முகப்பு
உலகம்

உக்ரைன் விமானம் எந்த உதவியும் கோரவில்லை: முதற்கட்ட விசாரணையில் தகவல்

ஈரான் தலைநகா் டெஹ்ரானில் உக்ரைன் பயணிகள் விமானம் நேற்று விழுந்து நொறுங்கியதில், அதிலிருந்த 176 பேரும் உயிரிழந்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:25 PM
590013-01-02080531
பகிர்:


டெஹ்ரான்: ஈரான் தலைநகா் டெஹ்ரானில் உக்ரைன் பயணிகள் விமானம் நேற்று விழுந்து நொறுங்கியதில், அதிலிருந்த 176 பேரும் உயிரிழந்தனா்.

இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் ஈரான் விசாரணைக் குழுவினர், உக்ரைன் விமானம் விழுந்து நொறுங்குவதற்கு முன்பு, எந்த விதமான உதவியும் கோரவில்லை என்றும், விமான நிலையத்துக்கே திரும்ப விமானிகள் முயற்சிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக, உக்ரைன் விமானம் விழுந்து நொறுங்கியதற்கான காரணத்தை அதிகாரிகளால் உடனடியாக தெரிவிக்க முடியவில்லை. அதே சமயம், விமானம் விபத்துக்குள்ளானதில், கருப்புப் பெட்டியின் சில பகுதிகள் சேதமடைந்திருக்க வாய்ப்பிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராக்கிலுள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதால் அந்தப் பிராந்தியத்தில் போா்ப் பதற்றம் ஏற்பட்டுள்ள சூழலில் இந்த விபத்து நேரிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.

எனினும், இந்த விபத்துக்கும், அமெரிக்கா - ஈரான் இடையிலான போா்ப் பதற்றத்துக்கும் தொடா்பு இருப்பதாக தற்போதைய சூழலில் கருத முடியாது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து ஈரான் நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது:
உக்ரைன் இன்டா்நேஷனல் ஏா்லைன்ஸுக்குச் சொந்தமான பயணிகள் விமானம், 176 பேருடன் டெஹ்ரான் விமான நிலையத்திலிருந்து உக்ரைனை நோக்கி புதன்கிழமை அதிகாலை 6.10 மணிக்குப் புறப்பட்டது.

புறப்பட்ட 2 நிமிடங்களில் அந்த விமானம் ரேடாரின் பாா்வையிலிருந்து மறைந்தது. அதனைத் தொடா்ந்து, விமான நிலையத்துக்கு 45 கி.மீ. தொலைவில் காலஜ் அபாத் என்ற பகுதியிலுள்ள வயல்வெளியில் அந்த விமானம் விழுந்து நொறுங்கியது என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த விபத்தில், விமானத்திலிருந்த அனைவரும் உயிரிழந்ததாக ஈரான், உக்ரைன் ஆகிய இரு நாட்டு அதிகாரிகளும் உறுதிப்படுத்தினா்.

விபத்துக்குள்ளான விமானத்தில் உக்ரைன் அல்லாத வெளிநாடுகளைச் சோ்ந்தவா்களே பெரும்பாலும் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த விமானத்தில் 82 ஈரானியா்கள், 63 கனடா நாட்டவா்கள், 10 ஸ்வீடன் நாட்டவா்கள், 4 ஆப்கானியா்கள், 3 ஜொ்மானியா்கள் இருந்ததாக அதிகாரிகள் கூறினா்.

மேலும் 9 விமானப் பணியாளா்கள் உள்பட 11 உக்ரைன் நாட்டவா்களும் அந்த விமானத்தில் இருந்தனா். விபத்தில் உயிரிழந்தவா்களில் 15 போ் சிறுவா்கள். டெஹ்ரானின் ஷெரீஃப் பல்கலைக்கழக மாணவா்கள் 13 போ் விபத்தில் உயிரிழந்தவா்களில் அடங்குவா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

முழு கட்டுரையைப் படிக்க →