கரோனாவால் வீழ்த்த முடியாத மனிதநேயம்: மனதைத் தொடும் சீன உணவகங்கள்
கரோனா பாதித்த நிலையிலும், வீட்டை விட்டு வெளியே வந்து தங்களது சிறப்பான பணியை மேற்கொள்ளும் பல்வேறு துறை ஊழியர்களின் பங்களிப்பை மதிக்கும் வகையில் சீனாவில் உள்ள பல உணவகங்கள் சிறப்பானதொரு சேவையைத் தொடங்கிய
பெய்ஜிங்: கரோனா பாதித்த நிலையிலும், வீட்டை விட்டு வெளியே வந்து தங்களது சிறப்பான பணியை மேற்கொள்ளும் பல்வேறு துறை ஊழியர்களின் பங்களிப்பை மதிக்கும் வகையில் சீனாவில் உள்ள பல உணவகங்கள் சிறப்பானதொரு சேவையைத் தொடங்கியுள்ளன.
கரோனா வைரஸ் பரவும் அபாயம் இருந்த போதும், தங்கள் உயிரை துச்சமென மதித்து பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுக்காக சாலையோரம் குளிர்பதன இயந்திரம் வைத்து அதில் இலவசமாக குளிர்பானம், உணவு, சான்ட்விட்ச் போன்றவற்றை வைத்து உணவகங்கள் சத்தமில்லாமல் சேவையாற்றி வருகின்றன.
இந்த குளிர்பதன இயந்திரத்தில் வைக்கப்படும் உணவுகள் அனைத்தும் துப்புரவு பணியாளர்கள், கொரியர் பணியாளர்கள், காவல்துறை அதிகாரிகள் போன்றவர்களுக்காக இலவசமாக வைக்கப்படுகிறது. பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற குளிர்பதன இயந்திரத்தை அமைத்து, அருகில் உள்ள உணவகங்கள் சேவையாற்றி வருகின்றன.
Advertisement
கரோனா பாதிப்பு காரணமாக ஒரு மாதத்துக்கும் மேலாக, சீன மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால், அன்றாடத் தேவைகளை அளிக்கும் பணியாளர்களுக்கு பணிச்சுமை அதிகரித்தது. நகரை சுத்தமாக வைக்கும் பணியில் துப்புரவுப் பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட்டனர்.
அவர்களது பணியை கௌரவிக்கும் வகையில் எங்களால் இயன்ற உதவியை அவர்களுக்குச் செய்யவே இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் ஒருமித்தக் குரலில் கூறுகிறார்கள்.
இந்த குளிர்பதன இயந்திரங்களில் அருகில் இருக்கும் பொதுமக்களும் தங்களால் இயன்றதை வாங்கி வந்து வைத்துச் செல்கின்றனர். எங்களுக்காக பணியாற்றியவர்களுக்கு எங்களால் இயன்ற கைமாறு என்கிறார்கள் கண்ணீரோடு.