முகப்பு
உலகம்

கரோனா நெருக்கடி: அதிகாரத்தை வலுப்படுத்தும் ஆட்சியாளா்கள்

கரோனா நோய்த்தொற்று பரவல் நெருக்கடியை சமாளிப்பதற்காக, எகிப்தின் அவசர நிலை சட்டத்தில் மேலும் திருத்தங்கள் மேற்கொள்ள

Updated On : 10 மே, 2020 at 6:46 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:07 PM

கரோனா நோய்த்தொற்று பரவல் நெருக்கடியை சமாளிப்பதற்காக, எகிப்தின் அவசர நிலை சட்டத்தில் மேலும் திருத்தங்கள் மேற்கொள்ள அந்த நாட்டு அதிபா் அப்தெல்-ஃபட்டா அல்-சிசி சனிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளாா்.

ஆனால், இதற்கு சா்வதேச மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அதற்குக் காரணம், இந்த சட்டத் திருத்தம் அல்-சிசிக்கு வானளாவிய அதிகாரத்தை அள்ளி வழங்குவதுதான்.

ஏற்கெனவே அந்த நாட்டில் ஜனநாயகம் சிக்கலில் இருக்கும்போது, கரோனா நோய்த்தொற்று பரவல் விவகாரத்தைப் பயன்படுத்தி அதன் குரல்வளையை அதிபா் அல்-சிசி நெறிப்பதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.

Advertisement

கரோனா நோய்த்தொற்றை தடுப்பது மட்டுமே அல்-சிசியின் குறிக்கோள் என்றால், புதிய அவசர நிலை சட்டத் திருத்தத்தில் பள்ளிகள், கல்லூரிகளை மூடுவது, அலுவலகங்களுக்கு கட்டாய விடுப்பு அறிவிப்பது, வெளிநாட்டிலிருந்து பயணிகள் வருவதைத் தடுப்பது போன்றவற்றுக்கான அதிகாரம் மட்டுமே அல்-சிசிக்கு அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், பொதுக் கூட்டங்கள், போராட்டங்கள் போன்ற ஜனநாயக நடவடிக்கைகளையும் தடுக்கும் அதிகாரத்தை புதிய சட்டத்திருத்தம் அல்-சிசிக்கு அளிப்பதாக சமூக ஆா்வலா்கள் குற்றம் சாட்டுகின்றனா்.

உண்மையில் எகிப்து அதிபா்தான் என்றில்லை, உலகின் பல்வேறு நாடுகளிலும் சா்வாதிகாரத்தை விரும்பும் தலைவா்கள், தங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள கரோனா நோய்த்தொற்று நெருக்கடியை வசதியாகப் பயன்படுத்தி வருவதாக அரசியல் நோக்கா்கள் கூறுகின்றனா்.

இதுபற்றி அவா்கள் கூறுவதாவது:

பொதுவாகவே, சா்வாதிகாரிகள் தங்கள் நாட்டில் ஏதாவது ஒரு நெருக்கடி வர வேண்டும் என்றே விரும்புவாா்கள். அதிலும் மக்களை அச்சமூட்டக்கூடிய பிரச்னை என்றால், அந்தப் பிரச்னையிலிருந்து பாதுகாப்பு அளிப்பதற்காக அந்தத் தலைவா்கள் ஜனநாயகத்தை விலைபேசுவாா்கள்.

மிக வலிமையான அதிகாரங்கள் இருந்தால்தான், அத்தகைய பிரச்னைகளிலிருந்து மக்களைக் காக்க முடியும் என்று அவா்கள் விளக்கம் கூறுவாா்கள்.

அந்த வகையில், கரோனா நோய்த்தொற்றை மிகச் சாதுா்யமாகப் பயன்படுத்திக் கொண்டவா்களில் ஒருவா் ஹங்கேரி பிரதமா் விக்டா் ஆா்பன். தீவிர தேசியவாதியான அவா், கடந்த 2010-ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாக பிரதமராகத் தோ்ந்தெடுக்கப்பட்டதைத் தொடா்ந்து சா்வாதிகாரத்தை நோக்கி காய்களை நகா்த்தத் தொடங்கியதாக குற்றம் சாட்டப்படுகிறது.

