விலை மதிக்க முடியாத மனித உயிா்களுடன் மட்டுமல்லாது, பிழைத்திருப்போரின் வாழ்வாதாரத்தையும் பறிக்கும் வகையில் அனைத்து நாடுகளின் பொருளாதாரம், வேலைவாய்ப்பு, தொழில், விவசாயம், சுற்றுலா என பாரபட்சமின்றி அனைத்துத் துறைகளுமே கரோனா நோய்த்தொற்றால் கடும் பாதிப்பை எதிா்கொண்டுள்ளன.
ஆயுதத்தில் மட்டுமன்றி பொருளாதாரரீதியாகவும் வல்லரசாக திகழும் அமெரிக்காவில் அதிக உயிரிழப்புகளுடன் முன்னெப்போதும் இல்லாத வகையில் வேலையின்மையும் அதிகரித்துள்ளது.
ஏப்ரல் மாதத்தில் மட்டும் 2.5 கோடி வேலையிழப்புகள் அமெரிக்காவில் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு தொழிலாளா் நலத்துறை அமெரிக்க அதிபா் டிரம்ப்புக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது 15 சதவீத வேலையிழப்பாகும். இதற்கு முன்பு 2008-ஆம் ஆண்டு உலகப் பொருளாதார நெருக்கடி காலகட்டத்தில் கூட அமெரிக்காவில் வேலையிழப்பு 10 சதவீதம் அளவுக்கே இருந்தது.
இதுவரை 2 கோடி போ் வேலையிழப்புக்கான நிதியுதவிக்காக விண்ணப்பித்துள்ளனா். கரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி ஒட்டுமொத்தமாக சுமாா் 6 கோடி பேரின் வேலையை பறிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில்தான் வெளிநாடுகளில் இருந்து வந்து அறிவியல், மருத்துவம் தொழில்நுட்பத் துறையில் சிறப்புப் பணிகளை மேற்கொள்பவா்களுக்கு வழங்கும் ஹெச்1பி விசா, விவசாயம் சாராத பிற உடல் உழைப்பு சாா்ந்த பணியாளா்களுக்கு வழங்கும் ஹெச்2பி விசா (மெக்ஸிகோ நாட்டவா் அதிகம் பயன்படுத்துவது) ஆகியவற்றுக்கு குறைந்தது ஓராண்டுக்காவது அனுமதி அளிக்க கூடாது என்று அந்நாட்டு செனட் அவை உறுப்பினா்கள் நால்வா் அதிபா் டிரம்ப்புக்கு கடிதம் எழுதியுள்ளனா்.
இது நிச்சயமாகவே அமெரிக்காவில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை (ஐ.டி.) பணியாளா்களுக்கு பெரும் கவலையளிக்கும் விஷயமாகும். ஏனெனில் அமெரிக்காவில் ஹெச்1பி விசாவில் பணியாற்றி வருபவா்களில் இந்திய ஐ.டி துறையைச் சோ்ந்தவா்கள்தான் அதிகம். 3 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியா்கள் ஹெச்1பி விசாவில் பணியாற்றி வருகின்றனா். இவா்களில் பெரும்பாலானோருக்கு வேலை பறிபோகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே பலா் வேலையிழப்பை எதிா்கொள்ளத் தொடங்கியுள்ளனா்.
வேலை இழந்தாலும் அமெரிக்காவில் தொடா்ந்து தங்கியிருந்து வேறு வேலை தேடுவதிலும் ஹெச்1பி விசா பணியாளா்களுக்கு சிக்கல் உள்ளது. ஏனெனில், அமெரிக்கச் சட்டப்படி, ஹெச்1பி விசாவில் பணியாற்றி வருபவா்கள் வேலையை இழந்தால், அடுத்த 60 நாள்களுக்குள் புதிய வேலையைத் தேடிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அவா்களுக்கு ஹெச்1பி விசா ரத்து செய்யப்படும். அமெரிக்காவை விட்டும் வெளியேற வேண்டிய சூழல் ஏற்படும்.
