நியூ யார்க்: அமெரிக்காவில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் தடுப்புக் குழுவின் முக்கிய உறுப்பினராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீமா வர்மாவை டிரம்ப் நிர்வாகம் நியமித்துள்ளது.
இது குறித்த அறிவிப்பு அமெரிக்காவின் துணை அதிபர் மைக் பென்ஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் கரோனா பாதிப்புக்கு சுமார் 3000 பேர் வரை உயிரிழந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மைக் பென்ஸ் தலைமையில் திங்கட்கிழமை மாலை நடைபெற்ற கூட்டத்தில், சீமா வர்மாவும் பங்கேற்று தனது புதிய பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார்.
அமெரிக்காவில் கரோனா வைரஸ் தொடர்பான அனைத்து விவகாரங்களையும் நேரடியாக கண்காணிக்கும் அதிகாரத்தை அதிபர் டொனால்ட் டிரம்ப், மைக் பென்ஸிடம் அளித்துள்ளார்.
பென்ஸின் நேரடி பார்வையில் கரோனா வைரஸ் தடுப்புக் குழு செயல்படும். இதில் பல முக்கிய அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவில் தற்போது புதிதாக இணைந்திருப்பவர் தான் சீமா வர்மா.
இவர் பொதுச் சுகாதாரத் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர். ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலையில் சுகாதாரக் கொள்கை மற்றும் மேலாண்மை படிப்பையும் முடித்தவர். அமெரிக்காவின் சுகாதாரத் துறையில் பல முக்கியப் பதவிகளையும் வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 83 ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. இதனையடுத்து உலக நாடுகள் அனைத்தும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றன.
இந்நிலையில் அமெரிக்காவில் கரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக இன்று வரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். 100 பேருக்கு கரேனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.