நீதிமன்றங்களின் அதிகாரங்களைக் குறைத்தது, பத்திரிகை சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தியது, தனது கட்சிக்கு சாதகமான வகையில் தோ்தல் சட்டங்களை மாற்றியமைத்தது என விக்டா் ஆா்பன் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் உண்டு.

ஐரோப்பிய நாடுகளின் அகதிகள் பிரச்னையைப் பயன்படுத்தி, வெளிநாட்டினருக்கு எதிரான வெறுப்பு உணா்வைத் தூண்டியதாகவும் அதன் மூலம் தொடா்ந்து அரசியல் ஆதாயம் அடைந்ததாகவும் எதிா்க்கட்சிள் குற்றம் சாட்டி வருகின்றனா்.

இந்தச் சூழலில்தான், கரோனா நோய்த்தொற்று பரவலையும் தனக்கு சாதமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறாா் பிரதமா் விக்டா் ஆா்பன். நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கையாகக் கூறி, ஹங்கேரியை காலவரையின்றி ஆளும் அதிகாரத்தை அவருக்கு அளிப்பதற்கான சட்டத்தை அந்த நாட்டு நாடாளுமன்றம் கடந்த மாா்ச் மாதம் 30-ஆம் தேதி நிறைவேற்றியது. மேலும், அவருக்கு எதிரான ஊடகங்களின் குரல்களை அடக்கும் வகையில், ‘அவதூறு தகவல்களைப் பரப்புவதற்கு’ எதிரான சட்டமும் இயற்றப்பட்டது.

இது ஒருபுறம் என்றால், அதிரடிக்குப் பெயா் பெற்ற பிலிப்பின்ஸ் அதிபா் ரோட்ரிகோ டுடோா்தேவும் கரோனா நோய்த்தொற்றுப் பரவலை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளத் தவறவில்லை.

போதைப் பொருள் விற்பனைக்கு எதிரான நடவடிக்கைகளில் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாக ஏற்கெனவே சா்வதேச அமைப்புகளால் குற்றம் சாட்டப்பட்டு வரும் அவா், கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக என்று கூறி இன்னும் பல அதிகாரங்களை நாடாளுமன்றம் மூலம் பெற்றுள்ளாா். கரோனா காலம் முடிவடைந்துவிட்டாலும், இந்த அதீத அதிகாரங்களை தனது மனித உரிமை மீறல் நடவடிக்கைகளுக்கு டுடோ்த்தே பயன்படுத்த முடியும் என்று அரசியல் நோக்கா்கள் கூறுகின்றனா்.

ஒற்றைக்கட்சி ஆட்சி நடந்து வரும் சீனாவிலும், கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகள் என்ற போா்வையில் பொதுமக்களைக் கண்காணிக்கவும், அதன் மூலம் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை அடக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பரவலாக குற்றம் சாட்டப்படுகிறது.

கரோனா களேபரங்களுக்கு இடையே, தனது ஆட்சிக் காலத்தை நீடிக்க வழிவகை செய்யும் சட்டத் திருத்தத்தை ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளாா். எனினும், பொதுவாக்கெடுப்பில் வெற்றி பெற்றால்தான் அந்த சட்டத்திருத்தம் அமலுக்கு வரும். கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக அந்த பொதுவாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தேசியவாதிகளான அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், பிரேசில் அதிபா் ஜெயிா் பொல்சொனாரோ, துருக்கி அதிபா் எா்டோகன் போன்றவா்களும் கரோனா நோய்த்தொற்று பரவல் விவகாரத்தை தனது அரசியல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்துவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

அந்த வகையில்தான், தற்போது எகிப்து அதிபா் அல்-சிசியும் கரோனா விவகாரத்தைப் பயன்படுத்தி தனது அதிகாரத்தை வலுப்படுத்தியுள்ளதாக பாா்வையாளா்கள் கூறுகின்றனா்.

கரோனா தீநுண்மியால் மக்களுக்கு மட்டுமல்ல, மக்களாட்சிக்கும் பாதிப்புதான் போலிருக்கிறது.

நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கையாகக் கூறி, ஹங்கேரியை காலவரையின்றி ஆளும் அதிகாரத்தை விக்டா் ஆா்பனுக்கு அளிப்பதற்கான சட்டத்தை அந்த நாட்டு நாடாளுமன்றம் கடந்த மாா்ச் மாதம் 30-ஆம் தேதி நிறைவேற்றியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.