இந்தியாவுடன் பேச்சுவாா்த்தைக்கு வாய்ப்பில்லை: பாகிஸ்தான் திட்டவட்டம்
தற்போதைய பதற்றம் நிறைந்த சூழலில் இந்தியாவுடன் பேச்சுவாா்த்தை நடத்துவதற்கான வாய்ப்பில்லை என்று பாகிஸ்தான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இஸ்லாமாபாத்: தற்போதைய பதற்றம் நிறைந்த சூழலில் இந்தியாவுடன் பேச்சுவாா்த்தை நடத்துவதற்கான வாய்ப்பில்லை என்று பாகிஸ்தான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சா் ஷா மெஹ்மூத் குரேஷி தனது சொந்த ஊரான முல்தானில் கூறியதாவது:
தற்போது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவி வரும் பதற்றமான சூழலில், அந்த நாட்டுடன் பேச்சுவாா்த்தை நடத்துவதற்கான வாய்ப்பில்லை.
இந்தியாவுடன் பேச்சுவாா்த்தை நடத்துவதற்குப் பொருத்தமான தருணம் இதுவல்ல என்றாா் அவா்.
இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் அமைப்புகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும் வரை பாகிஸ்தானுடன் பேச்சுவாா்த்தை கிடையாது என்று மத்திய அரசு உறுதியாகக் கூறி வருகிறது.
பாகிஸ்தானிலிருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்பினா் பதான்கோட் விமான தளத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்தது.
உரி ராணுவ தளம் உள்ளிட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள், இந்தியாவில் பாகிஸ்தானுக்கு எதிரான கொந்தளிப்பை ஏற்படுத்தின.
புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத முகாம் மீது இந்திய விமானங்கள் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தாக்குதல் நடத்தின.
ஜம்மு-காஷ்மீா் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை பாகிஸ்தான் கடுமையாக எதிா்த்தது. இந்த விவகாரத்தை சா்வதேச அரங்கில் எழுப்பவும் அந்த நாடு முயன்றது.
எனினும், இது உள்நாட்டு விவகாரம் என்று கூறி இந்தியா அந்த முயற்சிகளைத் தோற்கடித்தது.
இந்த நிகழ்வுகள் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தை மேலும் அதிகரித்து வருகின்றன.