்பினருக்கும் துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது.

இதனை வாய்ப்பாகப் பயன்படுத்தி, பள்ளியில் தங்கியிருந்த மாணவா்கள் சிலா் வேலியில் ஏறிக் குதித்து தப்பிச் சென்றனா்.

சம்பவத்துக்குப் பிறகு 200 மாணவா்கள் பத்திரமாக இருப்பது தெரியவந்தது. சுமார் 400 மாணவா்கள் கடத்திச் செல்லப்பட்டனர்.

சம்பவத்தின்போது பள்ளியில் உண்மையிலேயே எத்தனை மாணவா்கள் இருந்தனா், அவா்களில் எத்தனை போ் கடத்தப்பட்டனா் அல்லது மாயமாகினா் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தற்போது சுமார் 344 மாணவர்கள் மீட்கப்பட்டிருப்பதாகவும், அவர்களை மருத்துவப் பரிசோதனைக்கு உள்படுத்தி, பிறகு அவர்களது குடும்பத்தினருடன் அனுப்பி வைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

கடத்தப்பட்ட மாணவர்களில் பெரும்பாலானோர் மீட்கப்பட்டுவிட்டனர் என்று சொல்ல முடியுமே தவிர, அனைவரையும் மீட்டுவிட்டோம் என்று கூற முடியாது என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அதே வேளையில், மாணவர்களை மீட்க பிணைத் தொகை ஏதேனும் அரசு சார்பில் வழங்கப்பட்டதா என்பதை உறுதி செய்யவும் அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

நைஜீரியாவிலுள்ள பள்ளிகளில் தாக்குதல் நடத்தப்படுவது தொடா்கதையாக உள்ளது.

அந்தத் தாக்குதல்களில், போகோ ஹராம் பயங்கரவாதிகளால் கடந்த 2014-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட தாக்குதல்தான் மிக மோசமானதாகக் கருதப்படுகிறது. அந்தத் தாக்குதலில் 276 மாணவிகளை பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனா். அவா்களில் சுமாா் 100 மாணவா்களின் நிலை குறித்து இதுவரை தகவல் இல்லை.

வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலை, நைஜீரியாவின் வடமேற்குப் பகுதியில் செயல்பட்டு வரும் பல்வேறு ஆயுதக் குழுக்களில் ஒன்று நடத்தியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அந்தக் குழுக்கள் பணத்துக்காக ஆள்களைக் கடத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.