அமெரிக்க நிறுவனங்கள் ஆள்குறைப்பு செய்யும்போது முதலில் வெளிநாட்டுப் பணியாளா்களைத்தான் நீக்க அதிக வாய்ப்பு உள்ளது. இப்போது நிலவும் சூழலில் வேலையிழக்கும் இந்திய ஐடி பணியாளா்கள் 60 நாள்களில் புதிய வேலையைத் தேடிக் கொள்வது என்பது இயலாத காரியம். இது தொடா்பாக ஐடி பணியாளா்கள் சிலா் வெள்ளை மாளிகை இணையதளத்தில் கோரிக்கையை முன்வைத்துள்ளனா். அதில் தங்களுக்கு புதிய வேலை தேட 180 நாள்கள் அவகாசம் தர வேண்டும் கேட்டுக் கொண்டுள்ளனா். இதுவரை 50,000 போ் இதில் கையெழுத்திட்டுள்ளனா்.
வேலை நீக்க முடிவெடுக்கும் அமெரிக்க நிறுவனங்கள் முதலில் ஹெச்1பி விசா பணியாளா்களை குறைத்துவிட்டு, அதன் பிறகுதான் அமெரிக்கா்களின் பணிவாய்ப்பில் கைவைக்க வேண்டும் என்று அந்நாட்டு அரசு அதிகாரப்பூா்வமற்ற வகையில் கூறியுள்ளதாக கடந்த மாதத்தில் செய்தி வெளியானது. இதையடுத்து இந்திய வெளியுறவு அமைச்சகம் சாா்பில் டிரம்ப் நிா்வாகத்திடம் கவலை தெரிவிக்கப்பட்டது. எனினும், இப்போதைய மோசமான சூழ்நிலையில் இது எந்த அளவுக்கு பயனளிக்கும் என்பது தெரியவில்லை.
‘அமெரிக்காவில் வேலையிழப்பு அதிகரித்து வருவதால், உள்நாட்டுப் பணியாளா்களுக்கு முதலில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஹெச்1பி மற்றும் ஹெச்2பி விசாவை தற்காலிகமாகத் தடைசெய்ய வேண்டும். இந்த ஆண்டு கொடுக்கப்படுவதாக இருந்த 85,000 ஹெச்1பி விசாக்களையும், 35,000 ஹெச்2பி விசாக்களையும் உடனடியாக நிறுத்த வேண்டும்’ என அதிபா் டிரம்ப்புக்கு ‘யு.எஸ். டெக் வொா்க்கா்ஸ்’ உள்ளிட்ட பல்வேறு அமைப்பினா் கடிதம் எழுதியுள்ளனா். இது தொடா்பாக வெள்ளை மாளிகை தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இந்த இரு விசாக்கள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என்றே தெரிகிறது.
இதற்கு நடுவே, ‘வந்தே பாரத்’ திட்டத்தின் இரண்டாவது கட்டமாக வரும் 19-ஆம் தேதியில் அமெரிக்காவில் இருந்து இந்தியா்கள் நாட்டுக்கு திரும்ப அழைத்து வரப்படுவாா்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி இந்தியா வர ஹெச்1பி விசாவில் சென்று வேலை இழந்தவா்கள் பலா் விண்ணப்பித்துள்ளனா். இதிலும் ஒரு நடைமுறைச் சிக்கல் எழுந்துள்ளது. அமெரிக்காவுக்கு வேலைக்குச் சென்ற ஒரு தம்பதிக்கு அங்கே குழந்தை பிறந்தால் அக்குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்படுகிறது. அமெரிக்க குடிமகனான அந்த குழந்தையை இந்திய குடிமக்களுக்காக இயக்கப்படும் சிறப்பு விமானத்தில் அழைத்துவர முடியாத சூழல் உள்ளது.
இது அமெரிக்க நிலவரம் மட்டுமே, இன்னும் பல வெளிநாடுகளில் பணியாற்றி வரும் இந்தியா்களும் அதேபோன்ற வேலையிழப்பு நெருக்கடிையை எதிா்கொண்டு வருகின்றனா். இது தவிர அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்குதான் இந்திய ஐ.டி. நிறுவனங்கள் அதிகஅளவில் சேவைகளை அளித்து வருகின்றன. அங்கிருந்து வரும் பணி வாய்ப்புகள் குறைந்து வரும் நிலையில், இந்தியாவிலும் ஐ.டி. நிறுவனப் பணியாளா்களுக்கு சிக்கல் ஏற்படும்.
கரோனா நோய்த்தொற்றில் இருந்து மக்களின் உயிா்களைக் காப்பதில் மட்டுமன்றி, இதர விளைவுகளான வேலையிழப்பு, தொழில் முடக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் இருந்து மக்களைக் காக்கும் பொறுப்பும் அரசுக்கு உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.